பிரதமர் அலுவலகம்

ரெய்ஸ் 2020- செயற்கை நுண்ணறிவு குறித்த பிரம்மாண்ட மெய்நிகர் மாநாட்டை பிரதமர் தொடங்கிவைத்தார்


உலக அளவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா முன்னோடியாக திகழும்: பிரதமர்

செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய திட்டத்தால் சமுதாய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்: பிரதமர்

Posted On: 05 OCT 2020 8:51PM by PIB Chennai

ரெய்ஸ் 2020 என்ற செயற்கை நுண்ணறிவு குறித்த பிரம்மாண்ட மெய்நிகர் மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.  சுகாதாரம், வேளாண்மை, கல்வி, திறன்மிகு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் செயற்கை நுண்ணறிவின் மூலம் சமூக மாற்றம், உள்ளிணைப்பு, அதிகாரமளித்தல்  குறித்து இந்த சர்வதேச மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்க நடத்தப்படும் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களை பிரதமர் பாராட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் தொழில்நுட்பம், நமது தொழில் இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது  என்று கூறினார். சமூகப் பொறுப்பும் செயற்கை நுண்ணறிவும் சேர்ந்த இக்கூட்டணி, இயற்கை நுண்ணறிவில் மனிதத்தன்மையை மேம்படுத்தும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவும்  மனிதர்களும் இணைந்து, நம் கிரகத்திற்கு பிரமிக்க வைக்கும் செயல்களைத் தரலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அறிவுசார் மற்றும் கற்றல் துறையில் இந்தியா ஏற்கனவே பிற நாடுகளைவிட முன்னிலை வகிப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், டிஜிட்டல் துறையில் நம் நாடு மேலும் சிறந்து விளங்கி உலகை வியக்கச் செய்யும் என்று கூறினார்.

வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தவும், சேவை புரிவதிலும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை இந்தியா ஏற்கனவே உணர்ந்து செயல்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உலகின் தலைசிறந்த தனித்துவ அடையாள திட்டமான ஆதார் மூலம் நிதி சேவைகள் உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை ஏழை எளியவர்களையும் சென்று சேர்ந்துள்ளதாக பிரதமர் கூறினார். கொரோனா காலத்தில் ஏழைகளுக்கு எளிதில் உதவிபுரிய இத்திட்டம் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா உலகிலேயே சிறந்த நாடாக விளங்கும் என்று தான்விரும்புவதாக குறிப்பிட்ட பிரதமர், இதை நனவாக்க ஏராளமான இந்தியர்கள் இத்துறையில் உழைப்பார்கள் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். கூட்டு முயற்சி, நம்பிக்கை, பொறுப்பு தன்மை முதலியவற்றை  பின்பற்றி இந்த இலக்கை எட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தியா அண்மையில் தேசிய கல்வி கொள்கை 2020 ஐ ஏற்றுக் கொண்டுள்ளதை குறிப்பிட்ட பிரதமர், இதன்மூலம் திறன் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பிராந்திய மொழிகளில் மின்னணு சார்ந்த பாடப்பிரிவுகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இளைஞர்களுக்கான பொறுப்புமிக்க செயற்கை நுண்ணறிவு என்னும் திட்டம் இந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டதாக கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்த திட்டத்தின் கீழ், 11,000க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் அடிப்படை பாடத்தை கற்றுத் தேர்ந்துள்ளதாகவும், தற்போது அவர்கள் செயற்கை நுண்ணறிவு திட்டங்களை கட்டமைத்து வருவதாகவும் கூறினார்.

தேசிய கல்வி தொழில்நுட்ப கருத்துக்களம் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும், இதன் மூலம் டிஜிட்டல் உள்கட்டமைப்புபோன்றவை மேம்படுத்தப்பட்டு, மின்னணு சார்ந்த கல்வியை மேலும் ஊக்குவிக்க முடியும் என்றும் அவர்  தெரிவித்தார்.

சமுதாய பிரச்சனைகளுக்கு தீர்வு காண, செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய திட்டம் பெரும் துணையாக இருக்கும் என்றார் அவர்.

போக்குவரத்து நெரிசலை குறைப்பது, பாதாள சாக்கடை திட்டத்தை மேம்படுத்துவது, பேரிடர் மேலாண்மை திட்டங்களை வலுப்படுத்துவது, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் களைய இந்த செயற்கை நுண்ணறிவு உதவிகரமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மனிதனின் கற்பனைத் திறனும் உணர்ச்சிகளும் நமது பலம் என்று கூறிய பிரதமர் அவை இயந்திரங்களை விட பலம் வாய்ந்தவை என்று தெரிவித்தார். இதனை கருத்தில் கொண்டு செயற்கை நுண்ணறிவை விட மனித ஆற்றலை வளப்படுத்தும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

ஒவ்வொருவரின் தனித்தன்மையை வெளிக்கொணர இந்த செயற்கை நுண்ணறிவு ஏதுவாக அமையும் என்றும் இதனை பயன்படுத்தி சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

**********************



(Release ID: 1661912) Visitor Counter : 279