சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

பிஎஸ்6 வாகனங்கள் அறிமுகம் புரட்சிகரமான நடவடிக்கை: திரு பிரகாஷ் ஜவடேகர்

Posted On: 18 OCT 2020 7:10PM by PIB Chennai

காற்று மாசு மற்றும் அதை எதிர்கொள்ள மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், தனது முகநூல் பக்கத்தில் இன்று நேரடியாக கலந்துரையாடினார்.  பிரகாஷ் ஜவடேகரை கேளுங்கள், என்ற ஹேஸ்டாக் மூலம் மக்கள் அவரிடம் கேள்வி கேட்டு தங்கள் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.

இந்த கலந்துரையாடலில் பேசிய திரு பிரகாஷ் ஜவடேகர், காற்று மாசுவை குறைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்த முழுமையான அணுகுமுறை, நாடு முழுவதும் அமல்படுத்தப்படுவதாகவும், இதே அணுகுமுறையை தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 122 நகரங்களில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அமல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.  நாடு முழுவதும் 2024ம் ஆண்டுக்குள், பிஎம் 2.5 நுண் துகள் உட்பட காற்று மாசுவை 20 முதல் 30 சதவீதம் குறைக்க, தேசிய தூய்மை காற்று திட்டம் இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் அவர் கூறினார். 

காற்று மாசு பிரச்னை, உலகம் முழுவதும் இருப்பதாக கூறிய மத்திய அமைச்சர், இந்தியாவில் காற்று மாசுவுக்கு வாகனம் மற்றும் தொழிற்சாலை புகை, கட்டுமான இடங்களில் ஏற்படும் தூசி, குப்பை எரிப்பு, அறுவடைக்கு பிந்தைய எரிப்பு, மோசமான கழிவு மேலாண்மை போன்றவை  காரணமாக உள்ளது என தெரிவித்தார்.  வட இந்தியாவில் குளிர்காலத்தில், பனி மூட்டத்துடன் இந்த புகை மற்றும் தூசி ஒன்றாக கலக்கும்போது, காற்று மாசு மேலும் அதிகரிக்கிறது என திரு. பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

காற்று மாசுவை கட்டுப்படுத்த, மத்திய அரசு பல நடவடிக்கைகளை அமல்படுத்தி வருவாதக முகநூல் நேயர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.  இதன் மூலம் மாசில்லா காற்று நாட்கள் இந்தாண்டில் 218 ஆக அதிகரித்தது என்றும், இது கடந்த 2016ம் ஆண்டில் 106 நாட்களாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் இந்தாண்டு ஏப்ரல் முதல் பிஎஸ் 6 தர குறியீடுடன்வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது புரட்சிகரமான நடவடிக்கை என்றும், இது வாகன புகையை குறைக்க பெருமளவில் உதவியாகவும், அமைச்சர் கூறினார். பிஎஸ் 6 எரிபொருள், டீசல் கார்களில் நைட்ரஜன் ஆக்சைடு அளவை 70 சதவீதமும், பெட்ரோல் வாகனங்களில் 25 சதவீதமும், வாகனங்களில் காரியம் அளவை  80 சதவீதம் குறைக்கிறது.

காற்று மாசுவை குறைக்க, மக்கள் தங்கள் சொந்த வாகனங்களை பயன்பாட்டை குறைத்து, மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் எனவும், சுத்தமான எரிபொருள் வாகனங்களுக்கு மாற வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665693

**********************



(Release ID: 1665697) Visitor Counter : 276