பிரதமர் அலுவலகம்

கதை சொல்லலின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் வலியுறுத்தல்

Posted On: 27 SEP 2020 1:35PM by PIB Chennai

தனது மனதின் குரல் நிகழ்ச்சியின் புதிய உரையில், கதை சொல்லலின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்து, வலியுறுத்தினார்.

மனித நாகரிகம் எத்தனை தொன்மையானதோ அதே அளவுக்குத் தொன்மையானது கதைகளின் வரலாறும் என்று கூறிய அவர்,

எங்கே ஆன்மா இருக்கிறதோஅங்கே ஒரு கதையும் உண்டு என்றார்.

கதைகள், மனிதர்களின் படைப்பாற்றலையும், புரிந்துணர்வையும் முன்னிறுத்துகின்றன.  ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்டும் வேளையிலோ, அந்தக் குழந்தையைத் தூங்க வைக்கும் வேளையிலோ கதைகளின் வல்லமை என்ன என்பதை நம்மால் பார்க்கமுடியும், உணர முடியும் என்றும பிரதமர் கூறினார்.

"நான் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை சுற்றித் திரியும் ஒரு துறவியைப் போலவே வாழ்ந்து வந்திருக்கிறேன்.  ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கிராமம், புதிய மனிதர்கள், புதிய குடும்பங்கள் என என் வாழ்க்கை இருந்து வந்தது.  நான் குடும்பங்களின் மத்தியில் இருக்கும் போது, குழந்தைகளோடு கண்டிப்பாக அளவளாவுவேன், சில வேளைகளில், சரி நீங்கள் எனக்கு ஒரு கதை சொல்லுங்களேன் என்று கேட்பேன்.  இல்லைங்க, நாங்கள் கதை சொல்லவில்லை, நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்கிறோம், நீங்களும் எங்களுக்கு ஏதாவது நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்லுங்கள் என்பார்கள்.   அதாவது அவர்களுக்குக் கதைகள் பற்றி எந்த ஒரு அறிமுகமும் இல்லை என்பதைப் பார்த்த போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.  அவர்களுடைய பெரும்பாலான வாழ்க்கை நகைச்சுவைத் துணுக்குகளோடே குறுகிப் போயிருந்தது," என்று அவர் கூறினார்.

 

கதை சொல்லுவது என்ற ஒரு வளமான பாரம்பரியத்தின் சொந்தக்காரர்கள் நாம். நம் நாட்டிலே ஹிதோபதேசம், பஞ்சதந்திரம் போன்ற பாரம்பரியம் உடையவர்கள் என்பது நமக்குப் பெருமிதம் அளிக்கும் விஷயம்.  இங்கே பசு பட்சிகள், தேவதைகள் அடங்கிய ஒரு கற்பனைமயமான உலகம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது.  இதன் மூலம் விவேகம், புத்திக்கூர்மை நிறைந்த விஷயங்களை எளிதாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

நம்நாட்டிலே கதைகளுக்கான ஒரு பாரம்பரியமே உண்டு.  சமயக்கதைகளைச் சொல்வதற்கெனவே ஒரு பழமையான வழிமுறை உண்டு.  இதிலே, கதாகாலக்ஷேபமும் அடங்கும்.  நம் நாட்டிலே பலவகையான நாட்டுப்புறக் கதைகள் புழக்கத்தில் இருக்கின்றன.  தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கதைகள் சொல்லும் மிக சுவாரசியமான பாணி இருக்கிறது.  இதை வில்லுப்பாட்டு என்று அழைக்கிறோம்.  இதிலே கதைகளும், இசையும் என்ற மிகக் கவர்ச்சிகரமான இணைவு காணப்படுகிறது.  இந்தியாவில் பொம்மலாட்டம் என்ற ஒரு உயிர்ப்புடைய பாரம்பரியமும் உண்டு.  இப்போதெல்லாம் அறிவியல் மற்றும் அறிவியல் புதினத்தோடு இணைந்த கதைகளைச் சொல்லும் பாங்கு, மக்கள் மத்தியிலே மிகவும் பிரபலமடைந்து வருகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

பலர் கிஸ்ஸாகோயி என்ற கதை சொல்லும் கலையை முன்னெடுத்துச் செல்ல மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.  gaathastory.in என்ற ஒரு இணையதளம் பற்றிய தகவல்கள் கிடைத்தன, இதை அமர் வ்யாஸ் அவர்களோடு வேறு சிலரும் நடத்தி வருகிறார்கள்.  அமர் வ்யாஸ் அவர்கள் ஐ.ஐ.எம். அஹ்மதாபாதில் எம்.பி.ஏ. படிப்பு படித்த பிறகு அயல்நாடுகளுக்குச் சென்று, மீண்டும் நாடு திரும்பினார்.  இப்போது பெங்களூரூவில் அவர் வசித்து வருகிறார், சில நேரம் ஒதுக்கி கதைகளின் உலகத்தோடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.  இந்த வகையாக, அவர் மிக சுவாரசியமான ஒரு பணியை ஆற்றி வருகிறார்.  இவருடைய முயற்சியைப் போலவே வேறு பலரும் ஊரகப்பகுதி இந்தியாவின் கதைகளை மிகச் சிறப்பான வகையிலே பிரபலப்படுத்தி வருகின்றார்கள்.  வைஷாலீ வ்யவஹாரே தேஷ்பாண்டே போன்ற பலர் இதை மராட்டி மொழியிலும் வெகுஜனங்களின் விருப்பமாக மாற்றி வருகிறார்கள் என்று பிரதமர் தெரிவித்தார்.

"சென்னையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா வீரராகவன் அவர்களும் நமது கலாச்சாரத்திற்கு இசைவான கதைகளைப் பரப்பி வருவதில் ஈடுபட்டிருக்கிறார்.  இதே போல கதாலய் மற்றும் The Indian Story Telling Network என்ற பெயர் கொண்ட இரண்டு இணைய தளங்களும் இந்தத் துறையில் மிகச் சிறப்பான பணிகளை ஆற்றி வருகின்றன.  கீதா ராமானுஜன் அவர்கள் kathalaya.orgயில் கதைகளை ஒன்று திரட்டியிருக்கிறார்.  அதே வேளையில் The Indian Story Telling Network வாயிலாகவும் பல்வேறு நகரங்களில் பல்வேறு கதை சொல்பவர்களுடைய ஒரு வலைப்பின்னலும் தயார் செய்யப்பட்டு வருகிறது.   பெங்களூரூவில் விக்ரம் ஸ்ரீதர் என்பவர், அண்ணலோடு தொடர்புடைய கதைகளில் உற்சாகம் காட்டி வருகிறார்.  மேலும் பலர் இந்தத் துறையில் செயலாற்றிக் கொண்டிருக்கலாம்.  கண்டிப்பாக நீங்கள் அவர்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 பெங்களூரு கதை சொல்லும் சங்கத்தைச் சேர்ந்த சகோதரி அபர்ணா ஆத்ரேயாவுடனும், பிற உறுப்பினர்களுடனும் பிரதமர் உரையாடினார்.


(Release ID: 1659624) Visitor Counter : 351