பிரதமர் அலுவலகம்

முன்களப் பகுதிகளில் வீரர்களுடன் தீபாவளியை பிரதமர் கொண்டாடினார்


வீரர்களுடன் இல்லாமல் எனது தீபாவளி நிறைவடையாது- லோங்கேவாலா எல்லை நிலையில் பிரதமர்

‘ ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிரான ஆற்றல் மிக்க குரலாக இந்தியா உருவெடுத்துள்ளது’

‘ நம்மை சோதித்தால், பதிலடி சம அளவில் தீவிரமாக இருக்கும்’

‘இன்று இந்தியா பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களின் இருப்பிடத்தை தாக்குகிறது’

Posted On: 14 NOV 2020 1:54PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆயுதப்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் தமது வழக்கத்தை இந்த ஆண்டும் தொடர்ந்து மேற்கொண்டு, இந்திய எல்லையில் உள்ள லோங்கேவாலா நிலையில் வீரர்களுடன் கலந்துரையாடல் நடத்தி, அவர்கள் இடையே உரையாற்றியுள்ளார். பனி படர்ந்த மலையாக இருந்தாலும், பாலைவனமாக இருந்தாலும், தமது தீபாவளி வீரர்களுடன் இருந்தால் மட்டுமே நிறைவு பெறும் என்று அவர் கூறினார். எல்லையில் உள்ள வீரர்களுக்கு ஒவ்வொரு இந்தியரின் ஆசிகள், வாழ்த்துக்களை அவர் எடுத்து சென்றார். துணிச்சல் மிக்க தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை அவர்களது தியாகத்துக்காக அவர் வாழ்த்தினார். ஆயுதப்படை வீரர்களுக்கு 130 கோடி இந்தியர்களும் ஒற்றுமையுடன் நின்று நன்றி செலுத்துவதாக பிரதமர் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்துபவர்கள், ஊடுருவல்காரர்களை எதிர்த்து நிற்கும் திறனை அவர்கள் பெற்றுள்ளதால் நாடு பாதுகாப்பாக உள்ளது என்று பிரதமர் கூறினார். சர்வதேச ஒத்துழைப்பு, சமன்பாடுகளில் மாற்றம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், கண்காணிப்பு பாதுகாப்புக்கு முக்கியம் என்பதையோ, மகிழ்ச்சிக்கு உஷார் நிலை அடிப்படை என்பதையோ, வலிமை என்பது வெற்றிக்கான நம்பிக்கை என்பதையோ நாம் மறந்து விடலாகாது என்று அவர் கூறினார்.

இந்தியாவின் கொள்கை மிகத் தெளிவானது என்று பிரகடனப்படுத்திய பிரதமர், இன்றைய இந்தியா புரிதலில் நம்பிக்கை வைத்துள்ளது என்றார். இருப்பினும், நம்மைச் சோதிக்க முயன்றால், நமது பதிலடி அதே அளவில் தீவிரமானதாக இருக்கும் என அவர் எச்சரித்தார்.

இன்று இந்த நாடு தனது தேசிய நலன் அனைத்திலும் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகம் அறிந்துள்ளது என அவர் கூறினார். இந்தியாவின் இந்த நிலை, அதன் தீரம் மற்றும் திறனால் வந்துள்ளது. ஆயுதப்படையினர் பாதுகாப்பை வழங்குவதால், சர்வதேச அரங்கில் இந்தியா ஆற்றல் மிகு நாடாக முன்னேற முடிந்துள்ளது. இந்தியாவின் ராணுவ பலம் அதன் பேர ஆற்றலை அதிகரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இன்று இந்தியா, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களின் இருப்பிடத்தையே தாக்கும் அளவுக்கு வலுவுடன் உள்ளது.

ஆக்கிரமிப்பு சித்தாந்தம் கொண்டவர்களுக்கு எதிரான வலுவான குரலாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும், இத்தகைய ஆக்கிரமிப்பு சக்திகளால் தொல்லைக்கு ஆளாகியுள்ளது.  18-ம் நூற்றாண்டு மனப்போக்கின் பிரதிபலிப்பே இதற்கு காரணமாகும்.

தற்சார்பு இந்தியா, உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுங்கள் ஆகியவை குறித்து குறிப்பிட்ட பிரதமர், நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் துணைப்பொருட்களை இனியும் இறக்குமதி செய்யக்கூடாது என்ற ஆயுதப்படையினரின் முடிவு அடிப்படையில் இது அண்மையில் முடிவு செய்யப்பட்டது என பிரதமர் கூறினார்.  உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுங்கள் முன்முயற்சியின் பெருமை  ஆயுதப் படைகளையே சாரும் என்று அவர் பாராட்டினார்.

ஆயுதப்படையினருக்கு தேவையானவற்றை தயாரிக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் என்று திரு மோடி அழைப்பு விடுத்தார். தற்போது ஏராளமான முதன்முதலாக தொழில்முனைவோர்கள் ஆயுதப்படையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு துறையில், இளைஞர்களின் தலைமையிலான தொழில் தொடங்கும் நிறுவனங்கள், நாட்டை சற்சார்பு இந்தியா பாதையில் வழிநடத்தும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

ஆயுதப்படையினரால் உத்வேகம் பெற்றுள்ள நாடு, இந்தப் பெருந்தொற்று காலத்தில் ஒவ்வொரு குடிமக்களையும் பாதுகாக்க முயற்சித்து வருகிறது என்று பிரதமர் கூறினார். குடிமக்களுக்கு உணவை உறுதி செய்துள்ளதுடன், பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் மீண்டும் கொண்டு செல்ல நாடு பாடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.

வீரர்கள் மூன்று விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், முதலாவதாக, வீரர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் புதுமையை ஒரு பகுதியாக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இரண்டாவதாக, யோகாவை வாழ்க்கையின் பகுதியாக கொள்ள வேண்டும், கடைசியாக, தங்கள் தாய்மொழியை விட கூடுதலாக குறைந்தது இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

லோங்கேவாலாவில் நடைபெற்ற புகழ்பெற்ற சண்டையை பிரதமர் நினைவுகூர்ந்தார். இந்த சண்டை மூலோபாய திட்டம் மற்றும் ராணுவத்தின் தீரத்தை எப்போதும் நினைவுகூருவதாக இருக்கும் என்று அவர் கூறினார். பங்களாதேசில் அப்பாவி மக்களைஅச்சுறுத்தி, பெண்களிடம் அராஜம் புரிந்த பாகிஸ்தான் ராணுவத்தின் கோர முகம் கிழிபட்டதை நினைவுபடுத்திய பிரதமர், உலகத்தின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தான் தனது மேற்கு எல்லையை திறந்து விட்டது. ஆனால், நமது படை அதற்கு சரியான பதிலடியைஅளித்தது என்று தெரிவித்தார்.

                                                                                                    -----



(Release ID: 1672917) Visitor Counter : 211