இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய விளையாட்டு விருதுகளுக்கான பரிசுத்தொகை உயர்த்தி வழங்கப்படுமென மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.கிரன் ரிஜிஜு அறிவித்துள்ளார்
Posted On:
29 AUG 2020 6:14PM by PIB Chennai
ஹாக்கி ஜாம்பவான் காலஞ்சென்ற மேஜர் தயான் சந்தின் பிறந்தநாள், தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, புதுதில்லி தயான்சந்த் விளையாட்டரங்கில் உள்ள அவரது சிலைக்கு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.கிரன் ரிஜிஜு இன்று (29 ஆகஸ்ட்,2020) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
![](https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001YYU9.jpg)
இந்த நிகழ்ச்சியின் போது, 7 வகையான தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகளில் 4 விளையாட்டுகளுக்கான பரிசுத்தொகை உயர்த்தி வழங்கப்படுமென, திரு.கிரன் ரிஜிஜு அறிவித்தார். ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கான பரிசுத்தொகை, முந்தைய ரூ.7.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாகவும், அர்ஜுனா விருதுக்கு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாகவும், துரோணாச்சார்யா(வாழ்நாள் சாதனை) விருதுக்கு இதற்கு முன் வழங்கப்பட்டு வந்த ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாகவும், துரோணச்சார்யா(வழக்கமான) விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும். தயான்சந்த் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சத்திற்குப் பதிலாக, ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
![](https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image002ZGNU.jpg)
இந்த முடிவு குறித்துப் பேசிய திரு.ரிஜிஜு, “விளையாட்டு விருதுகளுக்கான பரிசுத்தொகை, கடைசியாக 2008-இல் மாற்றியமைக்கப்பட்டது. இந்த பரிசுத்தொகை, குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குவோரின் வருவாய் உயர்ந்து வரும் வேளையில், நமது விளையாட்டு வீரர்களுக்கு ஏன் உயர்த்தி வழங்கக்கூடாது” என்றார்.
*******
(Release ID: 1649750)
Visitor Counter : 172