சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஒரே நாளில் 7,19,364 பரிசோதனைகள் நடத்தி இந்தியா புதிய உச்சம் தொட்டது
மொத்த சோதனைகளின் எண்ணிக்கை தற்போது
2, 41, 06,535 ஆக உயர்ந்தது
Posted On:
09 AUG 2020 3:16PM by PIB Chennai
புதிய உச்சமாக, ஒரே நாளில் 7 லட்சத்துக்கும் அதிகமான சோதனைகளைச் செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் அதிகமான சோதனைகளை தொடர்ந்து பல நாட்களாக நடத்தி வந்த இந்தியாவின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் 7,19,364 சோதனைகள் நடைபெற்றன.
இது போன்ற அதிக அளவிலான சோதனைகள் காரணமாக, தினசரி பாதிப்பின் எண்ணிக்கை உயர்வதற்கு வழி ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களை விரிவாகக் கண்டறிந்து, அவர்களை உரிய முறையில் தனிமைப்படுத்தி, சிறந்த சிகிச்சை வழங்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு, “சோதனை, கண்டுபிடித்தல், சிகிச்சை அளித்தல்’’ என்ற மத்திய அரசின் உத்தியைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதிக இறப்பு விகிதம் உள்ள மாநிலங்களுடன், கடந்த வாரம் பல்வேறு முறை கூட்டம் நடத்தப்பட்டது.
இத்தகைய அணுகுமுறைக்கு உரிய பலன் கிட்டத்தொடங்கியது. குணமடைபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. சாதனை அளவாக, நேற்று, ஒரே நாளில் மட்டும் 53,879 பேர் கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இத்துடன், மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,80,884 என்ற மற்றொரு புதிய உச்சத்தை இந்தியா இன்று அடைந்துள்ளது. இது, தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்குக்கும் அதிகமாகும். (இன்று 6,28,747). குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட 2.36 மடங்காகும். தற்போது, பாதிக்கப்பட்டுள்ளவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தியோ அல்லது மருத்துவமனைகளில் அனுமதித்தோ தீவிர மருத்துவ கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, குணமடைந்தோர் விகிதம் உயர்ந்து இன்று 68.78 சதவீதமாக இருந்தது.
சிகிச்சை பெறுபவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் இடையிலான வித்தியாசம் அதிகரித்து வருகிறது. இன்று இந்த வித்தியாசம் 8,52,137 ஆக இருந்தது.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டு வருவதன் பலனாக அதிக அளவில் நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர். மத்திய அரசு அறிவுறுத்திய, மருத்துவ சிகிச்சை விதிமுறைகளின்படி, மருத்துவமனை மற்றும் சிகிச்சை மேலாண்மைக் கட்டமைப்பு உயர்ந்துள்ளது. இந்த முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளின் பயனாக, இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இன்று இறப்பு விகிதம் 2.01 சதவீதம் என்ற அளவில் குறைந்தது.
கோவிட்-19 குறித்த தொழில்நுட்ப விஷயங்கள், வழிகாட்டுதல்கள், அறிவுரைகள் பற்றிய அனைத்து அதிகாரப்பூர்வ, அண்மைத் தகவல்களுக்கு தயவுசெய்து இந்தத் தளங்களை அணுகவும்: https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA .
தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளை technicalquery.covid19[at]gov[dot]in என்ற தளத்துக்கு அனுப்பலாம். மற்ற கேள்விகளுக்கு ncov2019[at]gov[dot]in மற்றும் @CovidIndiaSeva என்ற தளங்களை அணுகலாம்.
கோவிட்-19 பற்றிய தகவல் ஏதேனும் தேவையென்றால், தொடர்பு கொள்ள வேண்டிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் உதவி மைய எண்கள்: +91-11-23978046 or 1075 ( கட்டணமில்லா தொலைபேசி). மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உதவிமைய எண்கள் பட்டியல் https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf என்ற தளங்களில் கிடைக்கும்
HFW/COVID Updates/9thAugust2020/1
*****
(Release ID: 1644709)
Visitor Counter : 214
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam