பிரதமர் அலுவலகம்

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்


குறைந்தபட்ச ஆதரவு விலை, ஒப்பந்த விவசாயம் குறித்த கவலைகளுக்கு பதிலளித்த அவர், பொய்ப் பிரச்சாரம் குறித்து எச்சரிக்கை விடுத்தார்

Posted On: 18 DEC 2020 5:26PM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். குளிர்பதன உள்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகளுக்கான அடிக்கல்லை அவர் நாட்டினார்.

மாநாட்டில் பேசிய பிரதமர், விவசாயிகள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும், பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை முறையாக சேமித்து வைக்கும் வசதி இல்லை என்றால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றார். நவீன சேமிப்பு வசதிகள், குளிர்பதன வசதிகள் மற்றும் புதிய உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் ஆகியவற்றுக்குப் பங்களிக்குமாறு தொழில்துறையை அவர் கேட்டுக்கொண்டார். இது  விவசாயிகளுக்கும், நாட்டுக்கும் பயனளிக்கும் என்றார்.

 

வளர்ந்த நாடுகளில் உள்ள விவசாயிகளுக்குக் கிடைக்கும் வசதிகள் இந்திய விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இதை இனிமேலும் தாமதப்படுத்த முடியாது. வேகமாக மாறிவரும் உலகத்தில், இந்திய விவசாயிக்கு வசதிகளும், நவீன முறைகளும் கிடைக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அவர், இதுவே மிகவும் தாமதம் என்றார்.

வேளாண் சட்டங்கள் குறித்த சமீபத்திய விவாதங்களை குறித்துப் பேசிய அவர், விவசாய சீர்திருத்தச் சட்டங்கள் குறித்த ஆலோசனைகள் கடந்த இருபது வருடங்களுக்கும் மேல் நடைபெற்று வருவதாகவும், இவை ஏதோ ஒரே இரவில் கொண்டு வரப்படவில்லை எனவும் கூறினார். நாட்டின் விவசாயிகள், விவசாய அமைப்புகள், வேளாண் நிபுணர்கள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் முற்போக்கு விவசாயிகள் ஆகியோர் விவசாயத்துறையின் வளர்ச்சிக்காக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததாக அவர் கூறினார். கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இந்தச் சீர்திருத்தங்கள் குறித்து இடம் பெற்றிருந்தாலும் அவை சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றார் அவர். ஏற்கனவே விவாதிக்கப்பட்ட சீர்திருத்தங்களும் தற்போது செய்யப்பட்டுள்ளவையும் வெவ்வேறானவை அல்ல என்று பிரதமர் கூறினார்.

எட்டு வருடங்களுக்கும் மேலாக சுவாமிநாதன் குழுவின் அறிக்கையை முந்தைய அரசுகள் செயல்படுத்தவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார். விவசாயிகளின் போராட்டம் கூட இவர்களின் மனசாட்சியை உலுக்கவில்லை. விவசாயிகளுக்காக அரசு அதிகம் செலவு செய்யத் தேவையில்லை என்பதை இவர்கள் உறுதி செய்தனர். எதிர்க்கட்சிகள் விவசாயிகளை வைத்து அரசியல் செய்யும் அதே நேரம், தமது அரசு விவசாயிகளுக்காக தன்னை அர்ப்பணித்து உள்ளதாகவும், விவசாயிகளை உணவளிப்பவர்களாகக் கருதுவதாகவும் பிரதமர் கூறினார். சுவாமிநாதன் குழுவின் அறிக்கை இந்த அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும்விவசாயிகள் செய்த செலவை விட ஒன்றரை மடங்கு அதிகம் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

கடன் தள்ளுபடி குறித்துப் பேசிய பிரதமர், வங்கிக்குச் செல்லாத, கடனை வாங்காத சிறு விவசாயியை இது சென்றடைவதில்லை என்றார். பிரதமரின் விவசாயி திட்டத்தின் கீழ், சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு, அந்தப் பணம் ஒவ்வொரு விவசாயிக்கும் சென்றடைவதாக அவர் கூறினார். வேப்பம் பூச்சின் காரணமாக யூரியா உரம் தாராளமாகக் கிடைப்பதாகவும், ஊழல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

முந்தைய அரசுகள் விவசாயிகளின் மீது உண்மையாகவே அக்கறை கொண்டு செயல்பட்டு இருந்தால், சுமார் 100 பெரிய பாசனத் திட்டங்கள் பல தசாப்தங்களாக கிடப்பில் கிடந்திருக்காது என்றார். தற்போது இந்தத் திட்டங்களை துரித கதியில் செயல்படுத்த, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை நமது அரசு செலவழித்துக் கொண்டிருக்கிறது. தேனீ வளர்ப்பு, விலங்குகள் நலம் மற்றும் மீன்வளம் ஆகியவற்றையும் விவசாயத்துக்கு இணையாக அரசு ஊக்குவித்துக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

மீன்வளத் துறையை ஊக்குவிப்பதற்காக நீலப்புரட்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். பிரதமர் மத்சய சம்பட யோஜனா என்னும் திட்டமும் சில காலத்துக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த முயற்சிகளின் காரணமாக, மீன் உற்பத்தியில் இதற்கு முன் செய்யப்பட்ட அனைத்து சாதனைகளும் முன் எடுக்கப்பட்டுள்ளன.

 

அரசால் சமீபத்தில் செய்யப்பட்டுள்ள வேளாண் சீர்திருத்தங்களை சந்தேகப்படுவதற்கான எந்த காரணமும் இல்லை என்றும், அவற்றில் எந்தப் பொய்களும் இல்லை என்றும் அவர் கூறினார். குறைந்தபட்ச ஆதரவு விலை அமைப்பை நீக்குவது அரசின் நோக்கம் என்றால், சுவாமிநாதன் குழுவின் அறிக்கையை அரசு ஏன் செயல்படுத்த வேண்டும் என்று சிந்திக்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

விவசாயிகளின் நலன் கருதி, விதைப்பதற்கு முன்பே குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படுவதாக பிரதமர் கூறினார். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரின் போதும், குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் தொடர்ந்து நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார். குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு அதிகரித்ததோடு, குறைந்தபட்ச ஆதரவு விலையில் அதிக கொள்முதல்களையும் செய்ததாக அவர் கூறினார்.

நாடு ஒரு காலத்தில் பருப்புப் பஞ்சத்தைச் சந்தித்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். நாட்டில் பற்றாக்குறை நிலவியதைத் தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து பருப்புகள் வாங்கப்பட்டன. தமது அரசு 2014-இல் கொள்கையை மாற்றியது என்றும், 2014-க்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் வெறும் 1.5 இலட்சம் மெட்ரிக் டன்  பருப்புகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், 112 இலட்சம் மெட்ரிக் டன் பருப்புகளை விவசாயிகளிடமிருந்து  குறைந்தபட்ச ஆதரவு விலையில் தமது அரசு வாங்கியதாகவும் அவர் கூறினார். இன்றைக்கு பருப்பு விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. விலைகள் குறைந்துள்ளன, ஏழைகள் பயனடைந்துள்ளனர்.

 

மண்டியில் அல்லது மண்டிக்கு வெளியில், தமக்கு எங்கு இலாபம் அதிகம் கிடைக்கிறதோ அங்கு, தமது விளைபொருள்களை விவசாயி விற்கலாம் என்ற சுதந்திரத்தை புதிய சட்டம் வழங்கியுள்ளதாக பிரதமர் கூறினார். புதிய சட்டத்திற்குப் பிறகு ஒரே ஒரு மண்டி கூட மூடப்படவில்லை. வேளாண் பொருள்கள் சந்தைப்படுத்துதல் குழுக்களை நவீனப்படுத்த ரூபாய் 500 கோடிக்கும் அதிகமாக தமது அரசு செலவழித்து வருகிறது என்று பிரதமர் கூறினார்.

விவசாய ஒப்பந்தத்தைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் பலவருடங்களாக நாட்டில் அது நடைமுறையில் இருப்பதாகக் கூறினார். வேளாண் ஒப்பந்தத்தில், பயிர்கள் அல்லது விளைபொருள்கள் மட்டுமே பரிவர்த்தனை செய்யப்படும் என்றும், விவசாயியிடமே நிலம் இருக்கும் என்றும் அவர் கூறினார். நிலத்தின் உரிமைக்கும், ஒப்பந்தத்திற்கும் தொடர்பில்லை. இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால் கூட முழுப் பணமும் விவசாயிக்குக் கிடைக்கும். புதிய சட்டத்தின் மூலம் எண்ணற்ற இலாபங்கள் விவசாயிகளுக்குக் கிடைக்கும்.

இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் விவசாயிகளுக்கு சந்தேகங்கள் இருந்தால் அவற்றை அறிவதற்கு பிரதமர் உறுதியளித்தார். ஒவ்வொரு விஷயத்தைக் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக அவர் கூறினார். மதிப்பிற்குரிய அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 25 அன்று இது குறித்து தாம் மீண்டும் பேசவிருப்பதாக பிரதமர் கூறினார். அன்று பிரதமர் விவசாயிகள் சம்மான் நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.

**********************



(Release ID: 1681790) Visitor Counter : 270