சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனையின்படி 19 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் 140 பரிசோதனைகள்/ நாளுக்கு / மில்லியனுக்கு என்பதைக் காட்டிலும் அதிக பரிசோதனைகளை நடத்துகின்றன

Posted On: 21 JUL 2020 7:38PM by PIB Chennai

கோவிட்-19 பாதித்தவர்களைக் கையாள்வதற்கான முழுமையான கட்டமைப்பில் ``பரிசோதித்தல், தடமறிதல், சிகிச்சை அளித்தல் '' உத்தி அடங்கியிருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலில், மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்களுடைய மருத்துவப் பரிசோதனைக் கட்டமைப்பு வசதியைக் கணிசமாக அதிகரித்துக் கொண்டுள்ளன. பெருமளவில், பூகோள ரீதியில் பரவலான பகுதிகளில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு ஒரு நாளுக்கு எவ்வளவு பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்வது என்ற கணக்கீட்டின்படி இந்தியாவில் தினமும் 180 பேருக்குப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

``கோவிட்-19 பாதிப்புச் சூழ்நிலையில் பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை சரி செய்வதற்கான பொது சுகாதார வரையறைகள்'' என்ற தலைப்பில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், கோவிட்-19 நோய் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு உரியவர்களை கண்காணிப்பதற்கான ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன. ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு ஒரு நாளுக்கு 140 மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

இப்போது ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு தினமும் 140க்கும் மேலான எண்ணிக்கையில் 19 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் அதிகபட்ச அளவாக கோவாவில், ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு தினமும் 1333 மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, இந்தியாவில் ஒரு மில்லியன் பேரில் மருத்துவப் பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை (டி.பி.எம்.) 10421 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவப் பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்து வருவதன் விளைவாக, நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இப்போது இது 8.07 சதவீதமாக உள்ளது. இதில் இந்திய சராசரியைவிட 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் சராசரி பாதிப்பு குறைவாக உள்ளது.

*****(Release ID: 1640342) Visitor Counter : 101