சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்தது வரலாற்று சாதனை

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 54,859 பேர் குணமடைந்துள்ளனர்
குணமடைந்தவர்களின் எண்ணிக்கைக்கும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் உள்ள இடைவெளி ஒன்பது லட்சத்துக்கும் கூடுதல்
இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து இன்று இரண்டு சதவீதமாகியுள்ளது

Posted On: 10 AUG 2020 11:52AM by PIB Chennai

இந்தியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்து வரலாற்று சாதனையாகியுள்ளது. தீவிர பரிசோதனை, தடம் அறிந்து சிகிச்சை அளிப்பது என்ற உத்தியை நடைமுறைப்படுத்தியதால்தான் 15,35,743 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்திருப்பது சாத்தியமாகியுள்ளது. சிறந்த ஆம்புலன்ஸ் சேவைகள், தரமான சிகிச்சை அளிப்பதில் கவனம், ஆக்சிஜன் பயன்பாடு ஆகிய காரணங்களால் நோயாளிகள் குணமடைவது அதிகரித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணிநேரத்தில், 54,859 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 70 சதவீதத்தை நெருங்கிவிட்டது.

கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 28.66 சதவீதத்தினருக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. மருத்துவக் கண்காணிப்பில் (6,34,945) உள்ளவர்களைவிட அதிகமாக ஒன்பது லட்சம் பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன்  ஒருங்கிணைந்து மத்திய அரசு மேற்கொண்ட, நோய் தொற்றை விரைவில் கண்டறிதல், தீவிர பரிசோதனை, தரமான மருத்துவ சிகிச்சை போன்ற நடவடிக்கைகளால், உயிரிழப்பு வீதத்தைக் குறைக்க முடிந்தது. இது இன்றைய நிலவரப்படி இரண்டு சதவீதமாகும், ஆனாலும், படிப்படியாக குறைந்து வருகிறது.

       கொவிட்-19 தொற்று பத்து மாநிலங்களில் மட்டும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.   இந்த மாநிலங்களிலிருந்து மட்டும் 80 விழுக்காடு புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர்.

 

------
 



(Release ID: 1644753) Visitor Counter : 221