கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

நார்வே ஏஎஸ்கேஓ மேரிடைம் ஏஎஸ் நிறுவனத்துக்கு தானியங்கி மின்சாரக் கப்பல்களைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம் கையெழுத்து

Posted On: 16 JUL 2020 4:42PM by PIB Chennai

கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம் (சிஎஸ்எல்) , இரண்டு தானியங்கி மின்சாரக் கப்பல்களை உருவாக்கி, நார்வேயின் ஏஎஸ்கேஓ மேரிடைம் ஏஎஸ் நிறுவனத்துக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும், அதே போன்ற 2 கப்பல்களைக் கட்டுவதற்கான வாய்ப்பும் இதில் உள்ளது.

நார்வேயின் ஏஎஸ்கேஓ மேரிடைம் ஏஎஸ் நிறுவனத்துக்கு, உலகின் முதல் முழுவதும் தானாக இயங்கும் மின்சாரக் கப்பலை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை வென்றுள்ளதற்காக கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தை பாராட்டியுள்ள, மத்திய இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. மன்சுக் மாண்டவியா, கப்பல் கட்டும் தொழிலில் இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க  மைல்கல் எனக் கூறியுள்ளார். கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தின் வரலாறு மற்றும் நம்பகத்தன்மை  காரணமாக, உலக நிறுவனங்களின் போட்டிக்கு இடையே இந்த ஒப்பந்தம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம் இந்தியாவில் வர்த்தக கப்பல்களை உருவாக்கும் மிகப்பெரிய நிறுவனமாகும். நார்வேயில் சில்லரை வர்த்தகத்தில்  மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான நார்ஜஸ் குரூப்பன் ஏஎஸ்ஏ குழுமத்தின் துணை நிறுவனமான ஏஎஸ்கேஓ மேரிடைம் ஏஎஸ் நிறுவனத்திடம் இருந்து இந்தப் பெருமைமிகு ஏற்றுமதி ஆர்டரை சிஎஸ்எல் நிறுவனம் பெற்றுள்ளது.

தானியங்கி மின்சாரக் கப்பல்  என்பது நார்வேயின் லட்சியத் திட்டமாகும்.  செங்குத்தான மலைகளுக்கு இடையில் உள்ள நீண்ட ஒடுக்கமான ஆஸ்லோ கடற்பகுதியில் சரக்குப் போக்குவரத்துக்கு உமிழ்வு அற்ற கப்பல்கள் அவசியம் என்ற  நோக்கத்துக்கு ஏற்ப, இக்கப்பல்கள் கட்டப்படவுள்ளன. இந்தக் கப்பல்கள் மாஸ்டர்லி ஏஎஸ் நிறுவனத்தால் பராமரிக்கப்படும்.  தானியங்கி தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற  காங்ஸ்பெர்க் மற்றும் மிகப்பெரிய கடல்சார் கப்பல் நிறுவனங்களில் ஒன்றான வில்ஹெம்சன் நிறுவனத்தின் கூட்டுமுயற்சி நிறுவனம் மாஸ்டர்லி ஏஎஸ்.  இது தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் தானியங்கிக் கப்பல்களை இயக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட முதல் நிறுவனமாகும்.  இந்தக் கப்பல் இயங்கத் தொடங்கும் போது, வர்த்தகக் கப்பல் போக்குவரத்தில் உலகிலேயே  சிறப்பான  புதிய முத்திரையைப் பதிக்கும். ஏனெனில் இது கரிஉமிழ்வு இல்லாத தானியங்கிக் கப்பலாக இருக்கும்.

*****



(Release ID: 1639248) Visitor Counter : 177