சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கோவிட்-19 பாதித்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது

Posted On: 30 JUL 2020 6:15PM by PIB Chennai

இந்தியாவில் கோவிட்-19 பாதித்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சம் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளது.

டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் முன்களத்தில் நின்று பணியாற்றும் சுகாதார அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்றுவது மற்றும் தன்னலமற்ற தியாகத்தின் பலனாகத் தான் இந்த நிலை எட்டப்பட்டுள்ளது. மத்திய அரசும் மாநில / யூனியன் பிரதேச அரசுகளும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட கோவிட்-19 நோய்க் கட்டுப்பாட்டு அணுகுமுறைகள் காரணமாக, குணம் அடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் ஒரு லட்சத்தைத் தொட்ட நிலையில், இப்போது அது 10 லட்சத்தைக் கடந்துள்ளது.

நோய்க் கட்டுப்பாட்டு நடைமுறை, தீவிர பரிசோதனை மற்றும் முழுமையான அக்கறையுடன் கடைபிடித்த தரநிலைப் படுத்திய சிகிச்சை மேலாண்மை நடைமுறைகள் காரணமாக, தொடர்ந்து ஏழாவது நாளாக தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் பெற்று வருகின்றனர். ஜூலை முதல் வாரத்தில் தினமும் குணம் அடைவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாக இருந்தது. கடந்த வாரத்தில் இது தினமும் 35 ஆயிரம் என்ற நிலைக்கு உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 32,553 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், இந்த நோயால் பாதித்தவர்களில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10,20,582 ஆக உயர்ந்துள்ளது. கோவிட் பாதித்தவர்களில் குணம் அடைவோரின் விகிதாச்சாரம் 64.44 சதவீதம் என உள்ளது. குணம் அடைந்தவர்கள் மற்றும் கோவிட் பாதித்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கைக்கு இடையிலான இடைவெளி 4,92,340 ஆக உள்ளது. சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையைவிட, குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.9 மடங்கு அதிகமாக உள்ளது. (தற்போது மருத்துவ கண்காணிப்பில் 5,28,242 பேர் உள்ளனர்).

தடையில்லாத சிகிச்சை வசதிகள் கிடைக்கச் செய்வதற்காக, உள்ளூர் அளவில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில / யூனியன் பிரதேச  அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. குணம் அடைவோர் எண்ணிக்கையைப் பொருத்த வரையில் தேசிய சராசரியைவிட 16 மாநில / யூனியன் பிரதேசங்களின் சராசரி அதிகமாக உள்ளது என்பதன் மூலம் இதன் வெற்றியை அறிய முடியும்.

மருத்துவமனைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், அரசு மற்றும் தனியார் துறையினரின் முயற்சிகளை ஒருங்கிணைத்த காரணத்தால், கோவிட்-19 நோய் பாதிப்பு ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டது. அதனால் மரண எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தனிமைப்படுத்துதல் மற்றும் தீவிர பாதிப்பில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சை அளித்தல் ஆகிய அம்சங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதனால் நோய்த் தொற்று காரணமாக ஏற்படும் மரண விகிதம் இந்தியாவில் குறைந்தபட்ச அளவாக உள்ளது. உலக அளவில் இந்த சராசரி 4 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியாவின் சராசரி 2.21 சதவீதமாக இருக்கிறது. 24 மாநில / யூனியன் பிரதேசங்களில் இது தேசிய சராசரியைவிடக் குறைவாக உள்ளது. 8 மாநில / யூனியன் பிரதேசங்களில் இது 1 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறது.

******



(Release ID: 1642516) Visitor Counter : 202