பிரதமர் அலுவலகம்

இந்தியா-டென்மார்க் இருதரப்பு மெய்நிகர் உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் மொழியாக்கம்

Posted On: 28 SEP 2020 5:25PM by PIB Chennai

மேன்மை தங்கிய பிரதமர் அவர்களே, வணக்கம்,

இந்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் பேசும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். முதலில், கோவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு,  டென்மார்க்கில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிக்கலைத் திறம்படச் சமாளிக்கும் உங்கள் தலைமைத் திறனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல நிகழ்ச்சிகளுக்கு இடையே, இந்த பேச்சு வார்த்தைக்கு நேரம் ஒதுக்கியதில் இருந்து, நீங்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தியதையும், நமது இருதரப்பு உறவுகள் பற்றிய தங்கள் உறுதிப்பாட்டையும் காணமுடிகிறது.

உங்களுக்கு அண்மையில்தான் திருமணம் நடந்துள்ளது. அதற்காக, எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோவிட்-19 தொற்று பாதிப்பு நிலைமை சீரடைந்ததும், உங்களது குடும்பத்தினருடன், உங்களை இந்தியாவுக்கு வரவேற்கும் வாய்ப்பை நாங்கள் பெறுவோம் என நம்புகிறேன். உங்கள் மகள் இடா, மீண்டும் இந்தியாவுக்கு வருகை தர நிச்சயம் ஆர்வம் கொண்டிருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு, நாம் தொலைபேசி மூலம் நடத்திய பேச்சு வார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்தியாவுக்கும், டென்மார்க்குக்கும்  இடையே பல துறைகளில் ஒத்துழைப்பு மேலும் அதிகரிப்பது பற்றி நாம் விவாதித்தோம்.

அந்த நோக்கங்களுக்கு இந்த மெய்நிகர் உச்சிமாநாட்டின் மூலம், நாம் புதிய திசையையும், உத்வேகத்தையும்  அளித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். நான் குஜராத் முதலமைச்சராக இருந்த , 2009-ம் ஆண்டு முதல் டென்மார்க், ‘துடிப்புமிக்க குஜராத்’ உச்சிமாநாட்டில் பங்கேற்று வருகிறது. இதனால், டென்மார்க்குடன் எனக்கு சிறப்பு பிணைப்பு உள்ளது. இரண்டாவது இந்தியா- நோர்டிக் உச்சிமாநாட்டை டென்மார்க் நடத்த உத்தேசித்திருப்பதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். நிலைமை சீரடைந்ததும் டென்மார்க் வந்து உங்களைச் சந்திப்பது எனக்கு பெருமையளிப்பதாகும்.

மேன்மை தங்கிய பிரதமரே, விதிமுறைகள் அடிப்படையிலான, வெளிப்படையான, மனித நேய , ஜனநாயக மாண்பு முறையை பகிர்ந்து கொள்ளும் நம்மைப் போன்ற ஒத்த கருத்துடைய நாடுகள் ஒன்று சேர்ந்து பணியாற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதை கடந்த பல மாதங்களாக நடந்து வரும் நிகழ்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

ஒத்த கருத்துடைய நாடுகளுக்கு இடையே, தடுப்பூசி உருவாக்குவதில் ஒத்துழைப்பானது, பெருந்தொற்றைச் சமாளிக்க உதவும். இந்த தொற்று காலத்தில், இந்தியாவின் மருந்து உற்பத்தித் திறன் உலகம் முழுமைக்கும் உதவிகரமாக இருந்து வருகிறது. தடுப்பூசி உருவாக்குவதிலும், இத்தகைய நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

‘தற்சார்பு இந்தியா’ இயக்கத்தின் முயற்சியால், முக்கிய பொருளாதார துறைகளில் இந்தியாவின் திறன் அதிகரித்துள்ளதுடன், உலகத்துக்கே சேவை புரியவும் முடிந்துள்ளது.

இந்தப் பிரச்சாரத்தின் கீழ், அனைத்து மட்டத்திலும் சீர்திருத்தங்களை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்தியாவில் இயங்கி வரும் நிறுவனங்கள் இந்த ஒழுங்குமுறை மற்றும் வரி சீர்திருத்தங்களால் பயனடையும். மற்ற துறைகளிலும் சீர்திருத்தங்களை மேற்கொள்வது நடைபெற்று வருகிறது. அண்மையில், வேளாண் மற்றும் தொழிலாளர் துறையில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேன்மை தங்கிய பிரதமர் அவர்களே, உலக விநியோகச் சங்கிலி, ஒற்றை ஆதாரத்தை மட்டுமே அதிகமாக நம்பி இருப்பது அபாயகரமானது என்பதை கோவிட்-19 காட்டியுள்ளது.

விநியோகச் சங்கிலியைப் பல்வகைப்படுத்துதல் மற்றும் விரிதிறனை ஏற்படுத்துல் ஆகியவற்றில் நாங்கள், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறோம். ஒத்த கருத்துடைய நாடுகளும் இந்த முயற்சியில் சேரலாம்.

இந்தச் சூழலில், நமது மெய்நிகர் உச்சிமாநாடு, இந்தியா,  டென்மார்க் உறவுகளுக்கு  பயன் விளைவிப்பதுடன், உலக சவால்களை நோக்கிய பொதுவான அணுகுமுறையை கட்டமைப்பதிலும் உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

தங்களது நேரத்தை இதற்கு ஒதுக்கியதற்காக மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்.

இப்போது, உங்களது தொடக்க கருத்தைத் தெரிவிப்பதற்கு உங்களை வரவேற்கிறேன்.

*************************



(Release ID: 1659983) Visitor Counter : 131