சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தொற்றிலிருந்து 7 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்

உலகத்திலேயே இறப்பு விகிதம் மிக குறைவாக – 2.46 % – இருப்பது இந்தியாவில்தான்

Posted On: 20 JUL 2020 2:44PM by PIB Chennai

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் விகிதம் இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று இந்த விகிதம் 2.46 விழுக்காடு மட்டுமே. இது உலகத்திலேயே மிகக் குறைந்த விகிதமாகும். திறமையான சிகிச்சை முறையினாலும், நிர்ணயிக்கப்பட்ட கவனிப்பு நெறிமுறைகளை சரியாக செயல்படுத்துவதாலும், நடுத்தர பாதிப்பு மற்றும் மிக மோசமான பாதிப்புக்குள்ளானவர்கள் கூட குணமடைகிறார்கள். கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் -ஐசியு என்ற காணொலிக் காட்சி மருத்துவ ஆலோசனைத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இறப்பு விகிதத்தை குறைக்கும் நோக்கத்துடன், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்), -ஐசியு எனப்படும் காணொலிக் காட்சி மருத்துவ ஆலோசனை அமர்வுகளை நடத்தி வருகிறது. இதில் 11 மாநிலங்களில் உள்ள 43 பெரிய மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், கொவிட்-19 நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதில் தமக்குள்ள அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, மருத்துவ நிபுணர்களிடமிருந்து தொழில்நுட்ப ஆலோசனைகளையும் பெறுகின்றனர். இதனால் அபாயக் கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் திறன் கணிசமாகக் கூடியுள்ளது.

கொவிட்-19 தொற்றிலிருந்து, 7 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதாவது கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை விட அதிகமாக 3,09,627 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 22,664 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது குணமடைவோர் விகிதம் 62.62 விழுக்காடாகும்.

மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ள, கொவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்ட 3,90,459 பேருக்கும், மருத்துவ உதவி அளிக்கப்படுகிறது.

 

****


(Release ID: 1639898) Visitor Counter : 274