பிரதமர் அலுவலகம்

விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமரின் உரை

Posted On: 24 DEC 2020 2:06PM by PIB Chennai

மேற்கு வங்காள ஆளுநர் திரு.சங்கர் அவர்களே! மத்திய கல்வி அமைச்சர் டாக்டர்.ரமேஷ் போக்ரியால்நிஷாங்க்’ அவர்களே! துணைவேந்தர் பேராசிரியர் பித்யுத் சக்கரவர்த்தி அவர்களே, பேராசிரியர்களே, மாணவர்களே, முன்னாள் மாணவர்களே, சகோதர, சகோதரிகளே! விஸ்வபாரதி நூறாவது ஆண்டு விழா ஒவ்வொரு இந்தியனுக்கும் மிகவும் பெருமை வாய்ந்தது.

நண்பர்களே!

விஸ்வ பாரதியின் நூறாண்டு பயணம் மிகவும் சிறப்புமிக்கது. குருதேவ் அவர்களின் கொள்கைகள், தொலைநோக்குப் பார்வை, அன்னை இந்தியாவிற்காக அவர் வழங்கிய கடின உழைப்பின் உண்மையான எடுத்துக்காட்டாக விஸ்வபாரதி விளங்குகிறது. தலைசிறந்த இசைக் கலைஞர்கள் - பாடலாசிரியர்கள், எழுத்தாளர்கள் - கலைஞர்கள், பொருளியலாளர்கள், விஞ்ஞானிகள் நிதி வல்லுநர்கள் போன்றவர்களை வழங்கிய விஸ்வபாரதி புதிய இந்தியாவை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றது. சூரிய ஒளிக் கூட்டமைப்பின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலக அளவில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. பாரீஸ் ஒப்பந்தத்தின் இலக்கை அடையும் பாதையில் சென்று கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியா மட்டுமே மிகப்பெரிய நாடாக உள்ளது.

நண்பர்களே!

சுதந்திரப் போராட்டத்தை பற்றி நாம் பேசும் போது பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டு காலகட்டம் தான் நமக்கு நினைவுக்கு வரும். எனினும் இந்த இயக்கங்களுக்கான அடித்தளம் அதற்குப் பல காலங்கள் முன்பே அமைக்கப்பட்டது. இந்தியாவின் போராட்டத்துக்கான ஆற்றல், பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த இயக்கங்களில் இருந்து கிடைத்தது. இந்தியாவின் ஆன்மீக, கலாச்சார ஒற்றுமையை பக்தி இயக்கம் வலுவடையச் செய்தது. பக்தி யுகத்தில் முனிவர்கள், மகான்கள், ஆச்சாரியர்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும், திசைகளிலும் மக்களின் உணர்வைத் தட்டி எழுப்பச் செய்தனர். பலவிதமான போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டிருந்த  இந்தியாவில் பக்தி இயக்கம் ஒன்றிணைந்த உணர்வு நிலையையும், தன்னம்பிக்கையையும் பல நூறாண்டுகள் நீடிக்கச் செய்தது.

நண்பர்களே!

பக்தி இயக்கம் பற்றி நாம் பேசும் போது திரு.ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றிக் குறிப்பிடாமல் அது முழுமை பெறாது. இந்தத் தலைசிறந்த மகானால் தான் நமக்கு சுவாமி விவேகானந்தர் கிடைத்தார். சுவாமி விவேகானந்தரிடம் பக்தி, அறிவாற்றல் மற்றும் செயல்திறன் அனைத்தும் ஒன்றாகக் கலந்திருந்தன.

நண்பர்களே!

பல நூறு ஆண்டுகள் நீடித்த பக்தி இயக்கத்தைத் தவிர, கர்ம இயக்கமும் நிகழ்ந்தது. காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய மக்கள் பல நூற்றாண்டுகள் போராடினர். சத்ரபதி சிவாஜி மகாராஜ், மஹாராணா பிரதாப், ஜான்சி ராணி லட்சுமிபாய், ராணி பாய், கிட்டூரின் ராணி சென்னம்மா என ஏராளமானோர் தங்களது உழைப்பாலும் தியாகத்தாலும் சாமானிய மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடினர். பின்னர் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்திற்கு இது ஊக்க சக்தியாகத் திகழ்ந்தது.

நண்பர்களே!

பக்தியும், ஈடுபாடும் விரைந்து செயல்பட்ட போது மூன்றாவதாக அறிவு நதியும் விடுதலை இயக்கத்தில் சங்கமித்தது. அறிவு சார்ந்த கொள்கை இயக்கத்தின் வாயிலாக சுதந்திரப் போராட்டத்தை வெல்வதும், அதே வேளையில் ஒளிமயமான எதிர்காலத்திற்குப் புதிய சந்ததியினரைத் தயார்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாக இருந்தது. விஸ்வபாரதி பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரி, ஆந்திரா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என ஏராளமான  கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் முக்கியமான பங்காற்றின. இந்தப் பல்கலைக்கழகங்களிலிருந்து புதிய அறிஞர்கள் தோன்றினார்கள். இந்திய சுதந்திரத்திற்கான கொள்கை சார்ந்த இயக்கத்திற்கு கல்வி நிறுவனங்கள் புதிய ஆற்றலையும், புதிய திசையையும், புதிய உயரத்தையும் வழங்கின. பக்தி இயக்கத்தால் நாம் ஒன்றுபட்டு இருந்த போது அறிவு சார்ந்த இயக்கம் நமக்கு அறிவுசார் பலத்தையும் கர்ம இயக்கம் நமது உரிமைக்காக நாம் போராடும் தைரியத்தையும் நமக்கு வழங்கின. பல நூற்றாண்டுகளாக நீடித்த ஏராளமான இயக்கங்கள் தியாகம், தவம் மற்றும்  உறுதிக்கு தனித்துவமான உதாரணங்களாக விளங்கின. இந்த இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் தங்களது உயிரைத் தியாகம் செய்ய முன்வந்தனர். இந்த இயக்கங்களால் கவரப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

நண்பர்களே!

குருதேவ் அவர்களால் நிறுவப்பட்ட விஸ்வபாரதி பல்கலைக்கழகம், அறிவுசார் இயக்கத்திற்குக் கூடுதல் ஊக்கத்தை அளித்தது. இந்திய கலாச்சாரத்துடனும், பாரம்பரியத்துடன் இணைக்கும் வகையில் விஸ்வபாரதியை வடிவமைத்ததன் மூலம் தேசிய வாதத்திற்கு அவர் வலுவான அடையாளத்தை வழங்கினார். அதே வேளையில் உலக சகோதரத்துவத்துக்கு சமமான முக்கியத்துவத்தை அவர் அளித்தார்.

நண்பர்களே!

இந்தியாவிலுள்ள தலை சிறந்தவற்றால் உலகம் பயனடைய வேண்டும், உலகிலுள்ள நன்மைகளை இந்தியா கற்க வேண்டும் என்பதே குருதேவின் தொலைநோக்குப் பார்வை. உங்கள் பல்கலைக்கழகத்தின் பெயரையும் பாருங்கள் விஸ்வ - பாரதி. பாரதத் தாயையும், உலகையும் ஒருங்கிணைத்துள்ளது. விஸ்வபாரதி குறித்த குருதேவின் தொலைநோக்குப் பார்வை தான் தற்சார்பு இந்தியாவின் சாராம்சமும். தற்சார்பு இந்தியா பிரச்சாரம் உலக அளவில் இந்திய நன்மைக்கான வழித்தடமாகும். இந்தியாவுக்கு அதிகாரம் அளிப்பதும், இந்தியாவின் வளமையை உலகிற்கு அளிப்பதும் இதன் நோக்கம். வலுவான மற்றும் தற்சார்பு இந்தியா, உலக சமூகத்திற்கு எப்போதும் பயன் அளித்துள்ளது என்பதற்கு வரலாறு ஓர் எடுத்துக்காட்டு

நண்பர்களே!

இந்தியாவின் உயிர்நாடி இந்தியாவின் தற்சார்பு மற்றும் இந்தியாவின் சுயமரியாதை ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. இந்தியாவின் சுயமரியாதையைப் பாதுகாப்பதற்காக வங்காளத்தின் பல தலைமுறையினர் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்துள்ளனர். வரலாற்றில் பதிவு செய்ய முடியாத அளவிலான மக்கள் பாடுபட்டுள்ளனர். அவர்களை உதாரணமாகக் கொண்டு அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு நாம் உழைக்க வேண்டும்.

நண்பர்களே!

வலுவான, தற்சார்பு இந்தியாவிற்காக நீங்கள் அளிக்கும் பங்களிப்பு இந்த உலகையே சிறந்த இடமாக மாற்றும். இன்னும் 27 ஆண்டுகளில் இந்தியா 100 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறது. புதிய இலக்குகளை, புதிய ஆற்றலை, புதிய வழித்தடத்தில் நமது பயணத்தை நாம் தொடங்க வேண்டும். இந்தப் பயணத்தில் குருதேவ் அவர்களின் கொள்கைகளை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். இந்தப் பெருந்தொற்று உள்ளூர் பொருள்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துரைத்துள்ளது. பவுஸ் நிலா என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்கு, பெருந்தொற்றின் காரணமாக கலைஞர்களால் வர இயலவில்லை. சுயமரியாதை மற்றும் தற்சார்பு குறித்து நாம் பேசுகையில் உங்களிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். தயவுசெய்து என்னுடன் இணைந்து உதவுங்கள். பவுச் விழாவிற்கு வரும் கலைஞர்களைத் தொடர்புகொண்டு அவர்களது கைவினைப் பொருள்களை எவ்வாறு இணையதளம் வாயிலாக சந்தைப்படுத்தலாம் என்பதை அறியுமாறு விஸ்வபாரதி மாணவர்களை நான் வலியுறுத்துகிறேன். மேலும் எதிர்காலத்தில் தங்கள் பொருள்களை உலகச் சந்தையில் எவ்வாறு விற்பனை செய்வது என்பது குறித்து உள்ளூர் கலைஞர்களுக்குக் கற்றுத் தரப்பட வேண்டும். அவர்களுக்கு வழியைக் காட்டுங்கள். இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் தான்  நாடு நன்னிலை அடைய முடியும், குருதேவின் கனவையும் நனவாக்க முடியும்.

நண்பர்களே!

குருதேவ் அவர்கள் விஸ்வபாரதியை கல்வி மையமாக மட்டும் அமைக்கவில்லை. கல்வி பயிலும் இடமாகவும், கற்பதற்கான புனிதத் தலமாகவும் அவர் அதைக் கருதினார். இன்று தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் நாடு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. இந்த கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில்  விஸ்வபாரதியும் முக்கியமான பங்கு வகிக்கிறது. உங்களுக்கு 100 ஆண்டுகால அனுபவமும் குருதேவின் ஆசீர்வாதங்களும் இருக்கின்றன. எனவே பிற கல்வி நிறுவனங்களுடன் நீங்கள் அதிக அளவில் விவாதம் நடத்தினால் இந்தக் கொள்கைகள் குறித்து அந்த நிறுவனங்களுக்குக் கூடுதல் புரிதல் ஏற்படும்.

நண்பர்களே!

நீங்கள் எங்கு சென்றாலும், எந்தத் துறையில் ஈடுபட்டாலும், புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக நீங்கள் உழைக்க வேண்டும். நாட்டில் ஏராளமான வாய்ப்புகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நன்றி.

------

 



(Release ID: 1683915) Visitor Counter : 252