எஃகுத்துறை அமைச்சகம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் வீட்டு வசதி வழங்குவதற்கு அரசுடன் இணைந்து செயலாற்ற வருமாறு ஸ்டீல் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு திரு. தர்மேந்திர பிரதான் வேண்டுகோள்

Posted On: 18 AUG 2020 2:25PM by PIB Chennai

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் வீட்டு வசதி வழங்குவதற்கு அரசுடன் இணைந்து செயலாற்ற வருமாறு ஸ்டீல் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு மத்திய ஸ்டீல், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்தார்.  “ஆத்மநிர்பார் பாரத்: வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் விமானத்தொழில் பிரிவில் ஸ்டீல் பயன்பாட்டை அதிகரித்தல்” என்ற வெபினாரில் இன்று தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற உறவுகள் அமைச்சகத்தின் பொதுமக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்தை சுட்டிக்காட்டி பொதுத்துறை நிறுவனங்களும், ஸ்டீல் தொழிற்சாலை உரிமையாளர்களும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அரசு இந்தத் திட்டத்தன் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்டித்தர இலக்கு நிரணயித்துள்ளது.  இதில் ஸ்டீல் தொழிற்பிரிவு அதிக அளவில் ஸ்டீலைப் பயன்படுத்தி குறைந்த செலவிலான வீடுகளை அதிகமாகக் கட்டித் தந்து மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.  சுயசார்பு இந்தியா இயக்கமானது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கண்ணியத்தையும், சுயமரியாதையையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால் தொழிற்சாலைப் பிரிவினர் அரசின் இத்தகைய மக்கள் நல்வாழ்வு தொடர்பான முன்னெடுப்பு முயற்சிகளில் பங்கேற்க வேண்டுமென்று அமைச்சர் மேலும் கேட்டுக் கொண்டார்.

இந்த வெபினாரை ஸ்டீல் அமைச்சகமானது இந்தியத் தொழிற்கூட்டமைப்புடன் (CII) இணைந்து நடத்தியது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற உறவுகள் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), விமானப் போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் தொழில் இணையமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, எஃகுத்துறை இணையமைச்சர் திரு ஃபக்கன் சிங் கொலஸ்தே ஆகிய இருவரும் துவக்க அமர்வில் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.  எஃகு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற உறவுகள் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளின் செயலாளர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் அவற்றின் பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் தொழிற்சாலை தலைவர்கள், சிஐஐ-யின் மூத்தப் பொறுப்பாளர்கள் ஆகியோர் வெபினாரில் கலந்து கொண்டனர்.  திரு. தர்மேந்திர பிரதான் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற உறவுகள், விமானப் போக்குவரத்து அமைச்சகங்கள் மிகப்பெரும் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன என்றும், இந்த அமைச்சகங்களின் எதிர்காலத் திட்டங்கள் ஸ்டீல் தொழிற்சாலைக்கு உதவும் வகையில் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.  நாடு வளர்ச்சிப்பாதையில் பீடுநடை போட்டு வருவதால் நாட்டில் ஸ்டீல் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான கூடுதல் வாய்ப்புகள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.  அண்மையில் பிரதம மந்திரி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்த விரிவான சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்ற கருத்தைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் திரு.பிரதான் மாநிலங்களையும், தொழிற்சாலைகளையும் இது தொடர்பான தங்களது செலவை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.  இந்த செயல்திட்டங்கள் சிவப்புநாடா முறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வேகமாக நிறைவேற்றப்பட வேண்டிய தேவை இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

****


(Release ID: 1646732) Visitor Counter : 171