பிரதமர் அலுவலகம்

ஆரம்ப் 2020 –ல் குடிமைப்பணி பயிற்சி அலுவலர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 31 OCT 2020 4:46PM by PIB Chennai

நிர்வாகத்தில் நமது இளம் தலைமுறை மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. நிலைமைக்கு ஏற்றவாறு சிந்திக்கத் தயாராகவும், புதிய விஷயங்களை மேற்கொள்ளும் உணர்வுடனும் அவர்கள் உள்ளனர். இது எனக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. எனவே, உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில், கெவாடியாவில், இதற்கு முந்தைய தொகுப்பு பயிற்சியாளர்களுடன் விரிவான கலந்துரையாடல் நடத்தினேன். ஆரம்ப் சிறப்பு நிகழ்ச்சியையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் இங்கு அன்னை நர்மதை ஆற்றின் கரையோரம் சர்தார் பட்டேல் சிலைக்கு முன்பாக நாம் சந்தித்து, நமது சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்க முயற்சிப்பது என அப்போது முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இந்த முறை கொரோனாவால் அது முடியாமல் போனது. இம்முறை நீங்கள் அனைவரும் முசோரியில் இருக்கின்றீர்கள். மெய்நிகர் வடிவில் என்னுடன் தொடர்பில் உள்ளீர்கள். இந்த நடைமுறையுடன் தொடர்புள்ள அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது என்னவெனில், கொரோனாவின் பாதிப்பு  குறையத் தொடங்கியதும், நீங்கள் ஒரு சிறிய முகாமுக்கு ஏற்பாடு செய்து, இந்த பிரம்மாண்டமான சிலைக்கு முன்பாக சந்தித்து, இந்த தனித்துவமான இடத்தை  எவ்வாறு ஒரு சுற்றுலா தளமாக மேம்படுத்துவது என சிந்திக்க வேண்டும்.

நண்பர்களே, ஓராண்டுக்கு முன்பு இருந்த நிலைக்கும், இப்போது உள்ள நிலைக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், நாடு எவ்வாறு இயங்குகிறது, நாட்டின் நடைமுறை எப்படி பராமரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன். நீங்கள் இதனை உன்னிப்பாக கவனித்தால், இந்த மாற்றம் புலப்படும். இதற்கு முன்பு பலவற்றுக்காக வெளிநாடுகளை நமது நாடு நம்பியிருந்தது. ஆனால், கொரோனாவுக்கு எதிரான போரில், இன்று, இந்தியா பலவற்றை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு மாறியுள்ளது. முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நண்பர்களே, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இது ஒரு முக்கியமான காலமாகும். குடிமைப்பணியில் நீங்கள் ஈடுபடவிருக்கும் நேரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். உங்கள் தொகுதி அலுவலர்கள் பணியாற்றத் தொடங்கும் போது, களத்தில் நீங்கள் உண்மையாக பணியில் ஈடுபடும் போது, இந்தியா தனது 75-வது சுதந்திர திருநாளைக் கொண்டாடும். எனவே, நண்பர்களே, இதனை உங்கள் நாட்குறிப்பில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்தியாவுக்கு தொண்டாற்றுவதற்காக செல்லவுள்ளீர்கள் என்பதை மறவாதீர்கள். உங்களது பணிக்காலத்தின்போது, இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான  சுதந்திரதின நூற்றாண்டு கொண்டாடப்படும். 75 ஆண்டுகளுக்கும் 100 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட இந்த 25 ஆண்டு காலம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் அந்த வகையில் பாக்கியம் பெற்ற தலைமுறையினர். இந்த 25 ஆண்டுகளில் நிர்வாக சீர்திருத்தத்தின் மிக முக்கிய பங்காற்றக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில், நாட்டின் பாதுகாப்பு, ஏழைகளின் பாதுகாப்பு, விவசாயிகள் நலன், பெண்கள் மற்றும் இளைஞர்களின் நலன் ஆகியவற்றில் அக்கறையுடன் செயல்படவும், உலகில் இந்தியாவுக்கு ஒரு தனியிடம் பெறவும், தேவைப்படும்  மிகப்பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கும். அப்போது, எங்களில் பெரும்பாலோர் இருக்க மாட்டோம். ஆனால், நீங்கள் இருப்பீர்கள். உங்களது செயல்பாடுகள் இருக்கும். எனவே, இந்த நன்னாளில், நீங்கள் பல உறுதிமொழிகளை உங்களுக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களது வாக்குறுதிகளுக்கு நீங்களே சாட்சியாக இருப்பீர்கள். இன்று இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக அரை மணி நேரம் ஒதுக்குங்கள். உங்கள் மனதில் செல்லும் எண்ணங்கள், உங்களது கடமைகள், பொறுப்புகள், தீர்மானங்கள் ஆகியவற்றை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

நண்பர்களே, நீங்கள் எழுதும் ஒவ்வொரு வார்த்தையையும் உள்ளடக்கிய அந்த தாள் வெறும் தாள் அல்ல. உங்கள் இதயத்தின் ஒரு பகுதியாகும். உங்கள் வாழ்க்கை முழுவதும் இந்தத்தாள்கள் இருக்கும். அதில் நீங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற உங்கள் இதயம் துடிக்கும். அதன் வழியாக அவற்றை நிறைவேற்ற இடையறாத ஊக்கத்தை அது அளிக்கும். இது உங்களிடையே இருக்குமானால், யாருடைய ஊக்குவிப்பும் பாடங்களும் தேவையில்லை. இந்தத்தாளில் நீங்கள் எழுதிய எழுத்து, ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உங்கள் பொறுப்பை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

நண்பர்களே, ஒரு வகையில், சர்தார் வல்லபாய் பட்டேலை நாட்டின் குடிமைப் பணியின் தந்தை என்று சொல்ல வேண்டும். 1947-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி முதல் தொகுதி குடிமைப் பணி அதிகாரிகள் இடையே உரையாற்றிய சர்தார் பட்டேல், குடிமைப் பணியாளர்கள் நாட்டின் இரும்புச் சட்டம் போன்றவர்கள் என்று குறிப்பிட்டார். மக்களுக்கு தொண்டாற்றுவது அவர்களது உயரிய கடமை என்று பட்டேல் அறிவுரை வழங்கினார். குடிமைப் பணியாளர்களின் ஒவ்வொரு முடிவும் நாட்டை மையப்படுத்தியதாகவும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என நானும் வலியுறுத்துகிறேன்.நாட்டின் அரசியல் சாசன மாண்பு கொண்டதாக அது இருக்க வேண்டும். நீங்கள் பணியாற்றும் இடம், பொறுப்பு சிறிதாக இருந்தாலும், நீங்கள் எடுக்கும் முடிவு எப்போதும் நாட்டு நலனையும், மக்கள் நலனையும் சார்ந்ததாக இருக்க வேண்டும். தேசிய நோக்கம் அதில் இருக்க வேண்டும்.

இரும்பு சட்டம் என்பது ஒரு வடிவம் கொடுப்பதாக மட்டும் இராமல், முக்கியமான நெருக்கடி காலத்தில், ஒற்றை சக்தியாக செயல்பட்டு, நாட்டை முன்னேற்ற பொறுப்பேற்பதாக இருக்க வேண்டும். களத்தில் நீங்கள் பல்வேறு வகையான மக்களை சந்திக்க நேரிடும். ஆனால், உங்கள் பொறுப்பை நீங்கள் உணர்ந்து, தவறு இழைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வருங்காலத்தில், நீங்கள் மாவட்டங்களுக்கு பொறுப்பு ஏற்கலாம், துறைகளைக் கையாளலாம். நீங்கள் எடுக்கும் முடிவு மாநிலத்தின் மீது, நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அந்த நேரத்தில் உங்களது குழு எழுச்சி உணர்வு உங்களுக்கு உதவக்கூடும். உங்களது குழுவினருடன், பெரிய லட்சியத்தை நோக்கி வலிமையுடன் பாடுபட்டால், நீங்கள் மட்டுமல்லாமல் நாடே வெற்றிப்பாதையில் பயணிக்கும். அந்த வகையில் நாடு ஒருபோதும் தோற்காது என என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும்.

நண்பர்களே, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது பற்றி சர்தார் பட்டேல் கனவு கண்டார். தன்னிறைவு இந்தியா என்பதுடன் தொடர்புடையதாக அவரது கனவு இருந்தது. தற்சார்பு என்பதே இந்தப் பெருந்தொற்று காலத்தில் நாம் கற்றுக்கொண்ட பெரிய படிப்பினை ஆகும். ஒரே பாரதம் உன்னத பாரதம் தற்சார்பு இந்தியா ஆகியவை புதிய இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. புதியது என்பது என்னைப் பொறுத்தவரை, பழமையை அகற்றி விட்டு புதுமையை, புகுத்துவது அல்ல. புதியது என்பது, புத்தாக்கம், படைப்பாற்றல், புதிய சிந்தனை மற்றும் ஆற்றலுடன் இருப்பது. பழையனவற்றை இப்போதைக்கு பொருத்தமானவையாக மாற்றுவது. நடைமுறைக்கு ஒவ்வாதவற்றை விட்டு விடுவது. இதற்கு துணிச்சல் வேண்டும். தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க நமக்கு அறிவியல் தொழில்நுட்பம், ஆதாரங்கள், நிதி ஆகியவை தேவையாகும். குடிமைப் பணியாளர் என்ற முறையில், இந்த நோக்கத்தை நிறைவேற்றும் உங்களது பங்கும் அவசியமாகும். 24 மணி நேரமும் இந்த லட்சியத்தை மனதில் கொண்டு உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும்.

நாட்டில் புதிய மாற்றங்கள், புதிய குறிக்கோள்களை அடைய, புதிய அணுகுமுறைகள், நடைமுறைகளைப் பின்பற்ற, திறமையுடன் கூடிய வளர்ச்சிக்கு பயிற்சி என்பது மிக முக்கியமானதாகும். முன்பெல்லாம் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பயிற்சியில் நவீன அணுகுமுறையைப் பின்பற்றும் சிந்தனையே இருக்கவில்லை. ஆனால், இப்போது இந்த விஷயத்தில் பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் பயிற்சி அளிப்பதில் புரட்சி ஏற்பட்டுள்ளது. பயிற்சி முறையே மாறி விட்டது. ஆரம்ப் என்பது வெறும் ஆரம்பமல்ல. அது ஒரு அடையாளம் மற்றும் பாரம்பரியம். சில நாட்களுக்கு முன்பு அரசு மற்றொரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. கர்மயோகி இயக்கம் புதிய பரிசோதனையாகும். திறன் மேம்பாட்டில் ஒரு திசையாகும். இந்த இயக்கத்தின் மூலம், அரசு ஊழியர்கள் தங்கள் சிந்தனை, அணுகுமுறை ஆகியவற்றில் நவீனத்துவத்தையும், திறமையை வளர்க்கும் அணுகுமுறையையும் மேற்கொள்ள வேண்டும்இது, அவர்கள் கர்மயோகியாக மாறும் வாய்ப்பை அளிக்கும்.

நண்பர்களே, சுய லாபத்துக்காக செய்யும் பணி கடமை அல்ல என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் கூறியுள்ளார். பெரிய தொலை நோக்குடனும், பெரிய இலக்குடனும் மேற்கொள்ளப்படுவதே கடமையாகும். இதனை செய்தால் நாம் அனைவரும் கர்மயோகிகளாவோம். நீங்கள், நான், அனைவரும் கர்மயோகிகளாக வேண்டும். விதிமுறைக்கும், பங்காற்றுவதற்கும் இடையே நிலையான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. விதிமுறைகளுக்கு அதன் முக்கியத்துவம் உள்ளது. பங்காற்றுவதில் அதன் பொறுப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த இரண்டிலும் சமன்பாடு அவசியமாகும். கயிற்றில் நடப்பதைப் போன்ற விளையாட்டு இது.

நண்பர்களே, வாழ்க்கை என்பது இயங்குவதாக இருக்க வேண்டும். நிர்வாகமும் அதைப் போன்றதே. எனவே, நாம் பொறுப்புள்ள அரசு பற்றி பேசுகிறோம். முதலாவதாக, குடிமைப் பணியாளர் நாட்டின் சாதாரண மக்களுடன் நிலையான தொடர்பை வைத்திருக்க வேண்டும். மக்களுடன் தொடர்பு வைத்திருப்பதே, ஜனநாயகத்தில் பணியாற்ற எளிதாக இருக்கும். அடிப்படைப் பயிற்சி, தொழில்ரீதியிலான பயிற்சி பெற்ற பின்னர் நீங்கள் களத்தில் பயிற்சி பெறச் செல்வீர்கள். களத்தில் மக்களுடன் சேருமாறு நான் உங்களை அறிவுறுத்துகிறேன். அதை விட்டு விடாதீர்கள். அதிகாரி என்னும் நினைப்பு உங்கள் தலையில் ஏற விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அந்தப் பூமி, குடும்பம், சமுதாயம் ஆகியவற்றை ஒருபோதும்  மறவாதீர்கள். சமுதாயத்துடன் தொடர்ந்து இணைப்பில் இருங்கள். பொதுமக்களுடனும், சமூகத்துடனும் கலந்து விட்டீர்களானால், பொது மக்கள் உங்களது அதிகாரத்துக்கு ஆதரவளிப்பார்கள். உங்களது இரு கைகள் ஆயிரம் கைகளாகும். இந்தக் கைகளே மக்கள் சக்தியாகும். அவர்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். அரசு என்பது உயர்மட்டத்திலிருந்து செயல்படுவதல்ல என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. யாருக்காக கொள்கைகள் வகுக்கப்படுகின்றனவோ, அவர்களை நிர்வாகத்தில் ஈடுபடுத்துவது மிகவும் முக்கியமானதாகும். மக்கள் அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் பெறுபவர்கள் மட்டுமல்ல. அவர்கள் தான் உண்மையான இயக்கும் சக்தி. எனவே, நாம் அரசு என்னும் இடத்திலிருந்து, நிர்வாகம் என்ற இடத்துக்கு முன்னேறிச் செல்ல வேண்டும்.

இந்த அகாடமியில் பட்டம் பெற்ற பின்னர், நீங்கள் முன்னேறிச் செல்லுகையில், இரண்டு பாதைகள் உங்கள் முன்பு இருக்கும். ஒன்று, எளிதான, வசதிகள் மிக்க, பெயரும் புகழும் அளிக்கக்கூடியது. மற்றொன்று, சவால்கள், சிக்கல்கள், பிரச்சினைகள் நிறைந்தது. எனது அனுபவத்தில் இருந்து நான் உங்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். எளிதான பாதையைத் தேர்வு செய்தால், உண்மையான சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடும். வளைவுகள், திருப்பங்கள் இல்லாத நேரான பாதை மிகவும் அபாயகரமானது. அதிக வளைவுகள் உள்ள பாதையில் செல்லும் ஓட்டுநர் அதிக கவனத்துடன் செல்வார். அப்போது விபத்துக்கள் குறைவாக இருக்கும். நேரான பாதை சில சமயங்களில் சிக்கல் நிறைந்ததாக இருக்கும். தேச நிர்மானம் என்னும் லட்சியம் நிறைந்த, தன்னிறைவு இந்தியாவை உருவாக்கும் பாதை எளிதாக இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. எளிதாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாததே உண்மையில் நல்லது. மக்கள் நிம்மதியான, சுலபமான முறையில் வாழ்வதற்கு தொடர்ந்து நீங்கள் உழைத்தீர்களானால், நீங்கள் மட்டுமின்றி நாடே பயனடையும். இந்திய சுதந்திரத்தின் 25 ஆண்டுகளுக்கும், 100 ஆண்டுகளுக்கும் இடையிலான காலத்தில் இந்தியா வளர்ச்சி பெறுவதை நீங்கள் உங்கள் கண்ணுக்கு முன்பாக காணமுடியும். இன்று, குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்ற முறையில் அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். மக்களின் வாழ்க்கையில் உங்களது தலையீடு குறைந்து, சாதாரண மக்கள் அதிகாரம் பெற்றவர்களாக மாறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

என்னிலிருந்து யாரும் வேறுபட்டவர்கள் அல்ல. எந்த வேலையை, யாருக்காக நீங்கள் செய்கிறீர்களோ, அதை புரிந்து கொண்டு செய்யுங்கள் என்று நமது உபநிஷதம் கூறுகிறது. உங்கள் துறையையும், மக்களையும் உங்கள் குடும்பமாக கருதி பணியாற்றினால், உங்களுக்கு களைப்பே ஏற்படாது. எப்போதும் புதிய ஆற்றலுடன் திகழ்வீர்கள் என்பது எனது அனுபவ பாடம். கோப்புகளை விடுத்து களப்பணியாற்றினால், உங்களது பணி அடையாளம் காணப்படும். இலக்கை நிர்ணயித்து, மக்களுக்கு உங்கள் ஆதரவை அளித்து, கடமையை நிறைவேற்றினால், மற்றவர்களிடமிருந்து நீங்கள் மாறுபட்டு காணப்படுவீர்கள். நீங்கள் ஓரிடத்தில் இருந்து, மறு இடத்துக்கு செல்கின்ற நிலையிலும், உங்களது பாணியை விடாமல் பணியாற்றினால், எந்த வேலையும் சிக்கலாக இராது.

நண்பர்களே, நீங்கள் எங்கு பணிக்குச் சென்றாலும், ஒரு விஷயத்தை மறக்கக்கூடாது. நீங்கள் வகிக்கும் பதவியை வைத்து நீங்கள் அடையாளம் காணப்படக்கூடாது. உங்களது பணி உங்களை அடையாளப்படுத்த வேண்டும். உங்களது புகழ் வளரும் போது, ஊடகங்களும், சமூக ஊடகங்களும் உங்களை அதிகம் கவரும். நீங்கள் செய்துள்ள பணி பற்றி ஊடகங்களில் விவாதிக்கப்பட வேண்டும். அதைவிடுத்து, வழக்கமான வெறும் விவாதப்பொருளாக அது இருக்கக்கூடாது. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டு முன்னேற வேண்டும். உங்களுக்கு முன்பு பணியாற்றிய மூத்த அதிகாரிகள் காட்டிய கண்ணிய வழியை நீங்களும் பின்பற்ற வேண்டும்.

எனது அன்புக்குரிய நண்பர்களே, எனது இளம் நண்பர்களே, நாடு நூறு ஆண்டு கால சுதந்திர தீர்மானங்களையும் , கனவுகளையும் மட்டுமல்லாமல், வருங்கால சந்ததியையும் உங்களிடம் ஒப்படைத்துள்ளது. வரக்கூடிய 25-35 ஆண்டுகளை உங்களிடம் நாடு ஒப்படைக்கிறது. அத்தகைய பெருந்தன்மையான பரிசை நீங்கள் பெறுகின்றீர்கள். வாழ்க்கையின் அதிர்ஷ்டமாக கருதி அதை பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்; கர்மயோகி என்னும் எழுச்சி முறையைக் கையாளுங்கள். கர்மயோகப் பாதையில் நீங்கள் தொடர்ந்து நடந்து முன்னேறுவீர்கள் என நான் நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. ஒவ்வொரு தருணத்திலும், நான் உங்களோடு இருப்பேன் என உறுதி கூறுகிறேன். ஒவ்வொரு நொடியிலும் உங்களுடன் இருப்பேன். தேவைப்படும் போதெல்லாம் நீங்கள் எனது கதவைத் தட்டலாம். நான் அங்கு இருக்கும் வரை, நான் எங்கு இருந்தாலும், நான் உங்கள் நண்பன். நான் உங்கள் பங்குதாரர். 100 ஆண்டு சுதந்திர தின கனவுகளை நனவாக்க நாம் அனைவரும் இப்போதிலிருந்தே இணைந்து பணியாற்றுவோம். நாம் முன்னேறி செல்லுவோம்.

நன்றிகள் பல!

***



(Release ID: 1669967) Visitor Counter : 250