பிரதமர் அலுவலகம்

மெய்நிகர் இருதரப்பு உச்சிமாநாடு குறித்து இந்தியா-இலங்கை கூட்டறிக்கை

Posted On: 26 SEP 2020 6:21PM by PIB Chennai
  1. பிரதமர் திரு நரேந்திர மோடி, இலங்கை பிரதமர் மேதகு மஹிந்த ராஜபக் இன்று மெய்நிகர் உச்சி மாநாடு ஒன்றை நடத்தினர். அவர்கள், இருதரப்பு உறவுகள்; பரஸ்பரம் கவனம் செலுத்த வேண்டிய மண்டல, சர்வதேச விவகாரங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதித்தனர்.

 

  1. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமராக பொறுப்பேற்றமைக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக், பிரதமர் மோடியுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கு ஆர்வம் தெரிவித்தார்.

 

  1. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவும், 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்வும், இந்தியாவிற்கு மேற்கொண்ட அரசு முறை சுற்றுப்பயணம் குறித்து, இரு தலைவர்களும் நினைவு கூர்ந்தார்கள். இந்த வருகைகள் தெளிவான அரசியல் திசையையும், இருதரப்பு உறவுகளின் எதிர்காலம் குறித்த தொலைநோக்கு பார்வையையும் அளித்தன.

 

  1. மண்டலத்தில் உள்ள நாடுகளில் பரஸ்பர ஆதரவும் உதவியும் என்ற தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் கொவிட் 19 பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தை நடத்துவதற்கு வலுவான தலைமையை வெளிப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு, பிரதமர் மகிந்த ராஜபக், பாராட்டு தெரிவித்தார். தற்போதைய நிலைமை, இருதரப்பு உறவுகளுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும் வாய்ப்பை நல்கியுள்ளதாக இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். கொவிட் பெருந்தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவும் இலங்கையும் வெகு நெருக்கமாகப் பணியாற்றுவது குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதார, பொருளாதார பாதிப்புகளைக் குறைப்பதற்கு, இலங்கைக்கு, இயன்ற அனைத்து உதவிகளையும் இந்தியா தொடர்ந்து அளிக்கும் என்று பிரதமர் மோடி மீண்டும் உறுதிளித்தார்.

 

  1. இருதரப்பு உறவுகளுக்கு மேலும் வலுவூட்டுவதற்காக இரு தலைவர்களும் ஒப்புக் கொண்ட விவரங்கள் பின்வருமாறு:

 

  1. புலனாய்வு, தகவல் பகிர்வு, தீவிரவாதத்தை அகற்றுவது, திறன் வளர்த்தல் ஆகியவை உட்பட பல துறைகளிலும், தீவிரவாதத்தை எதிர்ப்பது, போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பது ஆகியவற்றிலும் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது

 

  1. இலங்கை அரசு மற்றும் இலங்கை மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ள, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய துறைகளில், பயனுள்ள வகையில், திறமையான மேம்பாட்டுக்காக ஒத்துழைத்தல்; 2020 - 2025 ஆண்டு காலங்களில் அதிக பலனளிக்கும் சமூக மேம்பாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைத்தீவில் மேலும் அதிக அளவில் செயல்பாடுகளை மேற்கொள்வது.

 

  1. 2017ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி இலங்கை சென்றிருந்தபோது அறிவிக்கப்பட்டபடி இலங்கை தோட்டப் பகுதிகளில் 10 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை விரைந்து நிறைவடையச் செய்வதற்காக இணைந்து பணியாற்றுதல்.

 

  1. இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை அதிகரிப்பதற்காக அவற்றுக்கு ஏதுவான ஒரு சூழலை அமைப்பது. கொவிட் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களின் பின்னணியில் பொருள் வழங்கு தொடரை ஒருங்கிணைப்பதை விரிவுபடுத்துவது.

 

  1. இருதரப்பு ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் படி நெருக்கமான கலந்தாலோசனை மூலமாக துறைமுகங்கள், எரிசக்தி ஆகியவை உட்பட பல துறைகளிலும் கட்டமைப்பு மற்றும் இணைப்புத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ளுதல்; இரு நாடுகளுக்குமிடையே பரஸ்பரம் நன்மை பயக்கக்கூடிய, வளர்ச்சி ஒத்துழைப்பு கூட்டு முயற்சிக்கு வலுவான பொறுப்பேற்பது.

 

  1. இந்தியா வழங்க உள்ள அமெரிக்க டாலர் 100 மில்லியன் கடன் உதவி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறையில், குறிப்பாக சூரிய சக்தித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது.

 

  1. வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, அறிவியல், தொழில்நுட்பம், ஆயுஷ் (ஆயுர்வேதம், யுனானி, சித்த வைத்தியம், ஹோமியோபதி), ஆகியவற்றுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்; இரு நாடுகளுக்கும் இடையே புவியியல் ரீதியாக உள்ள நன்மைகளை முழுமையாக பயன்படுத்தும் வண்ணம், பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அதிக அளவு பயிற்சிகளின் மூலம் திறன் மேம்பாட்டை அதிகரித்தல்.

 

  • viii. புத்தம், ஆயுர்வேதம், யோகா போன்ற இரு நாடுகளுக்கும் பொதுவான பாரம்பரிய விஷயங்களிலும், நாகரீக தொடர்புகளிலும் உள்ள வாய்ப்புகளைக் கண்டறிந்து இரு நாட்டு மக்களுக்கிடையேயான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துதல்; புத்தத்தின் முக்கியத்துவம் கருதி சர்வதேச விமான நிலையமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட குஷிநகர் விமான நிலையத்திற்கு வரவிருக்கும் முதலாவது சர்வதேச விமானத்தில் இலங்கையிலிருந்து புத்த யாத்ரீகர்கள் கொண்ட பிரதிநிதிகள் குழு, புனித நகரமான குஷி நகருக்கு வருகை தருவதற்கு இந்திய அரசு வகை செய்யும்.

 

  1. கொவிட் பெருந்தொற்று அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில், இடைக்கால வான்வழி போக்குவரத்தை விரைவில் ஏற்படுத்துவது; இணைப்பு வசதிகளை அதிகரிப்பது ஆகியவற்றின் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவது.

 

  1. தற்போதுள்ள வரையறைப்படியும், ஐநா தொடர் மேம்பாட்டு குறிக்கோள்கள் உட்பட பகிர்ந்து கொள்ளப்பட்ட குறிக்கோள்களின் படியும் இருதரப்பு வழியாகவும், தொடர்ந்த கலந்தாலோசனைகளின் மூலமும் மீனவர்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து தொடர்ந்து விவாதித்தல்.

 

  1. இரு நாடுகளுக்கிடையே ராணுவப் பணியாளர்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளுதல், கடல்வழி பாதுகாப்பு ஒத்துழைப்பு; இராணுவம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இலங்கைக்கு ஆதரவு அளித்தல் ஆகியவை உட்பட பல்வேறு முயற்சிகள் மூலமாக இரு தரப்பிலும் இராணுவப் படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது


 

  1. இருநாடுகளுக்கும் இடையே உறவுகளை மேம்படுத்துவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டாலர் மானிய உதவியை இந்தியா வழங்குவது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பிரதமர் மஹிந்த ராஜபக் வரவேற்பு தெரிவித்தார். புத்த மடாலயங்களைக் கட்டுதல், புதுப்பித்தல்; திறன் வளர்த்தல், கலாச்சாரப் பரிவர்த்தனை, தொல்பொருள் அகழ்வாராய்ச்சி ஒத்துழைப்பு, புத்தருடைய நினைவுப் பொருட்களை பார்வைக்கு வைத்தல், புத்த அறிஞர்களையும் புத்த துறவிகளை ஈடுபடுத்துவதையும் வலுப்படுத்துதல் ஆகியவை மூலமாக புத்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே மக்களுக்கிடையேயான பிணைப்பை ஆழப்படுத்த இந்த மானியம் உதவும்.

 

  1. ஒன்றுபட்ட இலங்கையில், இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சமரசத்திற்கான பல்வேறு முறைகளை முன்னெடுத்துச் செல்வது உட்பட சமத்துவம், நீதி, அமைதி, மரியாதை ஆகியவை வேண்டும் என்று விரும்பும் தமிழ் மக்களின் விருப்பங்கள் குறித்து இலங்கை அரசு விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

 

  1. தமிழர்கள் உட்பட அனைத்து இனவாத குழுக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வது தொடர்பாக இலங்கை, பணிகளை மேற்கொள்ளும் என்றும், அரசியல் சாசன சட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது, இலங்கை மக்கள் அளித்துள்ள தேர்தல் தீர்ப்புகள் ஆகியவற்றுக்கு ஏற்ப அனைத்து குழுக்களும் சமரசத்தை அடையமுடியும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக் நம்பிக்கை தெரிவித்தார்.

 

  1. இருதரப்பு தொடர்பான மண்டல, சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக சார்க், பி எம் எஸ் டி இ சி, ஐ ஓ ஆர் ஏ, ஐநா அமைப்பு ஆகிய வரையறைகளுக்கு உட்பட்டு பல கருத்துக்களில் ஒருமித்த கருத்துகள் அதிகரித்து வருவதாக இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

 

  1. தெற்கு ஆசியாவையும், தென்கிழக்கு ஆசியாவையும் இணைப்பதற்கான மண்டல ஒத்துழைப்புக்கான முக்கிய தளமாக பிஐ எம் எஸ் டி இ சி விளங்குகிறது என்பதை அங்கீகரித்ததோடு இலங்கையின் தலைமையில் பி ஐஎம் எஸ் டி இ சி உச்சி மாநாடு ஒன்றை வெற்றிகரமாக நடத்த இணைந்து பணியாற்றவும், இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.2021-2022 காலத்திற்கு ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக சர்வதேச சமுதாயத்திடமிருந்து கிடைத்த வலுவான ஆதரவுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரதமர் மகிந்த ராஜபக் வாழ்த்து தெரிவித்தார்.


****

 

 


(Release ID: 1659696) Visitor Counter : 202