பிரதமர் அலுவலகம்

வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்

Posted On: 29 JUL 2020 10:05PM by PIB Chennai

எதிர்காலத்துக்கான இலக்குகள் மற்றும் திட்டங்கள் குறித்து வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.

வளர்ச்சிப் பணிகளை ஊக்குவிப்பதில் நிதி மற்றும் வங்கி அமைப்புகளின் முக்கிய பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, சிறு வணிகர்கள், சுயஉதவிக் குழுவினர், விவசாயிகள் ஆகியோருக்கு நிதித் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில், அமைப்புசார்ந்த கடன் வழிவகைகளை பயன்படுத்தச் செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. கடன் அளவை நிலையாக அதிகரிக்கச் செய்வதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு வங்கியும் தனது செயல்பாடுகளை மறுஆய்வு செய்வதுடன், சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கடன் கோரி அளிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களையும் ஒரே கண்ணோட்டத்தில் வங்கிகள் பார்க்கக் கூடாது. ஒவ்வொன்றையும் வேறுபடுத்திப் பார்த்து, வங்கிகள் செயல்படுத்த வாய்ப்புள்ள விண்ணப்பங்களைக் கண்டறிய வேண்டும் மற்றும் அவர்களது தகுதி அடிப்படையில் கடன் பெற வழிவகை செய்வதுடன், கடந்தகால வாராக்கடன்கள் என்ற பெயரில் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது.

வங்கி அமைப்புக்குப் பின்னால் அரசு உறுதியாக இருப்பது எடுத்துரைக்கப்பட்டது. வங்கிகளுக்கு ஆதரவு அளிக்கவும், அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் எந்த நடவடிக்கையையும் எடுக்க, அரசு தயாராக உள்ளது.

வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறையில் பெறும் வகையில், மத்திய தரவு தளங்கள், டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்துதல், தகவல்களை ஒருங்கிணைத்துப் பயன்படுத்துவது போன்ற நிதி தொழில்நுட்பங்களை வங்கிகள் பின்பற்ற வேண்டும். இவை கடன் வழங்குவதை அதிகரிப்பதுடன், வாடிக்கையாளர்களின் செயல்பாடுகளை மிக எளிதாக்கும், வங்கிகளுக்கு செலவைக் குறைக்கும் மற்றும் முறைகேடுகளைக் குறைக்கும்.

ஒவ்வொரு இந்தியரும் எந்த அளவிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மிக எளிதாக மேற்கொள்ளும் வகையில், வலுவான மற்றும் குறைந்த செலவிலான கட்டமைப்புகளை இந்தியா உருவாக்கியுள்ளது. ரூபே மற்றும் யூபிஐ கார்டுகளைப் பயன்படுத்த, தங்களது வாடிக்கையாளர்களை வங்கிகளும், நிதி அமைப்புகளும் தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அவசரகால கடன் வசதி, கூடுதலாக விவசாயிகளுக்கு கடன் அட்டைகளை வழங்குவது, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் சிறு நிதி நிறுவனங்களுக்கு நிதி கிடைக்கச் செய்வது போன்ற திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டது. பெரும்பாலான திட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த நெருக்கடியான காலத்தில், பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் கடன் உதவி கிடைப்பதை உறுதிப்படுத்த அவர்களுடன் வங்கிகள் தீவிரமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

*****



(Release ID: 1642300) Visitor Counter : 245