பிரதமர் அலுவலகம்

நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்


புதிய நாடாளுமன்றம் நாட்டின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்: பிரதமர்

ஜனநாயகம் நமது கலாச்சாரம் : பிரதமர்

புதிய நாடாளுமன்றம் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான உதாரணமாகத் திகழ்கிறது : பிரதமர்

நாட்டு நலனை தலையாயதாக பாதுகாக்க உறுதியேற்க வலியுறுத்தல்

Posted On: 10 DEC 2020 4:00PM by PIB Chennai

நாடாளுமன்ற புதிய கட்டிடத்திற்கு, பிரதமர் திரு.நரேந்திரமோடி, இன்று அடிக்கல் நாட்டினார்.   இந்த புதிய கட்டடம், ‘தற்சார்பு இந்தியா‘  குறிந்த தொலைநோக்குப் பார்வையின் உள்ளார்ந்த அம்சமாகவும்,  சுதந்திரத்திற்குப் பிறகு மக்களின் நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கான வரலாற்றுச்சிறப்புமிக்க வாய்ப்பாகவும் அமைவதுடன், நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடவுள்ள 2022-ம் ஆண்டில், ‘புதிய இந்தியா‘-வின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாகவும் அமையும்.  

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,   இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இன்றைய தினம் குறிப்பிடத்தகுந்த நாள் என்றும், இந்தியத் தன்மை நிறைந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.  இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்கு புதிய கட்டிட கட்டுமானப் பணி தொடங்கியிருப்பது நமது ஜனநாயகப் பாரம்பரியத்தில், மிக முக்கியமான காலகட்டம் என்றும் அவர் குறிப்பிட்டார்.   நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை, இந்திய மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கட்டுவோம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.   இந்தியா, தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில்,  நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதைவிட, மென்மேலும் அழகு சேர்க்கக் கூடிய அல்லது மேலும் பரிசுத்தமான வேறு செயல் ஏதும் இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.  

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக, முதன்முதலில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த தருணத்தையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.   முதன்முறையாக, தாம் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது,  தமது காலடியை எடுத்து வைப்பதற்கு முன்பாக, தலைவணங்கி இந்த ஜனநாயகக் கோவிலில், தமது மரியாதையை செலுத்தியதாகக் கூறினார்.  நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் திறனை அதிகரிப்பது மற்றும் அவர்களது பணிக் கலாச்சாரத்தை நவீனப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள், நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.    தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடம், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவிற்கு வழிகாட்டியாக அமைந்தது போல, புதிய கட்டிடம், ‘சுயசார்பு இந்தியா‘-விற்கு அடையாளமாகத் திகழும் என்றும் அவர் தெரிவித்தார்.   பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில்,  நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டதுபோல, 21-ம் நூற்றாண்டுக்கான இந்தியாவின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாக புதிய கட்டிடம் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

ஜனநாயகம் என்றால், அனைத்து இடங்களிலும், தேர்தல் நடைமுறைகள், ஆளுகை மற்றும் நிர்வாகத்தைத் தான் குறிப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.  ஆனால், இந்தியாவில் ஜனநாயகம் என்பது, வாழ்வியல் நற்பண்புகள், வாழ்க்கைக்கான வழி மற்றும் தேசத்தின் ஆன்மாவாகத் திகழ்கிறது.  இந்திய ஜனநாயகம், பல நூற்றாண்டு கால அனுபவத்தின் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.   இந்தியாவில், ஜனநாயகம் என்பது வாழ்க்கையின் ஒரு அம்சமாக மட்டுமின்றி, ஒழுங்கு நடைமுறையாகவும், வாழ்க்கை மந்திரமாகவும் பின்பற்றப்படுகிறது.   இந்தியாவின் ஜனநாயக வலிமை என்பது, நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதுடன், நாட்டு மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.   இந்திய ஜனநாயகம், தொடர்ந்து ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வருவதுடன்,  ஒவ்வொரு தேர்தலிலும், வாக்காளர்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது என்றும் அவர் கூறினார்.  

இந்திய ஜனநாயகம், எப்போதுமே, ஆளுகையுடன், கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துவைக்கும் வழிமுறையாக இருந்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.   மாறுபட்ட கருத்துக்கள்,  மாறுபட்ட சிந்தனைகள் தான் வலிமையான ஜனநாயகத்திற்கு அதிகாரமளிப்பதாக அமையும்.   நடைமுறைகளிலிருந்து முழுமையாக விடுபடாதவரை, மாறுபட்ட கருத்துக்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன், இந்திய ஜனநாயகம் முன்னோக்கிச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.   கொள்கைகளும், அரசியலும் மாறுபட்டாலும்,  நாம் அனைவரும் மக்களுக்கு சேவையாற்றத் தான் வந்திருக்கிறோம் என்ற குறிக்கோளில், எவ்விதக் கருத்து வேறுபாட்டிற்கும் வாய்ப்பளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.   நாடாளுமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ விவாதங்கள் நடைபெற்றாலும், அதில்,  தேச சேவைக்கான உறுதிப்பாடும், தேச நலன் சார்ந்த அர்ப்பணிப்பும், தொடர்ந்து பிரதிபலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  

நாடாளுமன்றம் தொடர்ந்து செயல்படுவதற்கு ஜனநாயகம் அடிப்படை என்பதில்,  சந்தர்ப்பவாதங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது தங்களின் கடமை என்பதை மக்கள் நினைவுகூற வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.   நாடாளுமன்றத்திற்குள் நுழையும் ஒவ்வொரு உறுப்பினரும்,  பொதுமக்களுக்கும், அரசியல் சாசனத்திற்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளவர்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.   ஜனநாயகக் கோவிலை புனிதப்படுத்த இதைவிட வேறு எந்த சடங்கும் இல்லை என்றும் அவர் கூறினார்.   மக்களின் பிரதிநிதிகளாக இந்த ஆலயத்திற்குள் உறுப்பினர்கள் நுழைவதே, அதனை புனிதப்படுத்தும்.   அவர்களது அர்ப்பணிப்பு, அவர்களது சேவை, செயல்பாடு, சிந்தனை மற்றும் பழக்க வழக்கங்கள், இந்த ஆலயத்தின் உயிர்மூச்சாகத் திகழும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.   இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அவர்களது முயற்சிகள், இந்த ஆலயத்திற்கு உயிரளிக்கும் சக்தியாக மாறும்.   மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும், தத்தமது அறிவாற்றல், திறமை, கல்வி மற்றும் அனுபவத்தை முழுமையாக வழங்கினாலே, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் புனிதமடையும் என்றும் அவர் தெரிவித்தார்.  

நாட்டு மக்கள் அனைவரும், இந்தியாவை முதன்மையான நாடாகத் திகழச் செய்வதற்கு உறுதியேற்பதுடன்,  இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பற்றி மட்டுமே பிராத்தனை செய்வதோடு, ஒவ்வொரு முடிவும் நாட்டின் வலிமையை அதிகரிப்பதுடன், நாட்டின் நலனே தலையாயது என்ற உணர்வோடு இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.   நாட்டு நலனைவிட, தங்களுக்கு வேறு எதுவும் பெரிதல்ல என்று, நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.   சுய நலனைவிட, நாட்டு நலன் பற்றிய சிந்தனையே மேலானது என்ற உணர்வு ஏற்பட வேண்டும்.  நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைவிட, வேறு எதுவும் முக்கியமானதாக இருக்கக் கூடாது.   கண்ணியம் மற்றும் நாட்டின் அரசியல் சாசன அம்சங்களை நிறைவேற்றுவது தான், வாழ்க்கையின் மிகப்பெரிய இலட்சியமாக இருக்க வேண்டும். 

*******

 

 

 



(Release ID: 1679724) Visitor Counter : 351