குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
இந்தியாவில் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு, அறிவாற்றலை செல்வமாக மாற்றுவது அவசியம் – திரு.நிதின் கட்கரி
Posted On:
26 JUN 2020 12:37PM by PIB Chennai
கோவிட் பெருந்தொற்று பாதிப்புக்குப் பிறகு, பொறியியல் ஏற்றுமதித் துறையின் வளர்ச்சி குறித்து, பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் பிரதிநிதிகளுடன், மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் சாலைப்போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.நிதின்கட்கரி, நேற்று (25 ஜுன், 2020) காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடினார்.
ஊரடங்கு காலத்தில், பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் குறுகிய கால நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தாலும், “ஆக்கப்பூர்வ மனப்பான்மையும் தன்னம்பிக்கையும்” இருந்தால், தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறலாம் என்று அவர் பொறியியல் ஏற்றுமதியாளர்களை ஊக்குவித்தார். பொருளாதாரத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரிடையேயும் வலுவான ஒத்துழைப்பு மற்றும் பிணைப்பு இருந்தால், தற்போதைய பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுவர அது உதவும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையடலின்போது, குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையினரின் முககியத்துவத்தை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இத்துறையினரின் பங்களிப்பையும் வெகுவாகப் பாராட்டினார். தற்போது, நாட்டின் ஏற்றுமதியில் 48% அளவிற்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை பங்களிப்பை வழங்கி வருவதோடு, தொழில்நுட்ப நவீனமயம் மற்றும் உற்பத்தி அதிகரிப்பு மூலம் ஏற்றுமதி அளவை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். இது தவிர, தளவாடங்கள், போக்குவரத்து செலவு மற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியம் போன்றவை கணிசமாகக் குறைந்திருப்பது, இந்தியாவில் உற்பத்தித் தொழில் துறையின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். உலக நாடுகள் கோவிட்-பெருந்தொற்றிலிருந்து படிப்படியாக மீண்டுவரும் நிலையில், நாட்டின் ஏற்றுமதிக்கு ஆதரவளிக்கும் விதமாக, இந்தியாவில், பெட்டிகளில் அடைத்து அனுப்புதல் மற்றும் தரப்படுத்துதல் வசதிகளை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் உள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மூலதன ஆதரவு அளிக்கும் விதமாக, மத்திய குறு,சிறு, நடுத்தரத் தொழில்துறை தனி நிதியம் ஒன்றை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். லாபகரமாகவும், ஜி.எஸ்.டி. கணக்கு மற்றும் வருமானவரி கணக்குகளை முறையாக தாக்கல் செய்துவரும் குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மறு மதிப்பீடு செய்யப்பட்டு, தரச்சான்றிதழ் வழங்கப்படுவதோடு, அரசிடமிருந்து 15% மூலதன உதவியைப் பெறலாம். இதன் மூலம் அந்த நிறுவனங்கள், மூலதனச் சந்தையில் படிப்படியாக நிதி திரட்டுவதுடன், குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக ஏற்படுத்தப்படவுள்ள பங்குச்சந்தையில் சேர்ந்து, அன்னிய முதலீடுகளை ஈர்க்க முடியும்.
*****
(Release ID: 1634490)
Visitor Counter : 225