பிரதமர் அலுவலகம்
கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பிரதமர் கலந்துரையாடல்.
இந்தியாவில் பெருந்தொற்றுக்கு எதிராக பிரதமரின் தலைமையில்
மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு கூகுள் தலைமைச் செயல்
அதிகாரி பாராட்டு.
இந்தியாவில் கூகுள் நிறுவனம் பெருமளவில் முதலீடு செய்யவுள்ள
திட்டங்கள் குறித்து, கூகுள் தலைமைச் செயல் அதிகாரி பிரதமரிடம் விளக்கம்.
விவசாயிகளுக்கு தொழில்நுட்பம் பேருதவி அளிப்பதாக உள்ளது ;
வேளாண் துறையில் செயற்கை நுண்ணறிவுக்கு ஏராளமான
வாய்ப்புகள் உள்ளன : பிரதமர்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆன்லைன் கல்விக்கான
வாய்ப்புகளை விரிவுபடுத்துவது, தாய்மொழியில்
தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
Posted On:
13 JUL 2020 2:31PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திரமோடி, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு.சுந்தர் பிச்சையுடன் இன்று காலை காணொளிக்காட்சி வாயிலாகக் கலந்துரையாடினார்.
கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நம்பகமான தகவல்களை வழங்கவும் கூகுள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்து, பிரதமரிடம் சுந்தர் பிச்சை விளக்கிக் கூறினார். பிரதமர் மேற்கொண்ட ஊரடங்கு எனும் உறுதியான நடவடிக்கை, பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு வலுவான அடித்தளமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தவறான தகவல் பரவுவதைத் தடுத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த தகவல்களைத் தெரிவிக்கவும், கூகுள் நிறுவனத்தின் சிறப்பான பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். சுகாதாரச் சேவைகள் வழங்குவதில், தொழில்நுட்பத்தை மேலும் ஊக்குவிப்பது குறித்தும் அவர் பேசினார்.
இந்தியர்கள் தொழில்நுட்பத்தை அதிவிரைவில் ஏற்றுக்கொள்வதோடு, ஒத்துப்போகும் மனப்பான்மை கொண்டவர்கள் என்றும் பிரதமர் கூறினார். விவசாயிகள், தொழில்நுட்பம் மூலம் பலனடைவதுடன், வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவின் பலன்களைப் பரவலாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய இணையதள ஆய்வகங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் முன்முயற்சிகள் மற்றும் புதிய பொருள்கள் குறித்து பிரதமரிடம், சுந்தர்பிச்சை விளக்கிக் கூறினார். பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் தொடங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், கூகுள் நிறுவனத்தின் வெள்ள அபாய முன்னெச்சரிக்கைத் தகவல்களின் பலன் குறித்தும் எடுத்துரைத்தார்.
கூகுள் நிறுவனம் இந்தியாவில் பெருளவில் முதலீடு செய்ய இருப்பது மற்றும் இந்தியாவுடன் நீடித்த ஒத்துழைப்பை மேம்படுத்த இருப்பது குறித்தும் பிரதமரிடம் விளக்கிக் கூறப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரதமர், உலகிலேயே மிகவும் வெளிப்படையான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்றார். வேளாண்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான இயக்கம் குறித்தும் எடுத்துரைத்த அவர், மறுதிறன் பயிற்சி அளிப்பது குறித்தும் சுட்டிக்காட்டினார்.
புள்ளிவிவரப் பாதுகாப்பு மற்றும் தனிநபர் ரகசியங்களின் பாதுகாப்பு பற்றிய கவலை குறித்தும் பிரதமர் விவாதித்தார். நம்பிக்கைக் குறைபாட்டைப் போக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இணையக் குற்றங்கள் மற்றும் இணையவழித் தாக்குதல் வடிவிலான அச்சுறுத்தல்ககள் பற்றியும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இணையவழிக் கல்வியை விரிவுபடுத்துவதற்கான தீர்வு, மக்களுக்கு அவர்களது தாய் மொழியிலேயே தொழில்நுட்பத்தின் பலன் கிடைக்கச் செய்வது, விளையாட்டுத் துறையில், விரிவுபடுத்தப்பட்ட மற்றும் மெய்நிகர் காட்சிகளை வழங்குவது, மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும், இந்தக் கலந்துரையாடலின் போது விவாதிக்கப்பட்டது.
*****
(Release ID: 1638317)
Visitor Counter : 250
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam