குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
'சர்வதேச சதாவதானம்'- தனித்துவமான இலக்கிய விழாவைத் தொடங்கி வைத்தார் குடியரசுத் துணைத் தலைவர்
Posted On:
05 NOV 2020 5:08PM by PIB Chennai
தெலுங்கு மொழியின் பாரம்பரிய கலாச்சாரத்தில் அவதானம் என்னும் இலக்கியக் கலை முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். கவிஞர்களின் இலக்கியப் புலமைக்கு சவால் விடும் வகையிலான இந்த கலையைப் பின்பற்றும் ஒரு சில மொழிகள் இதனை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பதியில், டாக்டர் மெதசானி மோகன் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச சதாவதானம் என்னும் இலக்கிய விழாவை காணொலி வாயிலாகக் குடியரசுத் துணைத் தலைவர் இன்று தொடங்கி வைத்துப் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
தாய்மொழியே நமது மிகப் பெரும் சொத்து என்று கூறிய அவர், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்டோர் நமது மொழிகளின் முக்கியத்துவத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரம் குறித்து வெளிநாடுகளில் நடத்தப்படும் பல்வேறு விழாக்களை பாராட்டிய அவர், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அந்நிய மொழிகளைப் பயன்படுத்தும் அதே வேளையில் தங்களது தாய் மொழிக்கும் உரிய முக்கியத்துவத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மொழி என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடு மட்டுமல்லாமல் ஒருவரது தாய் நாட்டைப் பற்றியும், அதன் புராதன கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கும் ஓர் முக்கிய அம்சமாகும் என்றும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற அவதானம் நிகழ்ச்சிகளின் வாயிலாக உலக அளவில் இந்திய மொழிகள் மற்றும் அவற்றின் இலக்கியம் வளர்ச்சி அடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்
சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670363
-----
(Release ID: 1670395)
Visitor Counter : 253