ஜவுளித்துறை அமைச்சகம்

ஆறாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மத்திய ஜவுளி மற்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி. ஸ்மிரிதி ஜூபின் இரானி வாழ்த்துகளை தெரிவித்தார்.

Posted On: 07 AUG 2020 4:17PM by PIB Chennai

ஆறாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மத்திய ஜவுளி மற்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி. ஸ்மிரிதி ஜூபின் இரானி இன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்திய அரசின் ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமதி. ஸ்மிரிதி இரானி, 1905-ஆம் வருடம் இதே நாளில் தொடங்கிய சுதேசி இயக்கத்தின் 110-வது ஆண்டான 2015-இல், ஒவ்வொரு வருடமும் 7 ஆகஸ்ட் அன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படும் என்று முதல் முறையாக அறிவித்ததற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திய திருமதி. ஸ்மிரிதி இரானி, ராட்டையின் உதவியோடு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததாக கூறினார். கங்க்ராவில் இருந்து ஹிமாச்சல் பிரதேச முதல்வர் திரு. ஜெய்ராம் தாக்கூர் மெய்நிகர் முறையில் பங்கேற்றார்.

 

கைத்தறி அடையாளத் திட்டத்துக்கான (HLM) கைபேசி செயலியையும், பின்கள இணையதளத்தையும் நிகழ்ச்சியின் போது திருமதி. ஸ்மிரிதி இரானி தொடங்கி வைத்தார். உண்மையான கைத்தறிப் பொருள்களுக்கு ஒருங்கிணைந்த அடையாளத்தை வழங்குவதற்காக கைத்தறி அடையாளம் ஊக்கப்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். பதிவு செய்வதற்கான செயல்முறையை முழுவதும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் இந்த கைபேசி செயலியையும், பின்கள இணையதளத்தையும் மும்பை ஜவுளிக் குழு உருவாக்கியது. ஆங்கிலம் மற்றும் 10 இந்திய மொழிகளில் உள்ள இந்த செயலி, நாட்டின் எந்த மூலையில் உள்ள நெசவாளர்களும் தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டே கைபேசிப் பொத்தான்களை அழுத்தி கைத்தறி அடையாளத்துக்காக பதிவு செய்து கொள்ள வழி வகுக்கும். ஒவ்வொரு கைத்தறிப் பொருளின் மீதும் ஒட்டப்பட்டுள்ள பிரத்யேக மற்றும் நவீன க்யூ ஆர் கோடின் மூலம் அதன் உண்மைத் தன்மையையும், அசல் தன்மையையும் அறிந்து கொள்ள இந்த செயலி உதவும்.

 

வட்டார அளவிலான குழுக்கள், கைத்தறி சந்தைப்படுத்துதலுக்கான உதவி மற்றும் விருதுகள் போன்ற பல்வேறு கைத்தறித் திட்டங்களின் கீழ் பலன்களை பெறுவதற்காக தனிப்பட்ட நெசவாளர்கள் மற்றும் இதர நிறுவனங்கள்  விண்ணப்பிப்பதற்கான தளமான "எனது கைத்தறி"-யையும் (“My Handloom”) மத்திய ஜவுளி அமைச்சர் தொடங்கி வைத்தார்.

 

மெய்நிகர் இந்திய ஜவுளி ஆதார கண்காட்சி 2020-ஐயும் மத்திய ஜவுளி அமைச்சர் துவக்கி வைத்தார்.

 

****(Release ID: 1644133) Visitor Counter : 313