பிரதமர் அலுவலகம்
3 மையங்களில் கொவிட் தடுப்பு மருந்தின் தயாரிப்பை பிரதமர் ஆய்வு செய்தார்
Posted On:
28 NOV 2020 7:17PM by PIB Chennai
கொவிட் தடுப்பு மருந்து மேம்பாடு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய 3 நகரங்களுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொண்டார். அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில்நுட்ப பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக், புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா ஆகியவற்றுக்கு அவர் சென்றார்.
தடுப்பு மருந்து தயாரிப்பு பயணத்தின் முக்கியமான கட்டத்தில் தங்களுக்கு உற்சாகம் அளிக்கவும், தங்களின் முயற்சிகளை வேகப்படுத்தவும் பிரதமர் நேரில் வந்து சந்தித்ததற்கு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தியாவின் உள்நாட்டு தடுப்பு மருந்து தயாரிப்பு துரித கதியில் வளர்ந்து வருவது பெருமையளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். தடுப்பு மருந்து உற்பத்தியின் மொத்த பயணத்தில் அறிவியலின் வலுவான கோட்பாடுகளை இந்தியா எவ்வாறு பின்பற்றியது என்பது குறித்து பிரதமர் பேசினார். தடுப்பு மருந்து விநியோகத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த ஆலோசனைகளையும் அவர் வரவேற்றார்.
தடுப்பு மருந்து உடல் நலத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தும் நன்மை பயக்க வேண்டுமென்று இந்தியா விரும்புவதாக பிரதமர் கூறினார். வைரசுக்கு எதிரான ஒருங்கிணைந்த போரில், நமது அண்டை நாடுகள் உட்பட இதர நாடுகளுக்கு உதவுவது இந்தியாவின் கடமையென்றும் அவர் கூறினார்.
ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எவ்வாறு மேலும் மேம்படுத்தலாம் என்பது குறித்த தங்களது கருத்துகளை விஞ்ஞானிகள் வெளிப்படையாக தெரிவிக்கலாம் என்று பிரதமர் கூறினார். கொவிட்-19-ஐ எதிர்த்து போராட பல்வேறு புதிய மற்றும் மறுபயன்பாட்டு மருந்துகளை எவ்வாறு அவர்கள் தயாரித்து வருகின்றனர் என்பதை குறித்து விஞ்ஞானிகள் விளக்கினர்.
அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில்நுட்ப பூங்காவுக்கு சென்ற பிரதமர், "ஜைடஸ் கேடில்லா நிறுவனத்தால் மரபணுவை மையமாகக்கொண்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தடுப்பூசியை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காக அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில்நுட்பப் பூங்காவிற்கு நேரில் சென்றேன். இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் குழுவிற்கு எனது பாராட்டுகள். அவர்களின் இந்தப் பயணத்தில் அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள இந்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது," என்றார்.
ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மையத்தை பார்வையிட்ட பின்னர், "ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மையத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கொவிட்-19 தடுப்பு மருந்து குறித்து விளக்கினார்கள். இதுவரையிலான அவர்களது பரிசோதனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்காக விஞ்ஞானிகளை பாராட்டினேன். தடுப்பு மருந்தை துரிதமாக உருவாக்குவதற்காக இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவுடன் இவர்கள் இணைந்து பணியாற்று கிறார்கள்," என்றார்.
புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியாவை பார்வையிட்ட பிரதமர், "சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியாவின் குழுவினருடன் நல்லதொரு உரையாடலை நடத்தினேன். தடுப்பு மருந்து தயாரிப்பில் இதுவரையிலான முன்னேற்றம் குறித்தும், உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம் குறித்தும் அவர்கள் விளக்கினார்கள். அவர்களது தயாரிப்பு மையத்தையும் பார்வையிட்டேன்," என்றார்.
***
(Release ID: 1676855)
Visitor Counter : 297
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam