பிரதமர் அலுவலகம்

மனதின் குரல் (13ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள் : 28.6.2020

Posted On: 28 JUN 2020 11:39AM by PIB Chennai

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரல் 2020ஆம் ஆண்டில் தனது பாதியளவு பயணத்தை நிறைவு செய்திருக்கிறது.  இந்தக் காலத்தில் நாம் பல விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தோம்.  இந்த நிலையிலே உலகத்தைப் பீடித்திருக்கும் பெருந்தொற்றும், அது ஏற்படுத்தி இருக்கும் பெரும் சங்கடமும் நமது உரையாடல்களில் அதிகம் இடம் பிடித்திருந்தன என்பது இயல்பான விஷயம் தான் என்றாலும், இன்றைய நாட்களில், தொடர்ந்து ஒரு விஷயம் பற்றி விவாதம் செய்யப்பட்டு வருகிறது என்றால், ‘இந்த ஆண்டு எப்போது கடந்து போகும்’ என்பது தான்.  ஒருவர் மற்றவருக்கு தொலைபேசிவழி தொடர்பு கொண்டால், அப்போது இந்த விஷயம் தான் முதன்மையானதாக இருக்கிறது; இந்த ஆண்டு ஏன் விரைவாகக் கடந்து போக மறுக்கிறது??  நண்பர்களுக்கு இடையில் உரையாடல்களில், இந்த ஆண்டு நல்ல ஆண்டாக இல்லை, 2020 சுபமானதாக இல்லை என்றே வெளிப்படுத்துகிறார்கள்.  எப்படியாவது இந்த ஆண்டு விரைவாகக் கடந்து சென்று விடவேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறார்கள்.

 

            நண்பர்களே, இத்தகைய பேச்சுக்கள் எல்லாம் ஏன் நடைபெறுகின்றன என்று சில வேளைகளில் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு.  6-7 மாதங்களுக்கு முன்பாக, கொரோனா போன்றதொரு சங்கடநிலை வரும் என்றோ, அதற்கு எதிரான போராட்டம் இத்தனை நீண்டிருக்கும் என்றோ நாம் நினைத்துப் பார்த்ததுண்டா?   இந்தச் சங்கடம் ஒருபுறம் என்றால், நெருப்பிற்கு நெய் வார்த்தது போல தேசம் தினம் சந்தித்துவரும் புதிதுபுதிதான சவால்கள் இன்னொரு புறம்.  சில நாட்கள் முன்பாகத் தான் நாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் அம்ஃபான் சூறாவளியின் கோரத் தாண்டவம்….. தொடர்ந்து மேற்குக் கரையோரத்தை நிஸர்க் சூறாவளியின் தாக்குதல்.  பல மாநிலங்களைச் சேர்ந்த நமது விவசாய சகோதர சகோதரிகள், வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்….. இன்னும் இவை தவிர, நாட்டின் பல பாகங்களில் சின்னச்சின்ன நிலநடுக்கங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன; இவை போதாதென்றால் நமது அண்டைநாடுகள் சில புரிந்துவரும் செய்கைகளையும், முன்னிறுத்தும் சவால்களையும் நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.  உண்மையில், ஒரே நேரத்தில் இத்தனை பேரிடர்கள், இந்த அளவிலான பேரிடர்கள், மிக அரிதாகவே நடக்கின்றன.  இப்போது நிலைமை எப்படி ஆகியிருக்கிறது என்றால், எங்கோ சின்னச்சின்ன சம்பவம் நடந்தாலும்கூட, அவற்றையும் இந்த சவால்களோடு இணைத்தே மக்கள் நோக்கத் தொடங்கி இருக்கிறார்கள். 

 

            நண்பர்களே, இடர்கள் வருகின்றன, சங்கடங்கள் வருகின்றன ஆனால், கேள்வி என்னவென்றால், இந்த இடர்கள் காரணமாக 2020ஆம் ஆண்டினை மோசமான ஆண்டாக நாம் கருத வேண்டுமா என்பது தான்.  முந்தைய ஆறு மாதங்கள் கழிந்த விதத்தைப் பார்த்து, இதன் காரணமாக ஆண்டு முழுவதுமே மோசமானது என்று முடிவு செய்வது சரியா?  சரியில்லை.   எனதருமை நாட்டுமக்களே, கண்டிப்பாக சரியில்லை.  ஓராண்டில் ஒரு சவால் வந்தாலும் சரி, 50 சவால்கள் வந்தாலும் சரி, எண்ணிக்கை கூடுதல்-குறைவாக இருப்பதனால் அந்த ஆண்டு மோசமான ஆண்டாகி விடாது.  பாரத நாட்டின் சரித்திரத்தின் ஏடுகளை நாம் புரட்டிப் பார்த்தோமேயானால், எத்தனை எத்தனையோ இடர்கள்-சங்கடங்களை எல்லாம் கடந்து, அவற்றை வெற்றிகொண்டு, மேலும் ஒளிவிட்டுப் பிரகாசித்து வந்திருக்கிறோம்.  பலநூறு ஆண்டுகளாக, பல்வேறு தாக்குதல்கள் பாரதத்தின் மீது தொடுக்கப்பட்டு வந்திருக்கின்றன, பெரும் சங்கடங்கள் ஏற்பட்டன, பாரதம் என்ற நாடே வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டுவிடும், அதன் கலாச்சாரம் அஸ்தமித்து விடும் என்றெல்லாம் மக்கள் கருதினார்கள்; ஆனால், இந்த அனைத்துச் சங்கடங்களிலிருந்தும் பாரதம் மேலும் பிரும்மாண்டமானதாக வளர்ந்து தழைத்தது. 

 

            நண்பர்களே, நம் மக்கள் மத்தியிலே ஒரு கருத்து உண்டு – படைத்தல் நிரந்தரமானது, படைத்தல் நீடித்திருப்பது என்பது தான் அது.  இந்தப் பின்புலத்தில் எனக்கு ஒரு பாடலின் சில வரிகள் நினைவுக்கு வருகின்றன –

 

यह कल-कल छल-छल बहती, क्या कहती गंगा धारा ?

युग-युग से बहता आता, यह पुण्य प्रवाह हमारा I

क्या उसको रोक सकेंगे, मिटनेवाले मिट जाएं,

कंकड़-पत्थर की हस्ती,क्या बाधा बनकर आए I

 

கலகலவெனவே சலசலவெனவே பெருகும் கங்கை என்ன உரைக்கிறது?  யுகயுகமாக நமது புண்ணிய பிரவாகம் தொடர்ந்து சீறிப்பாய்கிறது.   மேலும் இந்தப் பாடலிலே…….

இந்தப் பெருக்கை தடுப்போர் இருந்தால், அவர்கள் தகர்க்கப்படுவார்கள்,  இம்மியளவு சிறிய கற்களா பெருக்கைத் தடுக்கும் நீங்கள் சொல்லுங்கள்.

 

பாரத நாட்டிலும், ஒருபுறம் பெரும் சங்கடங்கள் வந்த வண்ணமும் சென்ற வண்ணமும் இருந்த நிலையில், இந்த அனைத்து இடர்களையும் தகர்த்து, பலப்பல புதிய படைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.  புதிய இலக்கியங்கள் உருவாயின, புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, புதிய சித்தாந்தங்கள் இயற்றப்பட்டன, சங்கடம்நிறைக் காலத்தில்கூட, படைத்தல் செயல்பாடு ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து நடைபெற்றுவந்தது, நமது கலாச்சாரம் தழைத்து-செழித்து வந்தது, நாடும் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணித்து வந்தது.  பாரதநாடு எப்போதும் விக்னங்களை, வெற்றிக்கான படிக்ககட்டுகளாக மாற்றிக் கொண்டே வந்தது.  இந்த உணர்வோடு நாம், இன்றும் கூட,  இந்த அனைத்துச் சங்கடங்களுக்கு இடையேயும் முன்னேறி வர வேண்டும்.  நீங்களும் இந்த எண்ணத்தை மனதில் தாங்கி முன்னேறினீர்கள் என்றால், 130 கோடி நாட்டுமக்களும் முன்னேறுவார்கள், இந்த ஆண்டு, நாட்டிற்கு ஒரு புதிய சாதனை படைக்கும் ஆண்டாக மிளிரும்.  இந்த ஆண்டிலே தான், நாடு புதிய இலக்குகளை எட்ட முடியும், புதிய எழுச்சிகளை நோக்கி உயர முடியும், புதிய சிகரங்களை முத்தமிட முடியும்.  130 கோடி நாட்டுமக்களின் சக்தியின் மீதும், உங்கள் அனைவரின் மீதும், இந்த தேசத்தின் மகத்தான பாரம்பரியத்தின் மீதும் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது.

 

            எனதருமை நாட்டுமக்களே, சங்கடம் என்னதான் பெரியதாக இருந்தாலும், பாரதநாட்டின் பண்பாடு, தன்னலமற்ற சேவை என்ற உணர்விலிருந்து உத்வேகம் பெறுகிறது.  எப்படி பாரதமானது சங்கடம் ஏற்படும் காலத்திலெல்லாம் உலகிற்கு உதவிகரமாக இருந்து வந்துள்ளதோ, அதையொட்டி இன்று அமைதி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் நம் நாட்டின் பங்களிப்பு மேலும் பலமாகி இருக்கிறது.  உலகமும் இந்த வேளையில் பாரதத்தின் உலக சகோதரத்துவ உணர்வை அனுபவித்திருக்கிறது; அதே வேளையில் தனது இறையாண்மை மற்றும் எல்லைகளைப் பாதுகாப்பதில் பாரதத்திடம் இருக்கும் ஆற்றலையும், அதன் அர்ப்பணிப்பையும் கண்டது.  லத்தாக்கில், பாரதநாட்டு நிலப்பரப்பை ஆக்கிரமிக்க நினைத்தவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டது.  பாரதத்துக்கு, நட்பைப் பேணவும் தெரியும், பாதகம் செய்ய நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் தெரியும்.  பாரத அன்னையின் பெருமைக்கு சற்றேனும் களங்கம் ஏற்படுத்த விட மாட்டோம் என்பதை நமது வீரம்நிறை இராணுவ வீரர்கள் நிரூபித்திருக்கின்றார்கள். 

 

            நண்பர்களே, லத்தாக்கில் வீரமரணத்தைத் தழுவிய நமது இராணுவ வீரர்களின் சாகஸச் செயல்களை நாடு முழுவதும் போற்றுகிறது, தனது சிரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறது.  நாடனைத்தும் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது, அவர்கள் முன்னே தலைவணங்குகிறது.  இந்த நண்பர்களின் குடும்பத்தாரைப் போலவே, ஒவ்வொரு இந்தியர் மனதிலும், இவர்களின் இழப்பு பெரும்வலியை ஏற்படுத்தி இருக்கிறது.  தனது வீரம்நிறை நல்மைந்தர்களின் உயிர்த்தியாகத்தின் மீது அவர்களின் உறவினர்கள் மனங்களில் ஏற்பட்டிருக்கும் பெருமிதம், தேசத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் பற்று – இவை தான் தேசத்தினுடைய பலம்.  உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களின் பெற்றோர், தங்களுடைய மற்ற மகன்களையும் கூட இராணுவத்தில் சேவை செய்ய அனுப்பத் தயாராக இருப்பதையும் நீங்களே பார்த்திருக்கலாம்.   பிஹாரில் வசிக்கும் உயிர்த்தியாகி குந்தன் குமாரின் தகப்பனார் கூறிய சொற்கள் இன்னும் என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.  தனது பேரப்பிள்ளைகளையும் தேசப் பாதுகாப்பின் பொருட்டு இராணுவச் சேவைக்கு அனுப்புவேன் என்றார் அவர்.  இந்தத் மனவுறுதி அனைத்து உயிர்த்தியாகிகளின் குடும்பங்களிலும் காணப்படுகிறது.   உண்மையில், இவர்களின் குடும்பத்தாரின் தியாகம் வழிபாட்டுக்குரியது.  பாரத அன்னையைப் பாதுகாக்க வேண்டும் என்ற எந்த மனவுறுதியோடு நமது வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தார்களோ, அதே உறுதிப்பாடு நம்மனைவரின் இலட்சியமாக ஆக வேண்டும்.  நமது முயற்சிகள் அனைத்தும் இந்தத் திசையை நோக்கியவையாக இருக்க வேண்டும், இதனால் நமது எல்லைகளைப் பாதுகாப்பதில் நாட்டின் சக்தி அதிகரிக்க வேண்டும், நாடு மேலும் திறம் படைத்ததாக ஆக வேண்டும், நாடு தற்சார்பு உடையதாக ஆக வேண்டும் – இவையனைத்தும் உயிர்த்தியாகிகளுக்கு நாம் செலுத்தும் மெய்யான சிரத்தாஞ்சலிகளாக அப்போது தான் அமையும்.   அஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஜனி அவர்கள் எனக்கு எழுதியிருக்கும் மடலில், கிழக்கு லத்தாக்கில் நடைபெற்றதைப் பார்த்த பின்னர் நான் ஒரு சபதமேற்றிருக்கிறேன்; அதாவது நான் உள்ளூர்ப் பொருட்களை மட்டுமே வாங்குவேன், அவற்றுக்காகக் குரல் கொடுப்பேன் என்பது தான் அவரது சபதம்.  இப்படிப்பட்ட செய்தி தான் எனக்கு நாட்டின் அனைத்து இடங்களிலிருந்தும் வந்த வண்ணம் இருக்கிறது.  இவரைப் போலவே தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த மோகன் ராமமூர்த்தி என்பவர், பாரதம் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு உடையதாக ஆவதைத் தான் காண வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.

 

            நண்பர்களே, சுதந்திரத்திற்கு முன்பாக, நமது நாட்டின் பாதுகாப்புத் துறை, உலகின் பல நாடுகளைக் காட்டிலும் முன்னேறி இருந்தது.  நம்மிடத்தில் பல ஆயுத தளவாடங்கள் தயாரிக்கும் ஆலைகள் இருந்தன.  அப்போது பல நாடுகள் நம்மை விட அதிகம் பின்தங்கி இருந்தன, இன்றோ அவை நம்மை விட முன்னேறி விட்டன.  சுதந்திரத்திற்குப் பின்னர், பாதுகாப்புத் துறையில் நாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள், நமது கடந்தகால அனுபவங்களிலிருந்து நாம் பெற்றிருக்க வேண்டிய பாடம் ஆகியவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.  ஆனால், இன்று பாதுகாப்புத் துறையில், தொழில்நுட்பத் துறையில், பாரதம் முன்னேற்றம் காணத் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது, பாரதம் தற்சார்பு நிலை நோக்கி முன்னேறி வருகிறது.

           

            நண்பர்களே, எந்த ஒரு இயக்கமும் மக்களின் பங்களிப்பு இல்லாது போனால் அது நிறைவேறாது, வெற்றி பெறாது; ஆகையால் தற்சார்பு பாரதம் என்ற திசையில், ஒரு குடிமகன் என்ற முறையில், நம்மனைவருடைய உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு உணர்வு, ஒத்துழைப்பு ஆகியன மிகவும் அவசியமானவை, இன்றியமையாதவை.   நீங்கள் உள்ளூர்ப் பொருட்களை வாங்கினால், அவற்றுக்காகக் குரல் கொடுத்தால், நீங்களும் இந்த தேசம் வலுவடைய உங்கள் பங்களிப்பை ஆற்றுகிறீர்கள் என்பது உறுதி.  ஒருவகையில் நீங்களும் நாட்டுப்பணியில் ஈடுபடுகிறீர்கள் என்பது பொருள்.  நீங்கள் எந்தத் தொழில் வேண்டுமானாலும் புரியலாம், அனைத்து இடங்களிலும் நாட்டுப்பணியாற்ற ஏராளமான வாய்ப்புகள் கண்டிப்பாக இருக்கின்றன.  நாட்டின் தேவைகளைப் புரிந்து கொண்டு நீங்கள் எந்தச் செயலைப் புரிந்தாலும், அது நாட்டுக்கு நீங்கள் செய்யும் சேவையாகும்.  உங்களுடைய இந்தச் சேவை தேசத்தை ஏதோ ஒருவகையில் பலமுடையதாக்கவே செய்யும்.  மேலும் நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும் – நமது நாடு எந்த அளவுக்கு பலமுடையதாக ஆகிறதோ, அந்த அளவுக்கு உலகிலே அமைதிக்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கும்.  நாட்டிலே ஒரு சொல்வழக்கு உண்டு –

 

வித்யா விவாதாய தனம் மதாய, சக்தி: பரேஷாம் பரிபீடனாய.

கலஸ்ய சாதோ: விபரீதம் ஏதத், ஞானஸ்ய தானாய ச ரக்ஷணாய.

विद्या विवादाय धनं मदाय, शक्ति: परेषां परिपीडनाय |

खलस्य साधो: विपरीतम् एतत्, ज्ञानाय दानाय च रक्षणाय||

 

அதாவது, இயல்பாகவே தீயோனாக இருந்தால், அவன், கல்வியை வீண்வாதத்திலும், செல்வத்தை மமதையிலும், பலத்தை மற்றவர்களைத் துன்புறுத்துவதிலும் செலவு செய்கிறான்.  ஆனால் சான்றோனான ஒருவன், தனக்கு வாய்க்கப்பெற்ற கல்வியை ஞானத்திற்காகவும், செல்வத்தை பிறருக்கு உதவி புரியவும், சக்தியை பிறரைக் காப்பதிலும் பயன்படுத்துகிறான்.  பாரதநாடு என்றுமே தனது சக்தியை இந்த உணர்வுப்படியே போற்றி வந்திருக்கிறது.  பாரதம் ஒரு விஷயத்தில் உறுதியோடு இருக்கிறது - அது என்னவென்றால், நாட்டின் சுயகௌரவம், அதன் இறையாண்மை ஆகியவற்றின் பாதுகாப்பு.  பாரதத்தின் இலக்கு, தற்சார்பு பாரதம்.  பாரதத்தின் பாரம்பரியம், நம்பிக்கை, நட்பு.  பாரதத்தின் உணர்வு, சகோதரத்துவம்.  நாம் இந்த இலட்சியங்களை மனதில் தாங்கி தொடர்ந்து முன்னேறுவோம்.

 

            எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, கரோனா ஏற்படுத்தியிருக்கும் இந்த சங்கட வேளையில் நாடு ஊரடங்கை விட்டு வெளியேறி வருகிறது.  இப்போது நாம் ஊரடங்கு என்ற பூட்டைத் திறந்து கொண்டிருக்கிறோம்.  இப்படி திறக்கப்படும் வேளையில் நாம் இரண்டு விஷயங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.  கொரோனாவை வீழ்த்த வேண்டும், நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும், அதற்கு சக்தியளிக்க வேண்டும்.  நண்பர்களே, ஊரடங்கை விட அதிக எச்சரிக்கையோடு நாம் இந்த தளர்த்தல் காலத்தில் இருப்பது மிகவும் அவசியம்.  உங்களின் இந்த எச்சரிக்கை உணர்வு தான் உங்களை கரோனாவிடமிருந்து பாதுகாக்கும்.  நீங்கள் முக கவசத்தை அணியவில்லை, ஒருமீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை அல்லது மற்ற பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவில்லை என்றால், நீங்கள் உங்களை மட்டுமல்ல, மற்றவர்களையும் ஆபத்தில் சிக்க வைக்கிறீர்கள் என்பதை மிக முக்கியமாக நினைவில் கொள்ளுங்கள்.  குறிப்பாக, வீட்டில் இருக்கும் குழந்தைகள், பெரியோர் விஷயத்தில் இதை நினைவில் வையுங்கள்.  ஆகையால் நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் நான் மீண்டும்மீண்டும் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அசட்டையாக இருந்து விட வேண்டாம், உங்களிடத்திலும் அக்கறை காட்டுங்கள், மற்றவர்களிடத்திலும் கூட.

 

            நண்பர்களே, ஊரங்கு தளர்த்தப்படும் இந்த வேளையில், பாரதத்தை பல பத்தாண்டுகளாகப் பிணைத்திருந்த, வேறு பல விஷயங்களும் தளர்த்தப்பட்டு வருகின்றன.  பல ஆண்டுகளாக நம்முடைய சுரங்கத் துறை முடக்கப்பட்டிருந்தது.  வர்த்தகரீதியான ஏலமுறைக்கு ஒப்புதல் அளிக்கும் ஒரு தீர்மானமானது, நிலையை முழுவதுமாக மாற்றியமைத்து விட்டது.  சில நாட்கள் முன்பாக, விண்வெளித்துறையிலும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் செய்யப்பட்டது.  இந்த சீர்திருத்தங்கள்படி, பல்லாண்டுகளாக முடக்கநிலையில் இருந்த இந்தத் துறை, இப்போது சுதந்திரம் அடைந்திருக்கிறது.  இதன் காரணமாக தற்சார்பு பாரத இயக்கத்துக்கு வேகம் மட்டும் கிடைக்கப் போவதில்லை, தேசத்தின் தொழில்நுட்பமும் மேம்பாடு காணும்.   நமது விவசாயத் துறையை எடுத்துக் கொண்டால், இதில் பல விஷயங்கள் பல பத்தாண்டுகளாக தேங்கிப் போய் முடைநாற்றம் வீசி வந்தது.  இந்தத் துறையும் இப்போது தளர்த்தப்பட்டிருக்கிறது.  இதனால் ஒருபுறம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கே வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் தன்னிச்சையாக விற்கலாம்; மறுபுறத்தில் அவர்களுக்கு அதிகப்படியான கடன்வசதிகளும் கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  நமது நாடு இந்தப் பெரும்சங்கடங்களைச் சந்தித்துவரும் வேளையில், இப்படி பல துறைகள் வரலாற்றுரீதியான முடிவுகளை மேற்கொண்டு, புதிய வளர்ச்சிப் பாதையை திறந்து கொண்டிருக்கின்றன. 

         

          என் அன்பான நாட்டுமக்களே, ஒவ்வொரு மாதமும் நாம் செய்திகள் பலவற்றை வாசிக்கிறோம், காண்கிறோம், இவை நம்மை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி விடுகின்றன.  எப்படி ஒவ்வொரு இந்தியரும் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கரம் நீட்டுவதில் சித்தமாக இருக்கிறார்கள், அதில் ஈடுபாட்டுடனும் முனைப்போடும் இருக்கிறார்கள் என்பதை இவையனைத்தும் நமக்கு நினைவூட்டுகின்றன.  

 

            அருணாச்சல் பிரதேசத்தின் ஒரு கருத்தூக்கம் மிக்க சம்பவத்தை ஊடகத்தில் நான் படிக்க நேர்ந்தது.  இங்கே, சியாங்க் மாவட்டத்தின் மிரேம் கிராமவாசிகள்  செய்திருக்கும் ஒரு வித்தியாசமான செயல், பாரதநாடு முழுவதற்குமே ஒரு எடுத்துக்காட்டாக மாறியிருக்கிறது.  இந்த கிராமத்தைச் சேர்ந்த பலர், கிராமத்திற்கு வெளியே பணியாற்றுகிறார்கள்.  இவர்கள் அனைவரும் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட பிறகு, கிராமம் நோக்கி வருவதை கிராமவாசிகள் கவனித்தார்கள்.  இந்த நிலையில் கிராமவாசிகள், கிராமத்திற்கு வெளியே quarantine, அதாவது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்தார்கள். கிராமத்திலிருந்து சற்று வெளியே, 14 குடிசைகளை உருவாக்கவும், வெளியிலிருந்து வரும் அவர்களின் கிராமத்தைச் சேர்ந்தவர்களை அவற்றிலே தங்கவைக்கவும் கூடிப்பேசி முடிவெடுத்தார்கள்.  இந்தக் குடிசைகளில் கழிப்பறை, குடிநீர்-மின்சார வசதிகள், தினசரி தேவைக்கான அனைத்துவிதமான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.  மிரேம் கிராமவாசிகளின் இந்த சமூகமுயற்சியும் விழிப்புணர்வும் அனைவரின் பார்வையையும் இவர்கள்பால் திருப்பியது. 

 

            நண்பர்களே, மூதுரை ஒன்று உண்டு……

 

स्वभावं न जहाति एव, साधु: आपद्रतोपी सन |

कर्पूर: पावक स्पृष्ट: सौरभं लभतेतराम ||

ஸ்வபாவம் ந ஜஹாதி ஏவ, சாது: ஆபத்ரதோபி சன்.

கற்பூர: பாவக ச்ப்ருஷ்ட: சௌரபம் லபதேதராம்.

         

அதாவது, எப்படி கற்பூரம், தீயினால் சுடப்பட்டாலும் தனது நறுமணத்தைக் கைவிடுவதில்லையோ, அதே போல, நல்லோரும், துன்பம் நேரும் வேளையில் தங்களது நற்குணங்களையும், நல்லியல்பினையும் துறப்பதில்லை.  இன்று நம் நாட்டில் இருக்கும் உழைப்பாளி நண்பர்களும், இதற்கான வாழும் எடுத்துக்காட்டுக்கள்.  இன்றைய காலகட்டத்தில், நாட்டுமக்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் நமது புலம்பெயர் தொழிலாளிகள் தொடர்பான எத்தனை நிகழ்வுகளை நாம் கேள்விப்படுகிறோம்.  உத்திர பிரதேசத்தின் பாராபங்கியில், கிராமத்திற்கு மீண்டுள்ள தொழிலாளர்கள், கல்யாணி நதிக்கு அதன் இயற்கையான நிலையை மீட்டுத்தரும் பணிகளைத் தொடங்கினார்கள்.  நதியில் ஏற்பட்ட முன்னெற்றத்தைப் பார்த்து, அக்கம்பக்கப் பகுதிகளில் இருந்த விவசாயிகள், ஏனையோர் என அனைவரும் உற்சாகம் அடைந்தார்கள்.  கிராமத்திற்கு வந்தவுடன், தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தவாறே, நமது தொழிலாளி நண்பர்கள், தங்கள் திறன்களை எப்படிப் பயன்படுத்தி, தங்களருகே இருந்த நிலையை மாற்றியமைத்தார்கள் என்பது அற்புதமான விஷயம்; ஆனால் நண்பர்களே, இப்படிப்பட்ட ஏராளமான கதைகள் நமது இலட்சக்கணக்கான கிராமங்களில் காணக்கிடைக்கின்றன, அவை நம்மை இன்னும் அடையவில்லை.   உங்களின் அருகிலே இப்படி ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி இருக்கலாம்.  உங்களுடைய கவனம் இவற்றில் சென்றிருந்தால், நீங்கள் அப்படிப்பட்ட உத்வேகம் அளிக்கவல்ல நிகழ்வுகளை என்னோடு கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளவும்.  சங்கடம் நிறைந்த இந்த வேளையில், ஆக்கப்பூர்வமான இந்தச் சம்பவங்கள், இந்தக் கதைகள், மற்றவர்களுக்கும் கருத்தூக்கம் அளிக்கும்.

 

என் மனம்நிறை நாட்டுமக்களே, கரோனா வைரஸானது, நமது வாழ்க்கைமுறையையே மாற்றியமைத்து விட்டது.  லண்டனிலிருந்து வெளியாகும் Financial Times பத்திரிக்கையில் ஒரு மிகவும் சுவாரசியமான கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.  கரோனா காலத்தில் இஞ்சி, மஞ்சள் உட்பட பிற மசாலாக்களின் தேவை, ஆசிய நாடுகள் தவிர, அமெரிக்கா வரையிலும்கூட அதிகமாகி இருக்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இந்த காலகட்டத்தில் நமது நோய் எதிர்ப்புத்திறனை வளர்த்துக் கொள்வதில் உலகனைத்தின் கவனமும் இருக்கிறது; அதைப் போன்றே நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கவல்ல இந்தப் பொருட்களின் தொடர்பு நமது நாட்டுடன் இருக்கிறது.  நாம் இவற்றின் சிறப்பம்சத்தை, உலக மக்களுக்கு எளிய, சுலபமான வழிகளில் புரிய வைக்க வேண்டும்.  ஆரோக்கியமான உலகைப் படைப்பதில் இது நமது பங்களிப்பாக இருக்கும். 

 

எனதருமை நாட்டுமக்களே, கரோனா போன்ற பெரும் சங்கடம் வந்திருக்கவில்லை என்றால், ஒருவேளை, வாழ்க்கை என்றால் என்ன, வாழ்க்கை ஏன் ஏற்பட்டிருக்கிறது, வாழ்க்கை எத்தகையது ஆகியன பற்றி நமக்கு நினைவுகூட இல்லாது போயிருந்திருக்கும்.  பலர் மனஅழுத்தங்களோடு வாழ்ந்து வருகிறார்கள்.   இன்னொரு புறம், இந்த ஊரடங்குக் காலத்தில், சந்தோஷங்களின் சின்னச்சின்ன விஷயங்களைக் கூட தாங்கள் மீள்கண்டுபிடித்திருத்திருப்பதாக சிலர் என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  பாரம்பரியமான உள்ளரங்கு விளையாட்டுக்களை, குடும்பத்தாரோடு சேர்ந்து விளையாடி ஆனந்தமாக இருந்த அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

 

நண்பர்களே, நமது தேசத்தில் பாரம்பரியமான விளையாட்டுக்களின் நிறைவான மரபு உண்டு.  நீங்கள் பச்சீஸீ என்ற ஒரு விளையாட்டின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கலாம்.  இந்த விளையாட்டைத் தமிழ்நாட்டில் “பல்லாங்குழி” எனவும், கர்நாடகத்தில் “அலிகுலிமணே” எனவும், ஆந்திரத்தில் ”வாமன குண்டலூ” எனவும் அழைக்கிறார்கள்.  உத்திகள் நிறைந்த இந்த ஆட்டம், ஒரு பலகையைப் பயன்படுத்தி விளையாடப்படுவது; இதில் பல குழிகள் இருக்கும், இவற்றில் மணிகள், சோழிகள் அல்லது புளியங்கொட்டைகள் போன்றவற்றை ஆடுபவர்கள் தூக்கிப் போட்டுப் பிடிக்க வேண்டும்.  இந்த விளையாட்டு தென்னிந்தியாவிலிருந்து தென்கிழக்கு ஆசியா, பிறகு உலகம் முழுவதிலும் பரவியது என்று கூறப்படுகிறது.

 

நண்பர்களே, இன்று ஒவ்வொரு குழந்தையும் ஏணி-பாம்பு விளையாட்டு பற்றி அறிந்திருக்கிறது.  ஆனால் இதுவும் பாரம்பரியாகவே ஒரு இந்திய விளையாட்டின் வடிவம் தான் என்பதை நீங்கள் அறிவீர்களா?  இதை மோக்ஷபாடம் அல்லது பரமபத சோபானம் என்பார்கள்.  நம் நாட்டிலே மேலும் ஒரு பாரம்பரியமான விளையாட்டு உண்டு – குட்டா.  சிறியவர் பெரியவர் என அனைவருக்குமான ஆட்டம் இது.  இதற்குத் தேவை ஒரே அளவிலான 5 சிறிய கற்கள், இனி நீங்கள் குட்டா ஆடத் தயார்.  ஒரு கல்லை மேலே தூக்கிப் போட்டு அது அந்தரத்தில் இருக்கும் வேளையில் நீங்கள் தரையில் வைக்கப்பட்டிருக்கும் ஏனைய கற்களைத் திரட்டிக் கொள்ள வேண்டும்.  பொதுவாக நமது உள்ளரங்க விளையாட்டுக்களுக்கென எந்த ஒரு பெரிய கருவிகளும் தேவையாக இருப்பதில்லை.  ஒருவர் சாக்கட்டியையோ, கல்லையோ கொண்டு வந்தால், அதைக் கொண்டு நிலத்தில் சில கோடுகளைக் கிழிப்பார்கள், பிறகு ஆட்டம் தொடங்கி விடும்.  சில விளையாட்டுக்களில் பகடை தேவைப்படலாம், சோழிகள் அல்லது புளியங்கொட்டைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

 

நண்பர்களே, இன்று நான் இந்த விஷயங்கள் குறித்துப் பேசும் போது, பலருக்குத் தங்கள் சிறுபிராய நினைவலைகள் வந்து மோதும் என்பதை நான் நன்கறிவேன்.  அந்த இனிமைநிறை நாட்களை நீங்கள் ஏன் மறந்து போனீர்கள், அந்த விளையாட்டுக்களை நீங்கள் ஏன் மறந்தீர்கள் என்று தான் நான் கேட்கிறேன்.  வீட்டிலிருக்கும் தாத்தா-பாட்டிகள், மூத்தோரிடத்தில் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், புதிய தலைமுறையினருக்கு இந்த விளையாட்டுக்களை நீங்கள் அளிக்க வேண்டும் என்பது தான்; நீங்கள் அளிக்கவில்லை என்றால் வேறு யார் அளிப்பார்கள்?   இணையவழிப் படிப்பு பற்றி நாம் பேசும் வேளையில், ஒரு சமநிலையை ஏற்படுத்த, இணையவழி விளையாட்டுக்களிலிருந்து விடுதலை அடையவும், நாம் கண்டிப்பாக இப்படிச் செய்தே ஆக வேண்டும்.  நமது இளைய தலைமுறையினருக்காக, நமது ஸ்டார்ட் அப்புகளுக்காக, இங்கே, ஒரு புதிய, வலுவான சந்தர்ப்பம் காத்திருக்கிறது.  நாம் பாரதநாட்டின் பாரம்பரியமான உள்ளரங்க விளையாட்டுக்களின் ஒரு புதிய-கவர்ச்சிகரமான வடிவத்தை முன்வைக்க வேண்டும்.  இவற்றோடு தொடர்புடைய பொருட்களைத் திரட்டுவோர், அளிப்போர், ஸ்டார் அப்புகள் ஆகியன மிகவும் பிரபலமடைந்து விடும்.  நாம் மேலும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்; அதாவது நமது இந்திய விளையாட்டுக்களுமே கூட உள்ளூரைச் சேர்ந்தவை தாமே, உள்ளூர் விஷயங்களுக்காகக் குரல் கொடுப்போம் என்ற சபதத்தை நாம் ஏற்றிருக்கும் இந்த வேளையில், என்னுடைய இளைய நண்பர்களிடத்திலே நான் சிறப்பான ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன்.  பிள்ளைகளே, நீங்கள் நான் கூறுவது கேட்டு அதன்படி நடந்து கொள்வீர்கள் தானே!!  ஒரு வேலை செய்யுங்கள், உங்களுக்கு சற்று நேரம் கிடைக்கும் போது, உங்கள் பெற்றோரிடம் அனுமதி பெற்று, மொபைலை கையிலெடுங்கள், உங்கள் தாத்தா-பாட்டியினிடத்திலோ, வீட்டில் இருக்கும் வேறு பெரியோரிடத்திலோ, அவர்களுடன் நேர்காணல் நிகழ்த்தி அதைப் பதிவு செய்யுங்கள்.  நீங்கள் டிவியில் பார்த்திருப்பீர்களே, எப்படி ஊடகத்தார் நேர்முகம் காண்கிறார்கள், அதைப் போலவே நீங்களும் பேட்டி எடுங்கள்.  சரி அவர்களிடம் என்ன கேள்வி கேட்பீர்கள்?   நானே இதற்கான துணுக்குகளை அளித்து விடுகிறேன், சரியா?  அவர்களின் சிறுபிராயத்தில் அவர்களின் வாழ்க்கைமுறை எப்படி இருந்தது, என்ன விளையாட்டுக்களை விளையாடினார்கள், என்ன நாடகங்களை அவர்கள் பார்த்தார்கள், என்ன திரைப்பட்டங்களைப் பார்த்தார்கள், விடுமுறை நாட்களில் மாமா வீட்டுக்குச் சென்றார்களா, வயல்வெளிகளுக்குச் சென்றார்களா, எப்படியெல்லாம் பண்டிகைகளைக் கொண்டாடினார்கள் என, இப்படிப் பல வினாக்களை நீங்கள் அவர்களிடத்திலே கேட்கலாம்.  அவர்களுக்குமேகூட, 40-50 ஆண்டுகள் அல்லது 60 ஆண்டுகள் பழமையான நினைவுகளின் மீது படிந்திருக்கும் தூசியினைத் தட்டிப் பார்க்கும் போது ஆனந்தம் உண்டாகும், 40-50 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா எப்படி இருந்தது, அவர்கள் இருந்த இடம், அவர்களின் சூழ்நிலை, மக்களின் வழிமுறைகள் என பல விஷயங்களை அவர்களிடம் கேட்கலாம், இவை உங்களுக்கு எளிதான ஒரு கற்றல் அனுபவத்தை ஏற்படுத்தும்.  நீங்களே பாருங்களேன், இது உங்களுக்கு எத்தனை சந்தோஷமாக இருக்கும், ஒட்டுமொத்த குடும்பத்துக்குமே இது ஒரு மிகப்பெரிய பொக்கிஷமாக, ஒரு காணொளி ஏடாக ஆகிப் போகும். 

 

நண்பர்களே, சுயசரிதை அல்லது சரிதை வாயிலாக வெளியாகும் உண்மைகள் மிகவும் பயன்தரும் சாதனங்கள் என்பது சரிதான்.  நீங்களும் உங்கள் வீட்டுப் பெரியோரிடத்தில் உரையாடும் போது, அவர்கள் காலத்திய விஷயங்கள், அவர்களின் சிறுபிராயம், அவர்களின் இளமைக்காலம் போன்றவற்றை உங்களால் எளிதில் புரிந்து கொள்ள இயலும்.  தங்களது சிறுபிராய நினைவுகளையும் சம்பவங்களையும் பற்றி, இந்த சந்தர்ப்பத்தில் தங்களின் வீட்டுப் பிள்ளைகளிடத்தில் பகிர்ந்து கொள்ள, பெரியோர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. 

 

நண்பர்களே, நாட்டின் மிகப்பெரிய ஒரு பாகத்தில் இப்போது பருவமழைக்காலம் தொடங்கி விட்டது.  இந்த முறை பருவமழை குறித்து வானிலையாளர்களும் உற்சாகத்தோடும், எதிர்பாப்போடும் இருக்கிறார்கள்.  மழை நன்றாக இருந்தால் நமது விவசாயிகளின் விளைச்சலும் செழிப்பாக இருக்கும், சூழல் பசுமை நிறைந்து காணப்படும்.  மழைக்காலத்தில் இயற்கையும் தனக்குத் தானே புதுத்தெம்பை ஊட்டிக் கொள்கிறது.   மனிதர்கள், இயற்கை ஆதாரங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு, இயற்கை தான் இழந்ததை ஒருவகையில் மழைக்காலத்திலே இட்டு நிரப்பிக் கொள்கிறது.  ஆனால் இந்த இட்டு நிரப்புதல் எப்போது நடைபெறும் என்றால், நாமும் இயற்கை அன்னைக்குத் துணை நிற்கும் போது, நம்முடைய பொறுப்புகளை நிறைவேற்றும் போது தான்.   நாம் செய்யக்கூடிய கடுகத்தனை முயற்சிகூட, இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேருதவியாக இருக்கும்.  நமது நாட்டுமக்கள் பலரும் இது தொடர்பாக பெரிய பணிகளை ஆற்றி வருகிறார்கள்.

 

கர்நாடகத்தின் மண்டாவலியில் 80-85 வயதுடைய ஒரு பெரியவரின் பெயர் காமேகவுடா ஆகும்.  காமேகவுடா அவர்கள் ஒரு எளிய விவசாயி என்றாலும், அவருடைய தனித்துவம் அலாதியானது.  அவர் செய்திருக்கும் ஒரு வேலை பற்றி நீங்கள் கேள்விப்பட்டீர்கள் என்றால், ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.  80-85 வயது மதிக்கத்தக்க காமேகவுடா அவர்கள் தனது கால்நடைகளை மேய்க்கிறார், கூடவே அவர் தனது பகுதியில் புதிய குளங்களை வெட்டும் சவாலையும் மேற்கொண்டிருக்கிறார்.  அவர் தனது பகுதியில் நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாட்டை நீக்க விரும்புகிறார்; ஆகையால் நீர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒட்டி, சிறியசிறிய குளங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.  இது ஆச்சரியத்தை ஏற்படுத்தவல்ல விஷயமில்லையா!!  80-85 வயது நிரம்பிய காமேகவுடா அவர்கள், தனது முயற்சி-உழைப்பு ஆகியவற்றின் துணையோடு, 16 குளங்களை இப்போதுவரை தோண்டியிருக்கிறார்.  அவர் தோண்டியிருக்கும் குளங்கள் பெரியனவாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவருடைய முயற்சி மிகவும் பெரியது.  இன்று, இந்தப் பகுதி அனைத்திற்கும்  இந்தக் குளங்கள் காரணமாக புதியதொரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது.

 

நண்பர்களே, குஜராத்தின் வடோதராவின் ஒரு எடுத்துக்காட்டும் கூட அதிக உத்வேகம் அளிக்கவல்லது.  இங்கே மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புக்களும் இணைந்து ஒரு சுவாரசியமான இயக்கத்தை நடத்தினார்கள்.  இந்த இயக்கம் காரணமாக இன்று வடோதராவில், ஓராயிரம் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு செய்யப்பட்டு வருகிறது.  இதனால், ஒவ்வொரு ஆண்டும் சுமார்  10 கோடி லிட்டர் நீர், வீணாகிப் போவது தடுக்கப்பட்டு வருகிறது.

 

நண்பர்களே, இந்த மழைக்காலத்தில் இயற்கையைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைப் பேணவும், நாம் புதிதாக சிந்திக்க வேண்டும், ஆக்கப்பூர்வமானவற்றை செய்யவும் வேண்டும்.  பல இடங்களில், பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு தயாரிப்பு முஸ்தீபுகள் தொடங்கப்பட்டு வருகின்றன.  இந்த முறை நாம் முயற்சி மேற்கொண்டு, சூழலுக்கு இசைவான பிள்ளையார் திருவுருவங்களை உருவாக்கி, அவற்றைப் பூசிக்கலாமா?   எந்தப் பொருட்களால் நதிகள்-குளங்களின் நீருக்கும், அதிலே வாழும் உயிரினங்களுக்கும் பங்கம் ஏற்படுமோ,  அத்தகைய பொருட்களைப் பயன்படுத்தித் திருவுருவங்களை நாம் படைக்காமல் இருக்க முடிவு செய்வோம்.   நீங்கள் இந்த விஷயங்களுக்கு இடையே மேலும் ஒன்றை மறந்து விட மாட்டீர்கள் என்பதை நான் நன்கறிவேன் – அதாவது இந்த பருவமழைக்காலமானது தன்னோடு கூடவே பல நோய்களையும் கொண்டு தருகிறது.  கொரோனா காலத்தில் நாம் இவற்றிலிருந்து விலகிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  ஆயுர்வேத மருந்துகள், கஷாயம், வெந்நீர் ஆகியவற்றை பயன்படுத்தி வாருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்.

 

என் மனம்நிறை நாட்டுமக்களே, இன்று ஜூன் மாதம் 28ஆம் தேதியன்று பாரதம் தனது காலஞ்சென்ற பிரதமர் ஒருவருக்குத் தனது சிரத்தாஞ்சலிகளைச் செலுத்துகிறது.  அவர் இக்கட்டான சூழ்நிலையில் தேசத்துக்குத் தலைமை ஏற்றார்.  நமது இந்த முன்னாள் பிரதம மந்திரி, பி.வி. நரசிம்ம ராவ் அவர்கள் தான்.  அவரது நூற்றாண்டின் தொடக்க நாள் இன்று.  பி.வி. நரசிம்ம ராவ் அவர்கள் பற்றிப் பேசும் வேளையில், அவரது அரசியல் தலைமை தொடர்பான பரிமாணமும் நம் முன்னே வருகிறது; அதே வேளையில், அவர் பன்மொழிப் பண்டிதர் என்பதும் அதே அளவு உண்மை.  இந்திய மற்றும் அயல்நாட்டு மொழிகளில் அவரால் பேச முடிந்திருந்தது.  அவர் ஒருபுறம் இந்திய பண்பாட்டுப் பதிவுகளில் ஊறியிருந்தாலும், மற்றொரு புறத்தில், அவருக்கு மேற்கத்திய இலக்கியம்-விஞ்ஞானம் ஆகியவை தொடர்பான ஞானமும் இருந்தது.  அவர் பாரதத்தின் அதிக அளவு அனுபவமுடைய தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.  அவருடைய வாழ்கையில் இன்னொரு பக்கமும் உண்டு, இதைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும்.  நண்பர்களே, நரசிம்ம ராவ் அவர்கள் தமது சிறுபிராயத்திலேயே சுதந்திரப் போராட்டக் களத்தில் குதித்து விட்டார்.  ஹைதராபாதின் நிஜாம், வந்தே மாதரம் பாட அனுமதி மறுத்த போது, அவருக்கு எதிராக போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார்.  அப்போது அவருக்கு வயது 17 மட்டுமே.  சிறிய வயதிலேயே நரசிம்ம ராவ் அவர்கள் அநியாயத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதில் முன்னணி வகித்தார்.  தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதில் அவர் எந்த முயற்சியையும் விட்டு வைத்ததில்லை.  நரசிம்ம ராவ் அவர்களிடம் இருந்த சரித்திரம் பற்றிய புரிதலும் ஆச்சரியமானது.  மிக எளிய பின்புலத்திலிருந்து வந்த ராவ் அவர்களின் முன்னேற்றம், கல்வி மீது அவர் அளித்த அழுத்தம்,  கற்றலில் அவருக்கு இருந்த பேரார்வம், இவை அனைத்துடனும் கூட, தலைமை தாங்கும் திறம் – இவை அனைத்தும் நினைவில் கொள்ள வேண்டியவை.  நரசிம்ம ராவ் அவர்களின் நூற்றாண்டின் போது, நீங்கள் அனைவரும், அவருடைய வாழ்க்கை, சிந்தனைகள் ஆகியவை பற்றி எத்தனை முடியுமோ அத்தனை அறிந்து கொள்ள முயலுங்கள்.  நான் மீண்டும் ஒருமுறை அவருக்கு என்னுடைய சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன்.

 

எனதருமை நாட்டுமக்களே, இந்த முறை மனதின் குரலில் பல விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தோம்.  அடுத்தமுறை நாம் சந்திக்கும் வேளையில், மேலும் புதிய விஷயங்களை நாம் அலசலாம்.   நீங்கள், உங்களுடைய செய்திகளை, உங்கள் நூதனமான கருத்துக்களை, கண்டிப்பாக அனுப்பி வையுங்கள்.  நாம் அனைவரும் இணைந்து முன்னேறுவோம், இனிவரும் நாட்களில் மேலும் ஆக்கப்பூர்வமான வகையில் செயல்படுவோம்.  நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நான் கூறியதைப் போல, இந்த ஆண்டு, அதாவது 2020இல் நாம் மிகச் சிறப்பாக செயல்படுவோம், முன்னேறுவோம், தேசத்தை புதிய சிகரங்களுக்குக் கொண்டு சேர்ப்போம்.  2020ஆம் ஆண்டு, வரும் பத்தாண்டிலே பாரத நாட்டுக்கு ஒரு புதிய திசையை அளிக்கவல்லதாக அமையும்.  இந்த நம்பிக்கையை மனதில் ஏந்தி, நீங்களும் முன்னேறிச் செல்லுங்கள், ஆரோக்கியமாக இருங்கள், ஆக்கப்பூர்வமானவர்களாக வாழுங்கள்.  இந்த நல்வாழ்த்துக்களோடு, உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள்.  வணக்கம். 

*****


(Release ID: 1634959) Visitor Counter : 427