அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொன்விழாவைக் குறிக்கும் வகையில் தபால் துறையின் சிறப்பு உறையை டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் சஞ்சய் தோத்ரே வெளியீடு
Posted On:
02 NOV 2020 5:07PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் குடும்பநலம், புவி அறிவியல் துறைகளின் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், மத்திய தபால், கல்வி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே ஆகியோர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொன்விழாவைக் குறிக்கும் வகையிலான தபால் துறையின் சிறப்பு உறையை புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், "செயற்கை நுண்ணறிவு, நானோ தொழில்நுட்பம், வானியற்பியல், வானியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நம் விஞ்ஞானிகள் சர்வதேச அளவில் தங்களது திறமையை நிரூபித்துள்ளனர்", என்று குறிப்பிட்டார். அறிவியல் துறையில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்படுவதாக அவர் கூறினார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கடந்த ஆறு வருடங்களில் நாட்டில் உள்ள அனைத்து ஆய்வகங்களுக்கும் தாம் சென்று பார்த்துள்ளதை நினைவு கூர்ந்த அமைச்சர், கொவிட்-19 உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இடையேயும் நம் விஞ்ஞானிகள் அயராது உழைத்து சாதனை புரிந்து வருவதாகத் தெரிவித்தார்.
"அறிவியல் சார்ந்த ஒவ்வொரு செயலும் மக்களின் வாழ்வாதாரத்தை எளிமையாக்கும் விதத்தில் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் அறிவியல் சமூக பொறுப்பு குறித்து பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்", என்று அமைச்சர் தெரிவித்தார்.
"மக்களின் நம்பிக்கைக்கு உகந்த நண்பன்", என்று தபால் துறையைக் குறிப்பிட்ட அவர், தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களையும் விரைவில் சென்றடையும் வகையில் செயல்படும் தபால் துறையுடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய இணை அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே, நம் நாட்டின் வளர்ச்சியில் விஞ்ஞானிகளின் பங்கு அபரிமிதமானது என்று கூறினார். நாடு முழுவதும் செயல்படும் தபால் துறையின் வாயிலாக, நாட்டின் வளர்ச்சி மற்றும் ஏழைகளின் நலனுக்காக விஞ்ஞானிகள் ஆற்றி வரும் பணிகள் குறித்து விளக்கும் இந்த சிறப்பு உறை அனைத்து மக்களையும் சென்றடையும் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669492
*******
(Release ID: 1669492)
(Release ID: 1669602)
Visitor Counter : 232