பிரதமர் அலுவலகம்
இந்தியா ஐடியா உச்சி மாநாடு 2020-இல் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை
Posted On:
22 JUL 2020 9:27PM by PIB Chennai
வணக்கம்!
தொழிலதிபர்களே,
மதிப்புமிகுந்த விருந்தினர்களே,
“இந்தியா ஐடியா உச்சி மாநாட்டில்” உரையாற்ற எனக்கு அழைப்பு விடுத்த அமெரிக்க - இந்திய வர்த்தகக் கவுன்சிலுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த ஆண்டில் தனது 45-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சிலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பல ஆண்டுகளில், இந்திய மற்றும் அமெரிக்கத் தொழில்களை அமெரிக்க- இந்திய வர்த்தகக் கவுன்சில் நெருங்கச் செய்துள்ளது. இந்த ஆண்டுக்கான ஐடியா மாநாட்டுக்கு “எதிர்காலத்தை சிறப்பாகக் கட்டமைப்பது” என்ற கருத்துருவை அமெரிக்க - இந்திய வர்த்தகக் கவுன்சில் தேர்வு செய்திருப்பது மிக மிகப் பொருத்தமாக உள்ளது.
நண்பர்களே,
உலகுக்கு சிறந்த எதிர்காலம் தேவை என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளோம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்காலத்துக்கு வடிவம் கொடுக்கிறோம். எதிர்காலத்துக்கான நமது நிலைப்பாடு, அதிக அளவில் மனிதர்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நமது வளர்ச்சிக்கான திட்டங்கள், ஏழைகள் மற்றும் வறிய நிலையில் இருப்பவர்களுக்கானதாக அமைய வேண்டும். “தொழில் செய்வதை எளிதாக்குவது” போன்றே, “எளிதாக வாழ்வதற்கான வழிகளை ஏற்படுத்துவதும்” மிகவும் முக்கியமானது.
நண்பர்களே,
திறமையாகச் செயல்படுவதிலும், சிறப்பான முறையில் தேர்வு செய்வதிலும் கூட உலகப் பொருளாதாரம் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே அண்மைக்கால அனுபவங்கள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளன. திறமையாகச் செயல்படுவது என்பது நல்ல விஷயம். ஆனால், அதே நேரத்தில், அதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த சிலவற்றில் கவனம் செலுத்த நாம் மறந்து விட்டோம். அதாவது, வெளிப்பகுதியிலிருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன். நமக்கு எதிர்கொள்ளும் திறன் எவ்வளவு முக்கியம் என்பதை உலகளாவியப் பெருந்தொற்று நமக்கு நினைவுபடுத்தியுள்ளது.
நண்பர்களே,
உள்ளூர்ப் பொருளாதாரத் திறன் வலுவாக இருப்பதன் மூலம், உலகளாவிய அளவில் பொருளாதார எதிர்கொள்ளும் திறனை ஏற்படுத்த முடியும். அதாவது, உள்ளூர் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது, நிதிக்கட்டமைப்பின் திறனை மீட்டெடுப்பது, சர்வதேச வர்த்தகத்தைப் பரவலாக்குவது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
நண்பர்களே,
“சுயசார்பு இந்தியா” திட்டத்துக்கு அழைப்பு விடுத்ததன் மூலம், வளமான மற்றும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட உலகை ஏற்படுத்துவதற்கு இந்தியா தனது பங்களிப்பைச் செய்துள்ளது. இதற்காக உங்களது நட்புறவை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
நண்பர்களே,
இன்று, இந்தியா மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது. இதற்குக் கட்டுப்பாடுகள் இல்லாதது, ஏராளமான வாய்ப்புகள் மற்றும் தேர்வு செய்வதற்கான சூழல் ஆகியவற்றை சிறப்பாக ஒருங்கிணைத்து இந்தியா வழங்குவதே காரணம். இதனை நான் விரிவாகக் கூற விரும்புகிறேன். மக்கள் மத்தியிலும், ஆளுமையிலும் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பதை இந்தியா கொண்டாடுகிறது. திறந்த மனநிலை, திறந்த சந்தைகளை உருவாக்குகிறது. திறந்த சந்தைகள், சிறப்பான வளத்துக்கு வழிவகை செய்கிறது. இந்தியாவும், அமெரிக்காவும் ஏற்றுக் கொண்ட கொள்கைகள் இவை.
நண்பர்களே,
கடந்த ஆறு ஆண்டுகாலத்தில், நமது பொருளாதாரத்தை மேலும் கட்டுப்பாடுகள் இல்லாமலும், சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்டும் மாற்ற பல்வேறு முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். போட்டித்திறனை அதிகரிப்பது, வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவது, டிஜிட்டல் மயமாக்கத்தை விரிவுபடுத்துவது, மிகப்பெரும் புத்தாக்கம் மற்றும் அதிக அளவில் கொள்கை நிலைத்தன்மை ஆகியவற்றை சீர்திருத்தங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
நண்பர்களே,
வாய்ப்புகளுக்கான நிலமாக இந்தியா மாறிவருகிறது. இதற்கு தொழில்நுட்பத் துறையில் ஒரு உதாரணத்தை நான் கூறுகிறேன். அண்மையில், இந்தியாவில் சிறப்பான அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், முதல் முறையாக நகர்ப்புறங்களில் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களை விட கிராமப்புறங்களில் அதிகமானோர் இணையதளத்தைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவைச் சிந்தித்துப் பாருங்கள்! இந்தியாவில் தற்போது இணையதளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ரூ.50 கோடியாக உள்ளது. 50 கோடி மக்கள் இணைந்துள்ளனர். இது உங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லையா? ஆச்சரியமளிக்கவில்லையா? ஏனெனில், மேலும் 50 கோடிக்கும் மேலான மக்கள் இணைந்துள்ளனர். தொழில்நுட்பத்துறையில் உள்ள வாய்ப்புகள் என்பது, 5ஜி, Big data analytics, Quantum computing, Block-chain and Internet of things ஆகிய முன்னணித் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றில் உள்ளது.
நண்பர்களே,
இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. கடுமையாக உழைக்கும் நமது விவசாயிகளுக்காக முதலீடு செய்ய வருமாறு உங்களை இந்தியா அழைக்கிறது. வேளாண்மைத் துறையில் இந்தியா அண்மையில் வரலாற்றுப்பூர்வமான சீர்திருத்தங்களைச் செய்துள்ளது. வேளாண்மை உள்ளீட்டுப் பொருள்கள் மற்றும் இயந்திரங்கள், வேளாண்மை விநியோகக் கட்டமைப்பு மேலாண்மை, உடனடியாக சாப்பிடுவதற்குத் தயாராக உள்ள உணவுப்பொருள்கள், மீன்வளம், இயற்கைப் பொருள்கள் ஆகியவற்றில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் உணவுப் பதப்படுத்துதல் துறை, 2025-ஆம் ஆண்டில் 50 ஆயிரம் கோடி டாலருக்கும் மேலான மதிப்பு கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய் வாய்ப்புகளைப் பெற வேண்டுமானால், இந்திய வேளாண்மைத் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இதுவே சிறந்த நேரம்!
சுகாதாரத் துறையில் முதலீடு செய்ய உங்களை இந்தியா அழைக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 22 சதவீதத்துக்கும் அதிகமான வேகத்தில் சுகாதாரத்துறை வளர்ந்து வருகிறது. மருத்துவத் தொழில்நுட்பம், தொலைமருத்துவம், பரிசோதனைக் கருவிகள் உற்பத்தியிலும் நமது நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. மருந்துத்துறையில், இந்தியாவும், அமெரிக்காவும் வலுவான ஒத்துழைப்பை ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளன. அளவையும், வேகத்தையும் பெறுவதற்கு, இந்திய சுகாதாரத் துறையில் உங்களது முதலீட்டை அதிகரிப்பதற்கு இதுவே சரியான தருணம்!
எரிசக்தித் துறையில் முதலீடு செய்ய உங்களை இந்தியா வரவேற்கிறது. எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்துக்கு இந்தியா மாறிவருவதால், அமெரிக்க நிறுவனங்களுக்கு மிகப்பெரும் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. தூய்மையான எரிசக்தித் துறையிலும் கூட, மிகப்பெரும் வாய்ப்புகள் உள்ளன. உங்களது முதலீட்டின் சக்தியை அதிகரிக்கச் செய்ய, இந்திய மின்சக்தி துறையில் நுழைவதற்கு இதுவே சரியான தருணம்!
கட்டமைப்பில் முதலீடு செய்ய உங்களை இந்தியா வரவேற்கிறது. நமது வரலாற்றில் மிகப்பெரும் அளவில் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியை நமது நாடு கண்டுள்ளது. வாருங்கள், கோடிக்கணக்கான மக்களுக்கு வீடுகளைக் கட்டுவது அல்லது நமது நாட்டுக்காக சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்களை கட்டமைப்பதில் கூட்டாளியாகச் செயல்படுங்கள்.
மிகப்பெரும் வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ள மற்றொரு பகுதியாக விமானப் போக்குவரத்துத் துறை திகழ்கிறது. விமானப் பயணிகளின் எண்ணிக்கை, அடுத்த 8 ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய விமானங்களை சேவையில் ஈடுபடுத்த இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் உற்பத்தித் தளங்களை அமைக்க விரும்பும் எந்த முதலீட்டாளருக்கும் இது மிகப்பெரும் வாய்ப்பு. பிராந்திய சந்தைகளுக்கு விநியோகம் செய்யும் தளமாக இந்தியா மாற வாய்ப்பு உள்ளது. இதே போன்று, பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் இயக்கத்திற்கான வசதிகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. உங்களது விமான இலக்குகளுக்கு வான்நோக்கிய பயணத்தை அளிக்க, இந்திய விமானப் போக்குவரத்து துறையில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்.
பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் முதலீடு செய்யவும் உங்களை இந்தியா அழைக்கிறது. பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பை 54 சதவீதமாக அதிகரித்துள்ளோம். பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தளங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க இரண்டு பாதுகாப்பு முனையங்களை இந்தியா உருவாக்கியுள்ளது. தனியார் மற்றும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை நாங்கள் வழங்குகிறோம். சில வாரங்களுக்கு முன்பாக, விண்வெளித் துறையில் மிகப்பெரும் சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். வளரும் இந்தத் துறைகளில் ஓர் அங்கமாக இருக்க வாருங்கள்.
நிதி மற்றும் காப்பீட்டுத்துறையில் முதலீடு செய்ய உங்களை இந்தியா அழைக்கிறது. காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பை 49 சதவீதமாக இந்தியா அதிகரித்துள்ளது. காப்பீடு இடைத்தரகர் பணிகளில் முதலீடு செய்ய 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு தற்போது அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் காப்பீட்டுச் சந்தை, 12 சதவீதத்துக்கும் மேலான அளவில் வளர்ந்து வருகிறது. 2025-ஆம் ஆண்டில் 250 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுயசார்பு பாரதம், நமது சுகாதார உறுதியளிப்புத் திட்டம், பிரதமரின் விவசாயிகள் காப்பீட்டுத் திட்டம், நமது பயிர்க் காப்பீட்டுத் திட்டம், மக்கள் பாதுகாப்பு அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவை வெற்றியடைந்ததன் மூலம், காப்பீட்டுத் திட்டங்களை உடனடியாக ஏற்றுக் கொள்வதற்கான தளத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரம், வேளாண்மை, வர்த்தகம் மற்றும் ஆயுள் காப்பீட்டில் காப்பீட்டு அளவை அதிகரிப்பதற்கு இதுவரை பயன்படுத்தப்படாத வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. நீண்டகால மற்றும் உறுதியளிக்கப்பட்ட வருவாயைப் பெறுவதற்கு, தற்போது சிறந்த முதலீட்டு வாய்ப்புகளில் ஒன்றாக இந்திய காப்பீட்டுத் துறை விளங்குகிறது!
நான் உங்களுக்கு சில வழிமுறைகளை, அதுவும் எந்தவொரு ஆலோசனைக் கட்டணமும் இல்லாமல் கூறியுள்ளேன்.
நண்பர்களே,
சந்தைகள் திறக்கப்படும் போது, வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் போது மற்றும் வழிமுறைகள் ஏராளமாக இருக்கும் போது, தொலைவில் நம்பிக்கையும் இருக்கும்! வர்த்தகத்துக்கான முக்கிய தர மதிப்பீடுகளில் இந்தியா உயரும் போது, நம்பிக்கையை உங்களால் பார்க்க முடியும். குறிப்பாக, எளிதாகத் தொழில் தொடங்குவதற்கான உலக வங்கியின் தர மதிப்பீட்டின்படி.
நம்பிக்கையை சிறப்பான முறையில் வெளிப்படுத்துவதே முதலீடு. ஒவ்வொரு ஆண்டும், அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் நாங்கள் புதிய உச்சத்தைப் பெற்று வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும், முந்தைய ஆண்டை விட குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்து வருகிறது. 2019-20-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு அந்நிய நேரடி முதலீடு வரத்து, 74 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டை விட, இது 20 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டில் அமெரிக்காவிலிருந்து வரும் “உறுதியளிக்கப்பட்ட முதலீடு” ஏற்கனவே 40 பில்லியன் டாலர்களைக் கடந்துள்ளதாக அமெரிக்க-இந்திய வர்த்தகக் கவுன்சிலில் உள்ள நண்பர்கள் தெரிவித்தனர்! தற்போதைய பெருந்தொற்றுக் காலத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்க்க வேண்டும். கோவிட் பெருந்தொற்றுக்கு மத்தியில், 2020-இல் ஏப்ரல் முதல் ஜூலை வரையான காலத்தில் 20 பில்லியன் டாலர்களுக்கும் மேலான அளவுக்கு அந்நிய முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது!
எனினும், இந்தியா மேலும் பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. சர்வதேசப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான சக்தி நம்மிடம் உள்ளது.
நண்பர்களே,
இந்தியா வளர்கிறது என்றால்: நீங்கள் நம்பிக்கை கொள்ளும் தேசத்துடன் வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கிறது, அதிகக் கட்டுப்பாடு இல்லாத நிலையுடன் சர்வதேசப் பிணைப்பு அதிகரிக்கிறது, மிகப்பெரும் வாய்ப்பை அளிக்கும் சந்தை கிடைப்பதன் மூலம்,, உங்களது போட்டித்திறன் அதிகரிக்கிறது என்று அர்த்தம். மேலும், உங்களது முதலீடுகளுக்குத் திறன்வாய்ந்த மனிதவளத்துடன் வருவாய் அதிகரிக்கிறது.
நண்பர்களே,
இந்த இலக்குக்காக, அமெரிக்காவை விட குறிப்பிட்ட சில சிறந்த நட்பு நாடுகளே உள்ளன. ஒரே மாதிரியான தன்மையுடன், இரண்டு துடிப்பான ஜனநாயகங்களாக இந்தியாவும், அமெரிக்காவும் திகழ்கின்றன. நாம் இயற்கையான கூட்டாளிகள். கடந்த காலங்களில் இந்திய - அமெரிக்க நட்புறவு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பெருந்தொற்றுக்குப் பிறகு, உலகம் வேகமாக மீண்டு வருவதற்கு உதவ, நமது ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிப்பதற்கான நேரம் இது. ஒரு துறை அல்லது ஒரு நாட்டில் நுழைவதற்கு சிறந்த நேரத்தை அமெரிக்கத் தொழிலதிபர்கள் எப்போதும் பார்த்து வருவார்கள். அவர்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவது: இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதைவிட சிறந்த தருணம் இல்லை என்பதுதான்!
இந்திய - அமெரிக்கப் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ள அமெரிக்க - இந்திய வர்த்தகக் கவுன்சில் தலைமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்க- இந்திய வர்த்தகக் கவுன்சில் தொடர்ந்து புதிய உச்சத்துக்கு முன்னேறட்டும்!
இந்திய-அமெரிக்க நட்புறவு மேலும் வளரட்டும்!
வணக்கம்!
அனைவருக்கும் நன்றி!
*****
(Release ID: 1640637)
Visitor Counter : 309
Read this release in:
Telugu
,
Assamese
,
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam