மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஏசியான் பி.எச்.டி கல்வி உதவித் தொகை திட்ட மாணவர்களிடம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேச்சு

Posted On: 16 OCT 2020 2:30PM by PIB Chennai

ஆசியான் பி.எச்.டி கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த 1000 மாணவர்களுக்கு  மத்திய அரசு நிதியளிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் ஆசியான் நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களிடம், மத்திய கல்வி அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.  இந்தியாவின் உ.யர்கல்வி நிறுவனங்களான ஐஐடிகளில் , ஆராய்ச்சி படிப்புக்காக அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து  தெரிவித்தார். மத்திய கல்வி இணையமைச்சர் திரு.சஞ்சே தோத்ரே, ஆசியான் நாடுகளின் தூதர்கள் மற்றும் பிரதிநிதிகள், உயர்கல்வித் துறை செயலாளர் திரு. அமித் காரே  உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆசியான் மாணவர்களை வரவேற்று பேசிய மத்திய கல்வி அமைச்சர், இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இடையேயான கல்வி மற்றும் ஆராய்ச்சி உறவுகள்  இருதரப்புக்கும் பயனளிக்கும் என்றார்.  இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி துறையில் இணைந்து செயல்பட ஏசியான் பி.எச்.டி கல்வி உதவித் தொகை திட்டம் வழி வகுக்கும் என்றார்.  இந்த மாணவர்கவளின் ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள், உலகம் முழுவதும் மனித சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு பயன்படும் என அவர் கூறினார்.

தற்போதைய கொரோனா தொற்றால், உலகம் மந்தநிலையை அடைந்தாலும், ஐஐடிக்கள், தங்கள்  ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு பணிகளை நிறுத்தாமல், தொடர்ந்து  மேற்கொண்டு நாட்டுக்கு உதவின என அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் உள்ள ஐஐடிக்களில் படிக்கும் வாய்ப்பை ஆசியான் மாணவர்கள் பெற்றுள்ளனர்  என்றும், அவர்களின் ஆராய்ச்சி திட்டங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் கூறினார்.

ஆசியான் பி.எச்.டி கல்வி உதவித் தொகை திட்டத்தை கடந்த 2018ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு,  10 ஆசியான் நாடுகளின் தலைவர்கள் இடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவித்ததை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்கிரியால் சுட்டிக் காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665089

**********************



(Release ID: 1665117) Visitor Counter : 115