சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை, சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையைவிட இரு மடங்காக உயர்ந்தது.

Posted On: 04 AUG 2020 7:55PM by PIB Chennai

இந்தியாவில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 12,30,509  பேர் குணம் அடைந்துள்ளனர். இதையடுத்து இந்த நோய்க்கான சிகிச்சையில் இருப்போரை விட, குணம் அடைந்தோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 44,306  பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவிட்-19 நோய் பாதித்தவர்களில் குணம் அடைந்தோரின் அளவு தற்போது 66.31 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசும் மாநில / யூனியன் பிரதேச அரசுகளும் மேற்கொண்ட ஒருங்கிணைந்த  கோவிட்-19 மேலாண்மை நடவடிக்கைகள், முன்களத்தில் நின்று போராடும் சுகாதாரத் துறை அலுவலர்களின் தன்னலமற்ற தியாகங்கள் காரணமாக, குணம் அடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை (5,86,298) , நோய் பாதித்தவர்களில் 31.59 சதவீதமாக உள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

சிறப்பான கட்டுப்படுத்தல், தீவிர மருத்துவப் பரிசோதனை, முழுமையான தரநிலைப்படுத்திய சிகிச்சை நடைமுறைகளின் அடிப்படையிலான தரநிலைப்படுத்திய சிகிச்சை மேலாண்மை நடைமுறைகள் காரணமாக, தொற்று நோயால் ஏற்படும் மரணங்களின் அளவும் குறைவாக உள்ளது. இந்தியாவில் முதலாவது முடக்கநிலை அமல் செய்யப்பட்டதில் இருந்து, தொற்று நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.10 சதவீதமாக இருக்கிறது. இது உலக சராசரியைவிடக் குறைவானது.

இப்போதுள்ள தகவல்களின்படி மரணங்கள் குறித்து ஆய்வு செய்ததில் 50 சதவீத மரணங்கள் 60 மற்றும் அதற்கு அதிகமான வயதினருக்கு ஏற்பட்டுள்ளது; 37 சதவீத மரணங்கள் 45 முதல் 60 வயதுப் பிரிவினரில் நடந்துள்ளது; 11 சதவீத மரணங்கள் 26-44 வயதுப் பிரிவினரில் நிகழ்ந்துள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பதாக இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு செயல் திட்டம் இவர்கள் மீது அதிக கவனம் செலுத்தும் வகையில் உள்ளது. பாலின அடிப்படையில் பார்த்தால், இறந்தவர்களில் 68 சதவீதம்பேர் ஆண்களாக உள்ளனர்.

 

கோவிட்-19 நோய் பாதிப்பு தொடங்கியதில் இருந்து போதிய அளவுக்கு வென்டிலேட்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்தியா சரியான நேரத்தில், படிப்படியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உலகம் முழுக்க வென்டிலேட்டர் தேவை அதிகரித்த நிலையில், இந்தியாவில் போதிய அளவுக்குக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. 75சதவீதத் தேவைகளுக்கு இறக்குமதியைச் சார்ந்திருந்ததாலும், நோய்த் தொற்று தீவிரமடையும் காலத்தில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் அதிகரித்த நிலையிலும், `மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிப்பை ஊக்குவிக்க இந்தியா முடிவு செய்தது.

நாட்டில் சுமார் 60 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தேவைப்படும் என கணக்கிடப்பட்டதில், கோவிட்-19 சிகிச்சைக்குத் தேவையான அடிப்படை வென்டிலேட்டர்களில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச அத்தியாவசிய அம்சங்களை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுகாதாரச் சேவைகள் துறையின் தலைமை இயக்குநர் தலைமையிலான தொழில்நுட்ப நிபுணர்கள் குழு பரிந்துரை செய்தது. விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரம் அளிக்கப்பட்ட குழு -3 உருவாக்கப்பட்டது. உள்நாட்டு வென்டிலேட்டர்களை கவனமாக ஆய்வு செய்தல் மற்றும் மருத்துவச் சான்றளிப்புச் சோதனைகளுக்குப் பிறகு, ஆர்டர்கள் தரப்பட்டன.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) மற்றும் ஆந்திர மெட்-டெக் மண்டலம் (AMTZ) ஆகிய இரு பொதுத் துறை நிறுவனங்களுக்கு, பெரும்பகுதி ஆர்டர்கள் தரப்பட்டன. மேலும், பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஆட்டோமொபைல் துறையும் முயற்சிகள் மேற்கொண்டது. இப்போதைய நிலையில், எண்ணிக்கை அடிப்படையில் `மேக் இன் இந்தியா' வென்டிலேட்டர்கள், சந்தையில் உள்ளவற்றில் 96 சதவீத அளவுக்கு உள்ளன. மதிப்பு அடிப்படையில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இன்றைய தேதியில், 700க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் அவை நிறுவப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / மத்திய அரசு மருத்துவமனைகள் / டி.ஆர்.டி.ஓ. மையங்களுக்கு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

 

HFW/COVID Updates/4thAugust2020/1


 



(Release ID: 1643392) Visitor Counter : 234