பிரதமர் அலுவலகம்

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறுவோருடன் கலந்துரையாடிய போது பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 27 OCT 2020 1:29PM by PIB Chennai

இப்போது, பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் அனைத்துப் பயனாளிகளுடனும் நான் பேசும் நிலையில், எல்லோரும் மகிழ்ச்சியாகவும், ஆச்சர்ய நிலையில் இருப்பதையும் அறிகிறேன். முன்னர், சம்பளம் பெறுவோரும் கூட கடன் வாங்க வங்கிகளுக்கு அலைய வேண்டியிருந்தது. ஏழைகளும், தெருவோர வியாபாரிகளும் வங்கிகளுக்குள் நுழைவதை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால், இன்றைக்கு, வங்கிகளே உங்கள் வீட்டு வாசலுக்கு வருகின்றன. ஒருவர் வியாபாரத்தைத் தொடங்க எந்தத் தடங்கலும் இல்லாமல் கடன் கிடைக்கும். உங்கள் அனைவரின் முகங்களிலும் இந்த மகிழ்ச்சியைக் காண்பதில் எனக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டுள்ளது. தற்சார்பு நோக்குடன் முன்னேறுவதற்கு உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெறவும், உத்தரப்பிரதேசம் மற்றும் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருடனும் நான் பேசும் நிலையில், நமது சகோதரி ப்ரீத்தி, மிகுந்த தன்னம்பிக்கையுடன் நவீன தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்கிறார் என்பதை அறிந்தேன். அவர் அதிகம் படிக்காதவர், ஏழ்மையில் வாழ்பவராக இருக்கிறார். தன் குடும்பத்தை முழுமையாக கவனித்துக் கொள்ளும் நிலையில், தன் வியாபாரத்தை விரிவுபடுத்த விரும்புகிறார். அதேபோல, பனாரஸை சேர்ந்த அரவிந்த் உடன் நான் பேசியபோது, இதைக் கற்றுக் கொள்வது ஓர் அனுபவமாக இருப்பதாகக் கூறினார். நாட்டில் உள்ள, படித்த எல்லோரும் இதைக் கற்றுக் கொள்வார்கள்  என்று நம்புகிறேன். அவர் எதைத் தயாரித்தாலும், அதில் ஒன்றை, சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றும் ஒருவருக்கு பரிசாக அளிக்கிறார். சிறிய அளவிலான தனிப்பட்ட ஒருவர் எவ்வளவு செய்கிறார் என்று பாருங்கள். இதைவிட பெரிய உத்வேகம் வேறு என்ன வேண்டும்? லக்னோவில் தெருவோர வியாபாரியாக இருக்கும் விஜய்பகதூரிடம் நாம் பேசியபோது, நேரத்தை மிச்சப்படுத்தி, வியாபாரத்தை விரிவுபடுத்துவது தான் அவருடைய வியாபார மாடலாக உள்ளது என்பதை அறிந்தோம். இதுதான் நமது நாட்டின் பலம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற மக்களின் முயற்சிகளால் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இத் திட்டத்திற்காக நமது தெருவோர வியாபார நண்பர்கள் அரசுக்கு நன்றி கூறி, எனக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்த பாராட்டுகள் அனைத்தையும் இதற்காக பாடுபடும் வங்கிகள் மற்றும் வங்கி அலுவலர்களுக்கு நான் அளிக்கிறேன். வங்கி அலுவலர்களின் உணர்வுப்பூர்வமான சேவை இல்லாமல், இவ்வளவு குறுகிய காலத்தில் இதை அமல்படுத்தி இருக்க முடியாது. வங்கி அலுவலர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஏழைகளின் உணர்வுகளைப் பார்க்கும்போது, அவர்களுக்காகப் பணியாற்றும் உத்வேகம் வங்கி அலுவலர்களிடம் அதிகரிக்கிறது. உங்கள் வாழ்வை மறு கட்டமைப்பு செய்வதற்காக முயற்சிகள் மேற்கொண்ட அனைவருக்கும், ஏழைகளின் ஆசிகள் கிடைக்க வேண்டும். உங்களுடைய வாழ்த்துகளும், ஆசிகளும் வங்கி அலுவலர்களுக்கு தான் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த முயற்சியுடன், ஏழைகளின் விழாக்கால கொண்டாட்டத்துக்கு ஒளி கிடைத்துள்ளது. இது மிகப் பெரிய முயற்சி. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜி, உ.பி. அரசின் மற்ற அமைச்சர்கள், ஸ்வநிதி திட்டத்தில் உ.பி.யில் அனைத்து மாவட்டங்களிலும் பயன்பெறும் ஆயிரக்கணக்கான பயனாளிகள், அனைத்து வங்கிகளின் அதிகாரிகள், என் சகோதர சகோதரிகள் என்னுடன் இப்போது இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். தற்சார்பு இந்தியா என்ற முயற்சியில் இன்றைய நாள் முக்கியமான ஒரு நாளாக உள்ளது.

சவாலான சூழ்நிலைகளை நாடு எப்படி எதிர்கொள்கிறது, உத்தரப்பிரதேச மக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சக்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள்  என்பதற்கு சாட்சியாக இந்த நாள் இருக்கிறது. உலகில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஆரம்பித்தபோது, இந்தியாவின் ஏழை மக்கள் பற்றி அதிக கவலை இருந்தது. நமது சகோதர சகோதரிகள் எத்தனை பேருக்கு பாதிப்பு  ஏற்படும், எப்படி இதை எதிர்கொள்வார்கள் என்ற கவலை அரசுக்கு இருந்தது. இதை மனதில் கொண்டு ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான கரீப் கல்யாண் யோஜ்னா திட்டங்களின் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. அதனால், ஏழைகள் பட்டினி கிடக்காத நிலை ஏற்படுத்தப்பட்டது. ரூ.20 லட்சம் கோடி அளவிலான பொருளாதார உத்வேக திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போது, ஏழைகளின் நலன்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உயர் முன்னுரிமை தரப்பட்டது. இன்றைக்கு, எந்தவொரு எதிர்மறை சூழலையும் தங்களால் மாற்ற முடியும் என்பதை சாமானிய மக்கள் நிரூபித்துள்ளனர். ஏழைகளின் முயற்சிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டம் ஆதரவு அளிப்பதாக உள்ளது. தெருவோர வியாபாரிகள் மீண்டும் தங்கள் தொழிலைத் தொடங்கி, தற்சார்புடன் முன்னெடுத்துச் செல்ல முடியும்.

நண்பர்களே,

பிரதமரின் ஸ்வநிதி திட்டம் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஜூலை 2 ஆம் தேதியில் இருந்து, அதாவது ஒரு மாத காலத்திற்குள், ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. நாட்டில் முதன்முறையாக திட்டங்கள் இவ்வளவு வேகமாக அமல் செய்யப்படுகின்றன. கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்த்தால், ஏழைகளுக்கான திட்டங்களை இவ்வளவு வேகமாக அமல் செய்வதை யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாமல், தெருவோர வியாபாரிகளுக்கு, கணிசமான கடன் வழங்கக் கூடிய ஒரு திட்டம் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக அமல் செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு இந்த நாடு உங்களுக்கு ஆதரவாக துணை நிற்கிறது, உங்கள் முயற்சிகளை மதிக்கிறது. தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு உங்களின் பங்களிப்பை, நாடு இன்றைக்கு அங்கிகரிக்கிறது.

நண்பர்களே, நமது தெருவோர வியாபார சகோதர, சகோதரிகளுக்கு எந்த சிரமமும் இருக்கக் கூடாது என்பதில் இத் திட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே அக்கறை செலுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், கடனுக்கு விண்ணப்பிக்க ஆவணங்கள் தேவை, உத்தரவாதம் தேவை என்ற நிலையில் மக்கள் அதிருப்தியில்  இருந்தனர். எனவே, ஏழைகளுக்கான மற்ற திட்டங்களில் உள்ளதைப் போல, இத் திட்டத்தில் தொழில்நுட்பத்தை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டது. எந்த  ஆவணம் மற்றும் உத்தரவாதமும் இதில் தேவையில்லை. இடைத்தரகர்கள் யாரும் கிடையாது. அரசு அலுவலகங்களுக்கு யாரும் அலைய வேண்டாம். உங்கள் விண்ணப்பத்தை நீங்களே ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம். அல்லது பொது சேவை மையம், நகராட்சி அலுவலகம் அல்லது வங்கிக் கிளைக்கு சென்று அதைச் செய்யலாம். தெருவோர வியாபாரிகள் தங்கள் தொழிலை மீண்டும் தொடங்க, யாரையும் போய் சந்திக்க வேண்டிய அவசியம் கிடையாது என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. கடன் வழங்குவதற்கு வங்கிகளே முன்வருகின்றன.

நண்பர்களே, உத்தரப்பிரதேச மாநிலத்தின் பொருளாதாரத்தில் தெருவோர வியாபாரிகளின் பங்களிப்பு அதிகமானது. இது பெரிய மாநிலமாகும். மக்கள் தொகை அதிகம். ஆனால் கிராமங்கள் மற்றும் நகரங்களில் வாழும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக மட்டுமின்றி, தங்களுக்கு வருமானமும் ஈட்டிக் கொள்பவர்களாக தெருவோர வியாபாரிகள் உள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதைத் தடுப்பதாகவும் தெருவோர வியாபாரங்கள் இருக்கின்றன. எனவே, பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் பயன்களைப் பெறுவதில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. நகர்ப்புற தெருவோர வியாபாரிகள் எண்ணிக்கை உத்தரப்பிரதேசத்தில் தான் அதிகபட்சமாக உள்ளது. நாடு முழுக்க இத் திட்டத்தில் சுமார் 25 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 12 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டவை உ.பி.யில் இருந்து வந்தவை. இந்த மாநிலத்தில் 3.45 லட்சம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச அரசாங்கம், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜி, தெருவோர வியாபாரிகளின் பிரச்சினைகள் குறித்து அக்கறையுடன் செயல்பட்ட அவருடைய அணியினர் ஆகியோருக்கு நான் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்வநிதி திட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்திற்கு உ.பி.யில் முத்திரைத் தீர்வையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள். கொரோனா தொற்று காலத்தில் உ.பி.யில் ஆறு லட்சம் வியாபாரிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக உ.பி. அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, ஏழைகளுக்குக் கடன் கொடுத்தால், அவர்கள் திருப்பிச் செலுத்த மாட்டார்கள் என்பது போன்ற தோற்றத்தை, ஏழ்மையின் பேரில் அரசியல் செய்பவர்கள் உருவாக்கியுள்ளனர். நேர்மை இல்லாமைக்கு ஏழைகள் மீது ஊழல்வாதிகள் எப்போதும் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், ஏழைகள் நேர்மையை, சுயமரியாதை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதை முன்பும் கூறியிருக்கிறேன், இப்போதும் கூறுகிறேன். பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் மூலமாக தங்களின் நேர்மையை ஏழைகள் மீண்டும் நிரூபித்துள்ளார்கள். இத் திட்டத்தின் கீழ் கடன் வாங்கிய பெரும்பாலான வியாபாரிகள், உரிய காலத்தில் தவணைகளை திருப்பிச் செலுத்தி வருகிறார்கள். கடும் உழைப்பால் அவர்கள் சம்பாதித்து, தவணைகளைச் செலுத்துகிறார்கள். அதுதான் ஏழைகளின் மன உறுதி, உழைப்பு மற்றும் நேர்மை.

நண்பர்களே,

வங்கிகள் மற்றும் இதர அமைப்புகள் மூலம் பிரதமரின் ஸ்வநிதி திட்டம் பற்றி உங்களுக்கு விவரிக்கப்பட்டுள்ளது. இன்னும் நிறைய பேருக்கு இதுபற்றி தெரிவிக்கப்பட வேண்டும். இத்த திட்டத்தின் கீழ் எளிதாகக் கடன் கிடைக்கும். உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தினால் 7 சதவீத வட்டி தள்ளுபடி கிடைக்கும். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்தால் மாதம் 100 ரூபாய் வரையில் பணம் உங்கள் வங்கிக் கணக்குகளில் திருப்பி செலுத்தப்படும். இந்த இரண்டையும் நீங்கள் செய்தால், ஒரு வகையில் உங்களுடைய கடன், வட்டியில்லா கடனாக ஆகிவிடும். அடுத்த முறை அதிக தொகையை கடனாகப் பெறலாம். உங்கள் தொழிலை விரிவுபடுத்த இந்தப் பணம் உதவியாக இருக்கும்.

நண்பர்களே,

இப்போது வங்கிகளின் கதவுகள் உங்களுக்கு திறக்கப்பட்டுள்ளது, வங்கிகள் உங்களை நாடி வந்துள்ளன என்றால், இவை ஒரு நாளில் நடந்துவிடவில்லை.  ``எல்லோருடைய வளர்ச்சிக்காகவும், எல்லோருடைய நம்பிக்கையுடனும் ஒன்றுபட்டிருத்தல்''  என்ற கொள்கையின் பல ஆண்டு கால முயற்சிகளின் விளைவாக இது சாத்தியமாகியுள்ளது. வங்கி நடைமுறையில் ஏழைகளை ஈடுபடுத்துவதால் எதுவும் நடந்துவிடாது என்று கூறியவர்களுக்கான பதிலாகவும் இது இருக்கிறது.

நண்பர்களே,

ஏழைகளுக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்ட சமயத்தில் நிறைய கேள்விகள் எழுப்பினார்கள், கேலி செய்தார்கள். ஆனால் இன்றைக்கு அதே ஜன்தன் கணக்குகள் தான் நெருக்கடியான சூழலில் ஏழைகளுக்கு உதவிகரமாக அமைந்துள்ளன, அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவியாக உள்ளன. இன்றைக்கு, ஏழைகள் வங்கியுடன் தொடர்பில் இருக்கிறார்கள். பொருளாதாரத்தின் பிரதானப் பாதையில் இருக்கிறார்கள். இன்றைக்கு உலகில் பெரிய நாடுகளை திணறடித்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை நல்ல முறையில் கையாளும் சக்தி சாமானிய மக்களுக்குக் கிடைத்துள்ளது. இன்றைக்கு, நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் கேஸ் ஸ்டவ்களில் சமையல் செய்கின்றனர். முடக்கநிலை காலத்திலும் கூட, அவர்கள் புகை அடுப்புக்கு மாற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு வீடு கிடைக்கிறது, சௌபாக்யா திட்டத்தின் கீழ் மின்சார இணைப்பு கிடைக்கிறது, ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரையில் இலவச சிகிச்சை வசதி கிடைக்கிறது, ஏழைகளுக்கு காப்பீட்டுத் திட்டங்களின் பாதுகாப்பு உள்ளது. ஏழைகளின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தர மேம்பாட்டை ஏற்படுத்த நாடு உறுதி ஏற்றுக் கொண்டுள்ளது. உங்களின் தொழில்களை விரிவுபடுத்தவும், வாழ்க்கை நிலையை உயர்த்தவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும் என்பதை, தெருவோர வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்தத் தருணத்தில் நான்  உறுதிமொழியாக அளிக்கிறேன்.

நண்பர்களே,

கொரோனா பாதிப்பை தைரியமாக எதிர்கொண்டு, முன்னெச்சரிக்கை விதிகளை கவனமாக கடைபிடித்த எல்லோருக்கும் மீண்டும் ஒரு முறை நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை மூலமாக, வெகு விரைவில் இந்த நோய்த் தொற்றில் இருந்து நாடு விடுபட்டுவிடும். தற்சார்பு இந்தியா என்ற கனவை விரைவில் எட்டுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. திருவிழா சமயங்களில் இரண்டு கெஜ தூர இடைவெளி பராமரித்தல் மற்றும் முகக்கவச உறை அணிதலில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதில் எந்தவிதமான அலட்சியமும் இருக்கக் கூடாது. இந்த வாழ்த்துக்களுடன், உங்கள் அனைவருக்கும் திருவிழாக்களுக்கான வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வாழ்வில் முன்னேற்றங்கள் காண இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

பல பல நன்றிகள்!

••••••


(Release ID: 1669572) Visitor Counter : 288