பிரதமர் அலுவலகம்

சர்வதேச வெப்ப அணு பரிசோதனை உலையை தொகுக்கும் பணி தொடங்கியதையொட்டி, சர்வதேச வெப்ப அணு பரிசோதனை உலை அமைப்பில் பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்ட செய்தி

Posted On: 29 JUL 2020 8:35PM by PIB Chennai

சர்வதேச வெப்ப அணு பரிசோதனை உலையின் டொக்காமாக் கருவியைத் தொகுக்கும் பணி தொடங்கியதை, பிரான்ஸில் உள்ள செயின்ட்-பால்-லேஸ்-டியூரன்ஸ் பகுதியில் விழாவாக, ஜூலை 28, 2020-ல் சர்வதேச வெப்ப அணு பரிசோதனை உலை அமைப்பு கொண்டாடியது. இதில் கலந்துகொள்ள சர்வதேச வெப்ப அணு பரிசோதனை உலை அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி, தலைவர்கள் நேரிலோ அல்லது காணொலி மூலமாகவோ கலந்துகொண்டனர் அல்லது தங்களது செய்தியைத் தெரிவித்தனர். இந்தக் கொண்டாட்டங்களை காணொலி மூலம் அதிபர் மேக்ரோன் நடத்தினார்.

இதில், பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்ட செய்தியில், தங்களது கடின உழைப்பு மற்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட வெற்றிகளுக்காக சர்வதேச வெப்ப அணு பரிசோதனை உலை அமைப்புக்கு பாராட்டு தெரிவித்தார். இந்தத் திட்டத்தில் உலகளாவிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் கலந்துகொண்டிருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் மிகவும் பழமையான நம்பிக்கையான “அனைவரும் ஒரே குடும்பம்”, அதாவது, மனிதசமூகத்தின் நலனுக்காக ஒட்டுமொத்த உலகமும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது என்பதற்கு சிறந்த விளக்கமாக சர்வதேச வெப்ப அணுஉலைத் திட்டம் இருப்பதாகக் கூறினார். இந்தத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்ததற்காக இந்தியா பெருமையடைவதாக அவர் கூறினார். அதாவது, சர்வதேச வெப்ப அணு உலை அமைப்பு தனது இலக்குகளை நிறைவேற்றுவதற்கு உதவும் வகையில், கிரியோஸ்டேட், அழுத்த பாதுகாப்பு கவசங்கள், நீரை குளிமையாக்குவதற்கான கருவிகள், கிரையோஜெனிக் மற்றும் கிரியோ பகிர்வு அமைப்புகள், ஆர்எஃப்-ஐ பயன்படுத்தி வெப்பமாக்கும் துணைக் கருவிகள், பீம் தொழில்நுட்பங்கள், பல்வேறு மெகாவாட் மின் விநியோக அமைப்புகள் மற்றும் பல்வேறு பரிசோதனை முறைகளை இந்தியா வழங்கியிருப்பதாக பிரதமர் கூறினார்.

இந்த விழாவில், பிரதமர் திரு.நரேந்திர மோடியின் செய்தியை பிரான்ஸ் மற்றும் மொனாக்கோ-வுக்கான இந்திய தூதர் திரு.ஜாவேத் அஷ்ரப் வாசித்தார்.

பிரதமர் வெளியிட்ட செய்தியை முழுமையாகப் படிக்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்…

http://dae.gov.in/writereaddata/iter2020_message_pm_india_shri_narendra_modi.pdf

****


(Release ID: 1642301) Visitor Counter : 269