மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
உலகில் இதுவரை நடந்திராத ஆன்லைன் ஹேக்கத்தான் போட்டியின் மாபெரும் இறுதிப் போட்டியில், பிரதமர் திரு.நரேந்திரமோடி, 1 ஆகஸ்ட், 2020 அன்று காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்
Posted On:
27 JUL 2020 5:24PM by PIB Chennai
உலகில் இதுவரை நடந்திராத ஆன்லைன் ஹேக்கத்தான் போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்றில், பிரதமர் திரு.நரேந்திரமோடி, 1 ஆகஸ்ட், 2020 அன்று இரவு 7 மணிக்கு, காணொளிக்காட்சி மூலம் உரையாற்ற உள்ளார். இன்று இத்தகவலை தெரிவித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 (Software)போட்டியின், மாபெரும் இறுதிச்சுற்று, 2020 ஆகஸ்ட் 1 முதல் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது என்றார். இந்த ஹேக்கத்தான் போட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ4சி ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள் குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில், இதுவரை நடத்தப்பட்ட ஹேக்கத்தான் போட்டிகளின் சாதனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள், நாடு எதிர்நோக்கும் சவால்களைக் களைவதற்கான, புதிய மற்றும் இடையூறு விளைவிக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பp புதுமைகளை அடையாளம் காண்பதற்கான ஒரு தனித்தன்மை வாய்ந்த முன்முயற்சி என்றார். ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-க்காக, மாணவர்களின் சிந்தனைகளைத் தேர்வு செய்வதற்கான கல்லூரிகள் அளவிலான முதற்கட்டப் பணி, கடந்த ஜனவரி மாதமே நடத்தப்பட்டு, கல்லூரி அளவில் வெற்றிபெற்ற அணிகள் மட்டுமே, தேசிய அளவிலான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
கோவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-இன் இறுதிச்சுற்று, நாடு முழுவதிலுமிருந்து பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் விதமாக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஆன்லைன் முறையில் நடத்தப்பட உள்ளதாக, திரு.பொக்ரியாபல் தெரிவித்தார். இந்தாண்டு போட்டியில், மத்திய அரசின் 37 துறைகள், 17 மாநில அரசுகள் மற்றும் 20 தொழில் நிறுவனங்களின் சார்பில் வரப்பெற்ற 243 கண்டுபிடிப்புகளில், 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியிடுவதாக அவர் கூறினார். ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் ரூ.1,00,000 வழங்கப்படுவதுடன், போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு 1வது, 2வது மற்றும் 3வது பரிசாக முறையே, ரூ.1,00,000, ரூ.75,000 மற்றும் ரூ.50,000 வழங்கப்படும்.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானின் விளைவாக, இன்று வரை சுமார் 331 முன்மாதிரிகள் உருவாக்கப்பட்டிருப்பதுடன், 71 புதிய தொழில்கள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், 19 புதிய தொழில்கள் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 39 முடிவுகள், பல்வேறு துறைகளுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டிருப்பதோடு, 64 சாத்தியமான தீர்வுகளை மேம்படுத்துவதற்காக நிதியுதவியும் வழங்கப்பட உள்ளது.
நம் நாட்டில் புதுமைக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக, பள்ளிக்கூட அளவிலேயே புதுமைக் கண்டுபிடிப்பு முயற்சிகளைத் தொடங்குவதுடன், இந்த நோக்கத்தை செயல்படுத்த அடல் மெருகூட்டு ஆய்வகங்களையும் ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், பள்ளி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு,
https://www.sih.gov.in/இணையதளத்தைக்காணவும்
*****
(Release ID: 1641605)
Visitor Counter : 253