சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் இறப்பு விகிதத்தை குறைக்கும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு வலுவூட்ட கொவிட் சிகிச்சை மேலாண்மை குறித்து மாநில மருத்துவர்களுக்கு தொலை-ஆலோசனை வழிகாட்டுதலை தில்லி எய்ம்ஸ் தொடங்கியுள்ளது

Posted On: 08 JUL 2020 1:59PM by PIB Chennai

கொவிட்-19 தொற்றுக்கான மேலாண்மை உத்தி மற்றும் முழுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொவிட்-19 பாதித்த அனைத்து நோயாளிகளுக்கும் சிறப்பான மருத்துவ சிகிச்சை மேலாண்மையை உறுதி செய்து, மத்திய அரசு இறப்பு விகிதத்தை குறைப்பதில் உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்துக்காக, மத்திய  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தற்போது புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்களை ஈடுபடுத்தி வருகிறார். மாநில மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு நிபுணத்துவ வழிகாட்டுதலையும், சிகிச்சை குறித்த ஆதரவையும்  அவர்கள் வழங்குவார்கள்.

கொவிட்-19 தொற்றுக்கு மருத்துவ சிகிச்சை தலையீட்டு விதிமுறையில்  தொலை-ஆலோசனை முக்கிய அம்சமாகும். புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களைக் கொண்ட சிறப்பு குழு,  பல்வேறு மாநில மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவில், கொவிட்-19 நோயாளிகளுக்கு சிறந்த திறன்மிக்க சிகிச்சை வழங்குவதற்கு  தொலை/வீடியோ மூலம் ஆலோசனைகளை வழங்கும். கொவிட்-19 நோயாளிகளின் இறப்பு விகிதத்தை குறைக்க தரமான சிகிச்சை முறைகளை ஆலோசனையாக வழங்கி மாநிலங்களை கைதூக்கி விடுவார்கள். இந்த தொலை-ஆலோசனை அமர்வுகள் சரியான சமயத்தில் தேவையான, நிபுணத்துவ வழிகாட்டுதலானது மாநிலங்களின் மருத்துவர்களுக்கு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்துக்கு இருமுறை வழங்கப்படும்.

இந்த முயற்சியின் முதல் அமர்வு இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கும். இதற்காக, மும்பையைச் சேர்ந்த 9 மருத்துவமனைகளும், கோவாவைச் சேர்ந்த ஒரு மருத்துவமனையும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவை, நெஸ்கோ ஜம்போ மருத்துவமனை, பி சவுத் (பகுதி 2); சின்கோ முலந்த் ஜபோ மருத்துவமனை- டி(பகுதி2); மலாத் இன்பினிட்டி மால் ஜம்போ மருத்துவமனை, பிஎன் (பகுதி3); ஜியோ கன்வென்சன் மையம் ஜம்போ மருத்துவமனை, எச்இ (பகுதி3); நாயர் மருத்துவமனை; எம்சிஜிஎம் செவன் ஹில்ஸ் ; எம்எம்ஆர்டிஏ பிகேசி ஜம்போ மருத்துவமனை எச்இ(பகுதி2) ; எம்எம்ஆர்டிஏ பிகேசி ஜம்போ மருத்துவமனை எச்இ(பகுதி1) ; மும்பை மெட்ரோ தகிசர் ஜம்போ மருத்துவமனை, டி( பகுதி2); அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, பனாஜி, கோவா ஆகியவை.

 

இந்த மருத்துவமனைகளில் , தனிமைப்படுத்துதல் படுக்கைகள், ஆக்சிஜன் ஆதரவு, ஐசியு படுக்கைகள் உள்பட கொவிட் நோயாளிகளுக்கென 1000 படுக்கைகளுக்கும் அதிகமாக உள்ளன. இன்றைய அமர்வை  தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் ஆனந்த மோகன் தலைமை ஏற்று நடத்துவார்.

இந்த தொலை-ஆலோசனை முறை 500 முதல் 1000 படுக்கை வசதிகளைக் கொண்ட மேலும் 61 மருத்துவமனைகளுக்கும் வாரம் இருமுறை அடிப்படையில் விரிவுபடுத்தப்படும். ஜூலை 31-ம் தேதி வரை மாநிலங்கள் வாரியாக அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 17 மாநிலங்கள் இதில் அடங்கும். (தமிழ்நாடு, தில்லி, குஜராத், தெலுங்கானா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, பிகார், மேற்கு வங்காளம், ஹரியானா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா). ஒவ்வொரு மருத்துவமனையையிலும் தீவிர சிகிச்சை பிரிவைக் கையாளும்  இரண்டு மருத்துவர்கள் மற்றும் அந்த மாநிலத்தின் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் காணொலி காட்சி கலந்துரையாடலில் பங்கேற்பார்கள்.

 

****


(Release ID: 1637206) Visitor Counter : 217