அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சுமார் ஒரு மாதம் நடந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இந்திய விஞ்ஞானிகள் பங்கேற்ற வைபவ் உச்சிமாநாடு நிறைவு
Posted On:
01 NOV 2020 3:17PM by PIB Chennai
இந்திய மற்றும் வெளிநாட்டு வாழ் இந்திய விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்ற உலகளாவிய மெய்நிகர் மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி 2020 அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தொடங்கி வைத்தார். அந்த மாநாடு நேற்றுடன் முடிவடைந்தது. சுமார் ஒரு மாத காலம் நடந்த இந்த மெய்நிகர் மாநாட்டின் இணைய கருத்தரங்குகளில் பங்கேற்க, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 2,600 பேர் பதிவு செய்திருந்தனர். இந்தியாவில் இருந்து 3,200 குழு உறுப்பினர்கள், 22,500 கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்றனர். கடந்த அக்டோபர் 3ம் தேதி தொடங்கிய விவாதங்கள், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31ம் தேதி நிறைடைந்தது. கடந்த மாதம் 3 தேதி முதல் 25ம் தேதி வரை, 722 மணி நேரம் நடந்த விவாதங்களை பல்வேறு நிறுவனங்கள் நடத்தின. இவற்றை, நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. சரஸ்வத், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே.விஜய் ராகவன் தலைமையிலான ஆலோசனை குழு ஆய்வு செய்தது.
வைபவ் மற்றும் தற்சார்பு இந்தியா: தற்சார்பு இந்தியாவுக்கான ஆராய்ச்சி திறனை அமைப்பதற்கு, வைபவ் உச்சி மாநாடு வழிவகுத்தது. உலகளாவிய நன்மைக்கு, இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் பங்களிப்பை வழங்குவதற்கு, இந்திய மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி முன்னோக்கு மற்றும் கல்வி திறன்களை அளித்துள்ளனர். கம்ப்யூட்டர் துறையில் ஒரு எளிதான கலந்துரையாடும் முறையை, வைபவ் உச்சிமாநாடு உருவாக்கியுள்ளது. மேலும் ஒத்துழைப்பு மற்றும் தலைமைத்துவ வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது. இது அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில், கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், பொது நிதியுதவி பெற்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினருக்கும் ஒரு பெரிய முன் முயற்சியாகும்.
பரந்தளவிலான கலந்துரையாடல்:
இந்த வைபவ் உச்சிமாநாட்டில், பல பிரிவுகளின் கீழ் பரந்தளவிலான கலந்துரையாடல்கள் நடந்தன. கல்வி மற்றும் அறிவியல் கருத்தரங்க வரலாற்றில் முதல் முறையாக நடந்த பல விஷயங்கள், இந்த உச்சிமாநாட்டில் நடந்தன. 23 நாட்களில் , 18 பகுதிகள், 80 பாட பிரிவுகள், 230 குழு விவாதங்கள் நடந்தன.
குழு உறுப்பினர்களில் 45% பேர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள். 55% பேர் இந்திய கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள். மேலும், முறையான குழு சந்திப்புக்கு முன், தயார் நிலை மற்றும் பயிற்சி விவாதங்கள் 200 மணி நேரம் நடந்தன. இந்த மாநாட்டில் 71 நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பங்கேற்றனர். இந்தியாவுக்கு இது ஒரு வகையான முன்முயற்சியாகும், இந்த மாநாட்டில் பரந்த அளவிலான தலைப்புகளில் மிகப் பெரிய அறிவியல் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. பங்கேற்பு, பகுதிகளின் அளவு, விவாதங்களின் தீவிரம், கலந்துரையாடல்கள் நடைபெற்ற மொத்த நேரம், நாடுகளின் எண்ணிக்கை மற்றும் பங்கேற்பாளர்களின் தரம் ஆகியவற்றைப் பொறுத்தவரை, இந்த வைபவ் உச்சிமாநாடு ஒரு தனி முத்திரை பதித்துள்ளது. அளவுகோலை உருவாக்கியுள்ளது.
இந்த உச்சிமாநாடு "சிறந்த ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி, பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் இணைத்து செழிப்பை உருவாக்குகிறது". கணக்கீட்டு அறிவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், ஃபோட்டானிக்ஸ், விண்வெளி தொழில்நுட்பங்கள், சுகாதாரம் மற்றும் மருத்துவ அறிவியல், மருந்து மற்றும் உயிரி தொழில்நுட்பம், வேளாண் பொருளாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு, பொருள் மற்றும் செயலாக்க தொழில்நுட்பங்கள், மேம்பட்ட உற்பத்தி, பூமி அறிவியல், ஆற்றல், சுற்றுச்சூழல் அறிவியல், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் பற்றி வைபவ் உச்சிமாநாட்டில் விவாதங்கள் நடந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669320
*********
(Release ID: 1669320)
(Release ID: 1669340)
Visitor Counter : 242