பிரதமர் அலுவலகம்

பண்டித தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் பிரதமரின் உரை

Posted On: 21 NOV 2020 4:20PM by PIB Chennai

குஜராத் முதல்வர் திரு விஜய் ரூபானி அவர்களே, பண்டித தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் இயக்குநர்கள் வாரிய தலைவர் திரு முகேஷ் அம்பானி அவர்களே, நிலைக்குழுவின் தலைவர் திரு டி ராஜகோபாலன் அவர்களே, இயக்குநர் பேராசிரியர் எஸ் சுந்தர் மனோகரன் அவர்களே, ஆசிரியர்களே, பெற்றோர்களே மற்றும் எனது இளம் நண்பர்களே!

 

பண்டித தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தொழில் துறையில் சேரத் தயாராக உள்ள உங்களைப் போன்ற பட்டதாரிகள் இன்று நாட்டிற்குக் கிடைக்கிறார்கள்.

 

உங்களது திறன் திறமை மற்றும் தொழில் வல்லமையினால் தற்சார்பு இந்தியாவின் மிகப்பெரும் சக்தியாக நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள் என்று நான் நம்புகிறேன். பண்டித தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்துடன் சம்பந்தப்பட்ட 5 திட்டங்களும் இன்று தொடங்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பல்கலைக்கழகம் நாட்டின் எரிசக்தித் துறை மட்டுமல்லாது தொழில் சார்ந்த கல்வி, திறன் மேம்பாடு மற்றும் ஸ்டார்ட் அப் என்று அழைக்கக்கூடிய புது நிறுவனங்கள் போன்றவற்றிற்கான முக்கிய மையமாக செயல்படும் .

 

நண்பர்களே,

 

இந்த பல்கலைக்கழகத் திட்டங்களின் தொடக்க நாட்கள் முதலே நான் இதனுடன் இணைந்து செயல்பட்டுள்ளேன். பண்டித தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகம், இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கடந்த 15 ஆண்டுகளில் பெட்ரோலியத் துறை தவிர எரிசக்தி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த பல்கலைக்கழகம் விரிவடைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் இன்றைய வளர்ச்சியையும் , நாட்டின் மற்றும் உலகத்தின் தேவையையும் கருத்தில் கொண்டு குஜராத் அரசு, பெட்ரோலியம் பல்கலைக்கழகம் என்னும் பெயரை எரிசக்தி பல்கலைக்கழகம் என்று மாற்றுமாறும் தேவைப்பட்டால் சட்டம் இயற்றுமாறும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

 

உலக அளவில் பெருந்தொற்று காரணமாக எரிசக்தித் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நீங்கள் தொழில்துறையில் நுழைகிறீர்கள். எனவே எரிசக்தித் துறையில் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாக அபரிமிதமான வேலை வாய்ப்புகளுக்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. ஒரு வகையில் நீங்கள் சரியான நேரத்தில் சரியான துறைக்குள் நுழைகிறீர்கள். இந்த தசாப்தத்தில் மட்டும்தான் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்பட இருக்கிறது. எனவே ஆராய்ச்சி முதல் உற்பத்தி வரை உங்களுக்கு எண்ணிலடங்காத வாய்ப்புகள் இருக்கின்றன.

 

நண்பர்களே,

இன்று கரியமில தடத்தின் பயன்பாட்டை 30-35 சதவீதம் குறைக்கும் லட்சியத்துடன் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து நான் முதலில் அறிவித்த போது இந்தியாவில் செய்யமுடியுமா என்று உலகமே வியந்தது. இந்த தசாப்தத்தில் நமது இயற்கை எரிவாயுவின் பங்கை நான்கு மடங்காக உயர்த்தும் நோக்கத்தில் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் கொள்ளளவை இரண்டு மடங்காக உயர்த்தவும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எரிசக்தி பாதுகாப்பு சார்ந்த ஸ்டார்ட் அப் சூழல்களை வலுவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். உங்களைப் போன்ற மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களுக்கு சிறப்பு நிதியும் உருவாக்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு ஏதேனும் ஒரு திட்டம் அல்லது பொருள் அல்லது எண்ணம் இருந்தால் அதை முன்னெடுத்துச் செல்ல இந்த நிதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் இது அரசு வழங்கும் அன்பளிப்பாகவும் இருக்கும்.

 

உலகமே மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் சூழ்நிலையில் பட்டதாரி ஆவது எளிதான செயல் அல்ல. எனினும் இந்த சவால்களைக் காட்டிலும் உங்களது திறமை மிகப் பெரியது. இந்தத் தன்னம்பிக்கையை என்றும் தளரவிடாதீர்கள்.

 

பிரச்சினைகளை விட உங்களது நோக்கமும் எண்ணமும் மிகவும் முக்கியமானவை. எனவே உங்களுக்கு ஓர் நோக்கம் இருப்பது அவசியம், நீங்கள் எதற்கு முக்கியத்துவம் அளிக்க இருக்கிறீர்கள் என்பதும் அதற்குச் சரியான திட்டமிடலும் இருக்க வேண்டும். வெற்றியாளர்கள் பிரச்சினைகள் அற்றவர்கள் என்ற கூற்று சரியல்ல. எவரொருவர் சவால்களை ஏற்றுக் கொண்டு அவற்றை எதிர்கொண்டு, முறியடித்து அவற்றிற்குத் தீர்வு காண்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். எந்த ஒரு வெற்றியாளரையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். பல்வேறு சவால்களை முறியடித்த பின்பே அவர் முன்னேறி இருக்கிறார்.

 

நண்பர்களே,

இன்றிலிருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைப் பற்றி நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். கடந்த 1920ம் ஆண்டு முதலான காலகட்டம் நாட்டின் சுதந்திரத்திற்கு மிக முக்கியமானதாகும்.

 

அடிமை காலகட்டத்தில்  வருடம் தவறாமல் சுதந்திரத்திற்காக போர்கள் நடைபெற்றன. 1857ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போர் திருப்புமுனையாக அமைந்தது. எனினும் 1920 முதல் 1947 வரையிலான காலகட்டம் மிகவும் வித்தியாசமானது. இந்த காலகட்டத்தில் நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தும், ஒவ்வொரு துறையில் இருந்தும், ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தோரும், குழந்தைகள், கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த படித்த, பணக்கார மற்றும் ஏழை மக்கள் அனைவரும் சுதந்திரப் போராட்டத்தில் சிப்பாய்களாக பங்கு பெற்றனர். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தனர். தங்களது கனவுகளை தியாகம் செய்து சுதந்திரத்திற்காகப் பாடுபட்டனர்.

 

அன்றைய காலத்தில் இளைஞர்கள் ஒன்றை மட்டுமே லட்சியமாகக் கொண்டு நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தனர். அந்த லட்சியம் என்னவெனில் அடிமைத்தனத்திலிருந்து இந்தியத் தாயை மீட்டெடுத்து சுதந்திர இந்தியாவை உருவாக்குவது தான். மக்களின் எண்ணங்கள் வேறுபட்டிருந்தாலும் அவர்களது குறிக்கோள் ஒரே திசையை நோக்கி இருந்தது. திரு மகாத்மா காந்தி, திரு சுபாஷ் சந்திர போஸ், திரு பகத்சிங், திரு சுக்தேவ், திரு ராஜ்குருதிரு வீர் சவார்க்கர். இவர்களின் எண்ணங்களும் கொள்கைகளும் வேறுபட்டு இருந்தபோதும் அவர்களது இலக்கு ஒன்றே ஒன்றுதான்- இந்தியத் தாயின் சுதந்திரம்.

 

என் இளம் நண்பர்களே,

அன்றைய இளைஞர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களது இளமையைத் தியாகம் செய்தார்கள். இன்று தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்காக நாம் செயல்பட்டு இதையும் நாம் செய்து காண்பிப்போம். இன்று தற்சார்பு இந்தியா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஒரு ராணுவ வீரராக நாம் செயல்பட வேண்டும். தற்சார்பு இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் உறுதியோடு செயல்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியரிடமும்குறிப்பாக இளம் நண்பர்களிடம் எனது எதிர்பார்ப்பு.

 

தற்கால இந்தியா மிக முக்கிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. தற்போதைய இந்தியாவைக் கட்டமைப்பதில் மட்டுமல்லாமல் எதிர்கால இந்தியாவை உருவாக்குவதிலும் உங்களுக்கு மிகப் பெரும் பொறுப்பு உள்ளது. பொறுப்புணர்ச்சி இருப்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி அடைந்து இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

 

பாருங்கள் நண்பர்களே பொறுப்புணர்ச்சி ஒருவரது வாழ்க்கையில் பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. அவர் எந்தத் தடைகளையும் காண்பதில்லை வாய்ப்புகளை மட்டுமே காண்கிறார்.ஒருவரது பொறுப்புணர்ச்சியை சார்ந்தே அவரது வாழ்க்கையின் குறிக்கோள் அமைய வேண்டும். இரண்டுக்கும் இடையே எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. உங்களது வாழ்க்கை குறிக்கோள்களை விரைவாக முன்னெடுத்துச் செல்வதில் பொறுப்புணர்ச்சியும் லட்சியமும் ஒன்றாக  பயணிக்க வேண்டும்.

 

நண்பர்களே,

உங்களது லட்சியத்தை நோக்கி நீங்கள் செல்லும்போது உங்களுக்குள் ஒரு புதிய அபரிமிதமான ஆற்றலைக் நீங்கள் உணர்வீர்கள். இந்த ஆற்றல் உங்களுக்கு புதிய எண்ணங்களை ஏற்படுத்தி புதிய உயரத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். நான் எங்கு இருந்தாலும் யாராக இருந்தாலும் நமக்கு இந்த சமுதாயமும், நாடும், ஏழை எளியோரும் அளித்த ஆதரவு நம்மை விட மிகவும் பெரியது. நான் இன்று உயர்ந்து இருப்பதற்கு இவர்களது பங்களிப்பே காரணம். சில சமயங்களில் நாம் இதை உணர்வதில்லை. இதுபோன்ற மக்களுக்காக நாம் என்றும் கடன் பட்டிருக்கிறோம் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த சமுதாயமும் நாடும் தான் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளன. எனவே நாடு மற்றும் சமுதாயத்தில் இருந்து நாம் பெற்றுள்ள கடனைத் திருப்பிச் செலுத்த நாம் உறுதி கொள்ள வேண்டும்.

 

மனித வாழ்க்கையில் உத்வேகமும் வளர்ச்சியும் அடிப்படையானவை. அதே போல எதிர்கால சந்ததியினருக்காக இயற்கை மற்றும் சுற்றுப்புறத்தை பாதுகாப்பதும் சம அளவு முக்கியம்.

 

நண்பர்களே,

21வது நூற்றாண்டின் இளைஞர்கள் தூய எண்ணத்துடன் முன்னேற வேண்டும். எதுவும் மாறாது என்ற ஒரு சில மக்களின் மனநிலை மாறவேண்டும். தூய உள்ளம் என்பது தெளிவான நோக்கங்களை உணர்த்துகிறது.

 

நண்பர்களே,

இருபது ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக நான் குஜராத்தின்  முதலமைச்சரானேன்.  சூரிய ஒளி சக்தியை மாநில அளவில் உருவாக்குவதில் குஜராத் முதல் மாநிலமாக செயல்பட்டது. சூரிய ஒளி சக்தி மூலம் யூனிட் ஒன்றுக்கு ரூ. 12-13 வரை செலவாகும் என்பது எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் நிலக்கரி யூனிட் ஒன்றுக்கு ரூ. 2-3 வரை கிடைத்ததால் இது மிகப் பெரும் தொகையாக இருந்தது. எனினும் சூரிய ஒளி சக்தி திட்டத்தை செயல்படுத்தும் முடிவை மிக உறுதியோடு நேர்மையோடும் நாங்கள் மேற்கொண்டோம். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை நாங்கள் எடுத்தோம். மிகப்பெரிய அளவில் இந்தத் திட்டங்கள் குஜராத்தில் செயல்படுத்தப்பட்டன. இதற்கான கொள்கையை குஜராத் தயாரித்தபோது இந்திய அரசும் அதை அப்படியே நகல் எடுத்துக் கொண்டது. எனினும் இதற்கான விலையை ரூ. 18-19 என்று நிர்ணயம் செய்தது. ரூ.12-13 என்பதையே நான் தொடர்ந்து பின்பற்றுவேன் என்று கூறினேன். தற்போது குஜராத்தில் சூரிய ஒளி சக்தியின் வளர்ச்சியை நீங்கள் காண்கிறீர்கள். இவையெல்லாம் உங்கள் முன் இருக்கின்றன. இன்று இந்த பல்கலைக்கழகம் இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளது. இன்று இந்தத் திட்டத்தில் ஒரு யூனிட் விலை இரண்டு ரூபாய்க்கும் குறைவாக உள்ளது.

 

சூரிய ஒளி சக்திக்கு நமது நாட்டில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. வரும் 2022ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்க உறுதிமொழியை ஏற்று உள்ளோம். இந்த இலக்கை 2022ஆம் ஆண்டுக்குள் நாடு எட்டி விடும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் 450 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதையும் முன்னதாகவே நாம் அடைவோம் என்று நான் நம்புகிறேன்.

 

நண்பர்களே,

 

மாற்றம் என்பது, நாட்டினுள்ளோ அல்லது உலக அளவிலோ அது ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ நிகழாது. மாற்றம் ஏற்படுவதற்கு நாம் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சிறிய செயல்களாக இருந்தாலும் அவை முறையாக செயல்படுத்தப்பட்டால் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்படும்.

 

நண்பர்களே,

இந்த 21 ஆவது நூற்றாண்டில், இந்தியாவின் மீது நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் இந்த உலகம் கொண்டுள்ளது இந்தியாவின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உங்களை சார்ந்துள்ளது நான் துரிதமாக முன்னேற வேண்டும்.

பண்டித தீனதயாள் உபாத்யாய் அவர்கள் அந்தியோதயா தொலைநோக்குப் பார்வையை நமக்கு அளித்திருக்கிறார்கள். தேசத்திற்கு முன்னுரிமை என்ற அவரது கொள்கைகளை நாம் வலுப்படுத்த வேண்டும். நமது ஒவ்வொரு செயலும் தேசத்தைக் குறித்து இருக்க வேண்டும். இதே இலட்சியத்தோடு நாம் முன்னேற வேண்டும்.

 

உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நன்றி!

*******************



(Release ID: 1674909) Visitor Counter : 158