பிரதமர் அலுவலகம்
அசோசேம் அமைப்பின் நிறுவன வாரம் 2020-இல் பிரதமரின் சிறப்புரை
Posted On:
19 DEC 2020 1:45PM by PIB Chennai
நமஸ்கார் !
அசோசேம் அமைப்பின் தலைவர் திரு.நிரஞ்சன் ஹிராநந்தானி அவர்களே! நாட்டின் தொழில் உலகிற்கு உந்துசக்தியாகத் திகழும் திரு.ரத்தன் டாடா அவர்களே; நாட்டின் தொழில்துறை முன்னோடி நண்பர்களே தாய்மார்களே, சகோதரிகளே !
कुर्वन्नेह कर्माणि जिजी-विषेत् शतं समा:! அதாவது நீங்கள் நூறாண்டு காலம் வாழ விரும்பினால்,, உங்களது கர்மாவைப் பின்பற்றுங்கள் என்று இங்கு, கூறினார்கள். அசோசேம் அமைப்பிற்கு இது முற்றிலும் பொருந்தும். கடந்த 100 ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரத்தையும், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்த, நீங்கள் அனைவரும் கடுமையாகப் பாடுபட்டிருக்கிறீர்கள். திரு.ரத்தன் டாடா மற்றும் ஒட்டுமொத்த டாடா குழுமத்திற்கும் இது பொருந்தும். இந்தியாவின் வளர்ச்சிக்காக, திரு.ரத்தன் டாடா, மற்றும் டாடா குடும்பத்தினர் அல்லது டாடா குழுமத்தின் பங்களிப்பிற்காக, ரத்தன் டாடா இன்று இங்கு கௌரவிக்கப்பட்டுள்ளார். நாட்டின் வளர்ச்சியில் டாடா குழுமம் பெரும் பங்கு வகித்துள்ளது.
நண்பர்களே,
கடந்த 100 ஆண்டுகளில், இந்தியாவின் விடுதலைப் போராட்டம் முதல், நாட்டின் வளர்ச்சிப்பணிகள் வரையிலான அனைத்து ஏற்றத் தாழ்வுகளிலும் நீங்கள் பங்கு வகித்திருக்கிறீர்கள். அசோசேம் அமைப்பு தொடங்கப்பட்ட முதல் 27 ஆண்டுகள், காலனி ஆதிக்கத்திலேயே போய்விட்டது. அந்தக் காலகட்டத்தில், சுதந்திரம் தான் தலையாயக் குறிக்கோளாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில், உங்களது கனவுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. தற்போது, இனிவரும் 27 ஆண்டுகள், அசோசேம் அமைப்பின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானவை ஆகும். இன்னும் 27 ஆண்டுகள் கழித்து, 2047-ஆம் ஆண்டில், நாடு தனது சுதந்திர தின நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது. அனைத்து வகையான கட்டுப்பாடுகளிலிருந்தும் நீங்கள் விடுதலை பெற்றிருக்கிறீர்கள்; நீங்கள் வானம் வரை தொடுவதற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருப்பதால், அதனை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது, சுயசார்பு இந்தியாவை அடைய, வரும் ஆண்டுகளில் நீங்கள் உங்களது முழு வலிமையையும் பயன்படுத்தலாம். இன்று, நான்காவது தொழில் புரட்சியை நோக்கி, உலகம் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. புதிய தொழில்நுட்ப உருவில் தோன்றும் சவால்களுக்கு, பல்வேறு புதிய தீர்வுகளும், எளிய தீர்வுகளும் காணப்பட வேண்டியிருக்கும். எனவே, நாம் முறையாகத் திட்டமிட்டு செயல்படுவதற்கு இன்றைய தினம் சரியான தருணம் ஆகும். ஆண்டுதோறும் நாம் ஒன்றிணைவதோடு, ஒவ்வொரு இலட்சியமும், தேச நிர்மாணத்திற்கான பெரிய இலட்சியமாக இருக்க வேண்டும்.
நண்பர்களே,
அடுத்து வரவுள்ள 27 ஆண்டுகள், இந்தியாவின் உலகளாவிய பங்களிப்பைத் தீர்மானிப்பதோடு மட்டுமின்றி, இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வையும் சோதிக்கக்கூடிய காலகட்டம் ஆகும். இந்தக் காலகட்டத்தில், இந்தியத் தொழில்துறை, உங்களது திறமை, உறுதிப்பாடு மற்றும் துணிச்சல் போன்றவற்றை,, உலகம் முழுவதற்கும் மிகுந்த நம்பிக்கையுடன் வெளிப்படுத்த வேண்டும். நாம் எதிர்நோக்கும் சவால்கள் என்பவை, சுயசார்போடு நின்றுவிடாமல், இந்த இலக்கை விரைவாக அடைவதற்கு நாம் எவ்வாறு பாடுபடப் போகிறோம் என்பதும் முக்கியம் ஆகும்.
நண்பர்களே,
உலகம் முழுவதும் இந்தியாவின் வெற்றிகள் மீது, இதுவரை இல்லாத அளவிற்கு ஆக்கப்பூர்வமான கருத்து நிலவுகிறது. இந்த ஆக்கப்பூர்வமான எண்ணம் உருவாவதற்குக் காரணம், 130 கோடி இந்திய மக்கள் மீது, இதுவரை இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள நம்பிக்கை தான். தற்போது இந்தியா, புதிய சக்தியுடன், முன்னோக்கிச் செல்வதற்கான புதிய பாதைகளை ஆராய்ந்து வருகிறது.
நண்பர்களே,
இதற்கு முந்தைய அமர்வுகளில், அமைச்சர்களும், மற்ற சகாக்களும், அரசின் கொள்கைகள் மற்றும் உத்திகள் குறித்தும், ஒவ்வொரு துறையிலும் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், உங்கள் அனைவரிடமும் விரிவாக விவாதித்திருப்பார்கள். முன்பு, ஏராளமான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளின் கட்டமைப்பாக இருந்ததுடன், அதிகார வர்க்கத்தின் ஆதிக்கமும் மிகுந்து காணப்பட்டது. ஆனால், தற்போது தொழில்துறையினருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. முன்பு, ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக் கலாச்சாரம் என்பது குறைவாகவே காணப்பட்டது. ஆனால், தற்போது ஏராளமான புதிய தொழில்கள் தொடங்கப்படுகின்றன. முன்பு, அனைத்து நடவடிக்கைகளிலும் அரசின் தலையீடு அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது தனியார் பங்களிப்பு மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்படுவதுடன், மின்னணு கட்டமைப்புகளும் பெருமளவு உருவாக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே,
தற்போது இந்தியா, தனது சுயவலிமையையும், வளங்களையும் சார்ந்துள்ளதால், சுயசார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்த இலக்கை அடைய, உற்பத்தித்துறை மீது சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம். உற்பத்தியை ஊக்குவிக்க சீர்திருத்தங்களை அயராது மேற்கொண்டு வருகிறோம். சீர்திருத்தங்கள் தவிர, கௌரவிப்புகளும், நாட்டின் முக்கியமான கொள்கையாக உள்ளது. முதன் முறையாக, 10-க்கும் மேற்பட்ட துறைகள்,, சிக்கனம் மற்றும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, குறுகிய காலத்திற்குள்ளாகவே ஆக்கப்பூர்வ விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேம்பட்டப் போக்குவரத்து இணைப்பு வசதிகள், பிற வசதிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான வசதிகளும், தொழில்துறைக்கு அளிக்கப்படும் பரிசாகும். இலட்சக்கணக்கான குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தங்களது குறிக்கோள் அல்லது வரம்புகளை மாற்றிக் கொள்வதாக இருந்தாலும் சரி, அரசு ஒப்பந்தங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக இருந்தாலும், கடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக இருந்தாலும், அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கிறது.
நண்பர்களே,
தற்போது இந்த நாடு, இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும், தொழில் நிறுவனங்கள் மற்றும் சொத்து உருவாக்குவோருக்கு உறுதுணையாக இருக்கிறது. புதிய தொழில் தொடங்குதல் மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில், இந்திய இளைஞர்கள் இன்று, உலக அரங்கில் தடம் பதித்து வருகிறார்கள். திறமையான மற்றும் நட்புரீதியான சூழலை உருவாக்க, அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதன் பலன்கள், கடைக்கோடி வரை சென்றடைவதை, அசோசேம் போன்ற அமைப்புகள் மற்றும் அதன் உறுப்பினர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உறுதி செய்ய வேண்டும். இதற்கு, தொழில்துறையிலும் சீர்திருத்தங்களை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
நண்பர்களே,
அடுத்ததாக, முதலீடுகள் பற்றியும் நாம் விவாதிக்க வேண்டும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கான முதலீடு பற்றி விவாதிக்கப்பட வேண்டும். இந்தியாவில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. அமெரிக்காவைப் போன்ற நாடுகளில், ஆராய்ச்சிப் பணிகளுக்கான முதலீட்டில், 70 சதவீதம் தனியார் துறையினரால் தான் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இந்தியாவிலோ, இந்த அளவு முதலீட்டை அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தான் மேற்கொண்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்பம், மருந்துத் தயாரிப்பு மற்றும் போக்குவரத்துத் துறையிலும், அதே அளவு முதலீடு செய்யப்படுகிறது. எனவே, ஆராய்ச்சிப் பணிகளில் தனியார் முதலீட்டை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு சிறு தொழில், பெருந்தொழில் நிறுவனமும், குறிப்பிட்ட தொகையை, விவசாயம், பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி, மற்றும் கட்டுமானம் உட்பட அனைத்துத் துறைகளின் ஆராய்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்க வேண்டும்.
நண்பர்களே,
சுயசார்பு இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் உறுதிபூண்டு, அதற்கான பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அசோசேம் அமைப்பிலுள்ள எனது அருமை நண்பர்கள் மற்றும் உங்கள் அனைவருக்கும் வரும் ஆண்டுகள் சிறப்பாக அமைய எனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு.ரத்தன் டாடா அவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள். அசோசேம் அமைப்பு புதிய உச்சத்தை அடைய வாழ்த்துகிறேன். நாட்டின் சுதந்திர தின நூற்றாண்டு கொண்டாடப்பட உள்ள 2047-ஆம் ஆண்டுக்குள், நமது இலக்குகளை அடைய, அடுத்து வரும் 27 ஆண்டுகளில் பாடுபடுவதற்கு உறுதியேற்க, உங்களது நூற்றாண்டு விழா உதவும் என நான் நம்புகிறேன்.
மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
நன்றி!
*****
(Release ID: 1683278)
Visitor Counter : 160
Read this release in:
Assamese
,
Odia
,
Bengali
,
Manipuri
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam