பிரதமர் அலுவலகம்
15-வது ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாடு
Posted On:
22 NOV 2020 11:26PM by PIB Chennai
- பிரதமர் திரு.நரேந்திர மோடி, சவூதி அரேபியா நவம்பர் 21-22 தேதிகளில் மெய்நிகர் வடிவில் கூட்டிய 15-வது ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். ஜி-20 உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டம், உள்ளடக்கிய, நிலைத்த, விரிதிறன் கொண்ட எதிர்காலம் குறித்ததாகவும், அதன் துணை நிகழ்ச்சி, புவிக் கோளத்தை பாதுகாத்தல் என்பது பற்றியும் அமைந்திருந்தது.
- பிரதமர் தமது உரையில், கோவிட் பெருந்தொற்றுக்கு பிந்தைய உலகில் உள்ளடக்கிய, நிலைத்த, விரிதிறன் கொண்ட மீட்பு முயற்சிகளுக்கு, செயல்திறன் மிக்க உலக அளவிலான நிர்வாகம் அவசியம் என வலியுறுத்தினார். சிறந்த நிர்வாகத்தில், முன்னேற்றத்தின் மூலம் சீர்திருத்தப்பட்ட பன்னோக்கியல், பன்னோக்கு நிறுவனங்களின் நடைமுறைகள் ஆகியவை தற்போதைய அவசியம் என அவர் தெரிவித்தார்.
- அனைவரையும் அரவணைத்தல் என்பதில் நிலைத்த வளர்ச்சி இலக்குகளுக்கான 2030 செயல்திட்டத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் மேலும் வலியுறுத்தினார். ‘ சீர்திருத்தம்-செயல்படுதல்-மாறுதல்’ என்னும் அதே கொள்கையை இந்தியா பின்பற்றி வருவதாகத் தெரிவித்த அவர், உள்ளீடான வளர்ச்சி முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாக கூறினார்.
- கோவிட்-19 தொற்று காரணமாக மாறி வரும் சூழலில், இந்தியா ‘ தன்னிறைவு இந்தியா’ என்னும் முன்முயற்சியைப் பின்பற்றி வருவதாக அவர் கூறினார். இந்த நோக்கத்தை பின்பற்றி, திறன் மற்றும் நம்பகத்தன்மை அடிப்படையில், உலக பொருளாதாரம் மற்றும் உலக விநியோக சங்கிலியில், நம்பகமான முக்கிய தூணாக இந்தியா மாறும் என்று அவர் தெரிவித்தார். சர்வதேச சூரிய சக்தி கூட்டணி மற்றும் இயற்கை பேரிடர் கட்டமைப்புக்கான கூட்டணி போன்ற நிறுவனங்களை உலக அளவில் உருவாக்கும் முன்முயற்சியை இந்தியா எடுத்துள்ளது.
- ‘’ புவிக்கோளத்தை பாதுகாத்தல்’’ என்ற துணை அமர்வில், பிரதமரின் பதிவு செய்யப்பட்ட உரை வெளியிடப்பட்டது. அதில், ஒருங்கிணைந்த, விரிவான, முழுமையான முறையில், பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார். இந்தியா, பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை அடைவதில் மட்டுமல்லாமல், அவற்றை விஞ்சும் அளவுக்கு செயல்படும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக வாழுதல், பாரம்பரிய நெறிமுறைகளைக் கடைப்பிடித்தல் ஆகிவற்றால் இந்தியா ஈர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறைந்த அளவு கார்பன் உமிழ்வு மற்றும் பருவநிலை நெகிழ்திறன் மேம்பாட்டு முறைகளை இந்தியா பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்தார். மனித நேய முன்னேற்றத்துக்கு, ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், தொழிலாளர்களை வெறும் உற்பத்தி அம்சத்தில் மட்டும் பார்க்கக்கூடாது என்றார். இதற்கு பதிலாக, ஒவ்வொரு தொழிலாளரின் கண்ணியம் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்த அணுகுமுறையே, நமது புவிக் கோளத்தை பாதுகாப்பதற்கு மிகச்சிறந்த உத்தரவாதமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
- வெற்றிகரமான ரியாத் பிரகடனத்தை நடத்தியதற்காக சவூதி அரேபியாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். 2021-ல் ஜி-20 தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள இத்தாலியை வரவேற்பதாக அவர் தெரிவித்தார். ஜி-20 தலைமைப் பொறுப்பை, 2022-ல் இந்தோனேசியாவும், 2023-ல் இந்தியாவும், 2024-ல் பிரேசிலும் ஏற்பதென ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
- உச்சி மாநாட்டின் முடிவுல், ஜி-20 தலைவர்கள் பிரகடனம் வெளியிடப்பட்டது. தற்போதைய சவால்களை முறியடிக்க ஒருங்கிணைந்த உலக நடவடிக்கை, ஒற்றுமை மற்றும் பன்னோக்கு ஒத்துழைப்பு தேவை என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்களை அதிகாரப்படுத்துதல், புவிக்கோளத்தை பாதுகாத்தல், புதிய எல்லைகளை வடிவமைத்தல் மூலம் 21-ம் நூற்றாண்டின் வாய்ப்புகளை உணர்ந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
*****
(Release ID: 1675014)
|