பிரதமர் அலுவலகம்
இந்தியா – சீனா எல்லைப்பகுதி நிலவரம் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை.
நமது வீரமிக்க வீரர்கள் லடாக்கில் உயிர்த் தியாகம் செய்துள்ள போதிலும், நம் தாய்நாட்டிற்கு எதிராக சவால் விட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர் : பிரதமர்.
நமது எல்லைக்குள் யாரும் வரவும் இல்லை, நமது எல்லைச் சாவடிகள் எதுவும் கைப்பற்றப்படவும் இல்லை : பிரதமர்.
இந்தியா, அமைதி மற்றும் நட்புறவையே விரும்புகிறது, எனினும், இறையாண்மைக்குத் தான் முன்னுரிமை: பிரதமர்.
தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நமது ராணுவப் படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது : பிரதமர்.
நமது எல்லைகளை மேலும் பாதுகாப்பானவையாக மாற்ற ஏதுவாக,
எல்லைப் பகுதிகளில் கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்கு அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது : பிரதமர்.
தேசப்பாதுகாப்பு மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிக்கான கட்டுமானப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன : பிரதமர்
அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட உறுதி அளித்திருப்பதுடன், பிரதமரின் தலைமை மீதும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Posted On:
19 JUN 2020 9:03PM by PIB Chennai
இந்தியா – சீனா எல்லைப்பகுதி நிலவரம் குறித்து, பிரதமர் திரு.நரேந்திரமோடி, இன்று (19 ஜுன், 2020), காணொளிக் காட்சி வாயிலாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ராணுவப் படையினரின் வீரம்
நம்நாட்டின் எல்லைப் பகுதியைப் பாதுகாக்கும் வீரர்களுக்கு ஒருமித்த ஆதரவு தெரிவித்திருப்பதுடன், அவர்களது மனதைரியம் மற்றும் துணிச்சல் மீது, நாம் அனைவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த நாடே உள்ளது என்று, அனைத்துக்கட்சிக் கூட்டம் வாயிலாக உறுதிபட தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
கூட்டத்தின் நிறைவாகப் பேசிய பிரதமர், நமது எல்லைக்குள் யாரும் (சீனப் படைகள்) நுழையவும் இல்லை, நமது எல்லைச் சாவடிகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார். லடாக்கில் உயிர்த் தியாகம் செய்துள்ள நமது ராணுவ வீரர்கள் 20 பேரும், நம் தாய்நாட்டிற்கு எதிராக சவால் விடுத்தவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டியுள்ளதாகவும் அவர் கூறினார். அவர்களது வீரம் மற்றும் தியாகத்தை, இந்த நாடு என்றென்றும் நினைவிற்கொள்ளும்.
எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் சீனா-வின் செயல்பாடுகளால், ஒட்டுமொத்த நாடே, வேதனையும் கோபமும் அடைந்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டைப் பாதுகாப்பதற்காக, நமது வீரர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்றும் அவர் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு உறுதியளித்தார். படைக்குவிப்பு, சண்டை அல்லது தரை, வான் மற்றும் கடல்வழி பதிலடி தாக்குதல் என, நாட்டைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை நமது முப்படையினரும் மேற்கொண்டு வருகின்றனர். நம் நாட்டின் ஒரு அங்குல நிலத்திற்குக் கூட யாரும் சொந்தம் கொண்டாட முடியாத அளவிற்கு, நாடு வலிமையுடன் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். பல்வேறு முனைகளிலும் ஒருங்கிணைந்து செயல்படும் திறன் படைத்தவர்களாக இந்தியப் படையினர் உள்ளனர். தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, ராணுவத்திற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தாலும், ராஜதந்திர ரீதியாகவும், இந்தியா தனது நிலைப்பாட்டை சீனாவிடம் தெளிவாகத் தெரிவித்துவிட்டது.
எல்லைப்புறக் கட்டமைப்பை மேம்படுத்துதல்
அமைதி மற்றும் நட்புறவையே இந்தியா விரும்புவதாகக் குறிப்பிட்ட பிரதமர், அதேவேளையில் நாட்டின் இறையாண்மைக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார். நமது எல்லைப் பகுதிகள் மேலும் பாதுகாப்பானவையாக இருக்கும்வகையில், எல்லைப்புறக் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள அரசு அதிக முககியத்துவம் அளித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். போர் விமானங்கள், நவீனரக ஹெலிகாப்டர்கள், ஏவுகணைப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நமது படையினருக்குத் தேவையைப் பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அன்மையில் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு வசதிகளும், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி நெடுகிலும் ரோந்து செய்யும் திறனும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி நிலவரம் குறித்த தகவல்களை நாம் அறிந்துகொண்டு, அதற்கேற்ப தக்க பதிலடி கொடுககும் திறனும் அதிகரித்துள்ளதாகக் கூறினார். முன்பு, தடையின்றி நடமாடியவர்கள், தற்போது நமது வீரர்களால், தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதுவே, சில நேரங்களில் பதற்றத்திற்கு காரணமாகி விடுகிறது. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நமது வீரர்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் பொருள்களை வழங்குவதன் மூலம், சிக்கலான பகுதியில் அவர்களது பணி எளிதாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டு நலன் மற்றும் அதன் குடிமக்கள் நலன் மீதான அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய பிரதமர், வர்த்தகம், தொலைத்தொடர்பு அல்லது பயங்கரவாத எதிர்ப்பு போன்றவற்றில், அந்நிய நெருக்கடிகளுக்கு அரசு ஒருபோதும் அடிபணியாது என்றும் தெரிவித்தார். தேசப் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகள், தொடர்ந்து அதிவேகமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். நமது எல்லைகளைப் பாதுகாக்கும் திறன், நமது ராணுவப் படையினருக்கு இருப்பதாகவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அவர் உறுதியளித்தார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில், நமது வீரர்களின் தியாகத்தை நாடு ஒருபோதும் மறக்காது என்றார். வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெய்சங்கர் பேசுகையில், எல்லைப்புற மேலாண்மை பற்றிய இந்தியா -சீனா உடன்படிக்கைகள் பற்றிய விவரங்களை விளக்கிக் கூறியதுடன், 1999-இல் அமைச்சரவையால், அடையாளம் காணப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக முன்னுரிமை அளிக்குமாறு 2014-இல் பிரதமர் பிறப்பித்த உத்தரவுகள் குறித்தும் எடுத்துரைத்தார். எல்லைப்பகுதியின் சமீபத்திய சம்பவங்கள் குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்து
லடாக்கில் நமது ராணுவப் படைகள் வெளிப்படுத்திய துணிச்சலுக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். தற்போதைய தருணத்தில் பிரதமரின் தலைமை மீது நம்பிக்கை தெரிவித்த தலைவர்கள், அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் உறுதியளித்தனர். தற்போதைய நிலைமையை எதிர்கொள்வதற்கான தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
செல்வி மம்தா பானர்ஜி பேசுகையில், அவரது கட்சி மத்திய அரசுக்கு உறுதியான ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் இடையே, எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை என்றும், அந்நிய நாடுகள் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக எவ்வித ஒற்றுமையின்மையையும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் திரு.நிதிஷ்குமார் தெரிவித்தார். பிரதமரின் தலைமையில், நாடு பாதுகாப்பாக உள்ளதென்று ஒட்டுமொத்த நாடும் உணர்வதாக, திரு.சிராக் பாஸ்வான் குறிப்பிட்டார். பிரதமரின் நடவடிக்கைகளைப் பாராட்டிய திரு.உத்தவ் தாக்கரே, ஒட்டுமொத்த நாடும் பிரதமருக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறினார்.
திருமதி.சோனியாகாந்தி பேசுகையில், எல்லைப் பகுதியில் என்ன நடக்கிறது என்ற விவரம் ஏதும் தெரியவில்லை என்றும், உளவுத் தகவல்கள் மற்றும் அது தொடர்பான அரசின் நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். வீரர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டுமா, வேண்டாமா என்பது போன்றவற்றை சர்வதேச ஒப்பந்தங்கள் முடிவு செய்ய முடியாது என்று கூறிய திரு.சரத்பவார், அரசியல் கட்சிகள் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டுமென்றார். வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பிரதமர் மேற்கொண்டு வரும் பணிகள், தொடர வேண்டுமென திரு.கான்ராட் சங்மா வலியுறுத்தினார். தற்போதைய தருணம் அரசியலுக்கு உகந்தது அல்ல என்றும், பிரதமர் மேற்கொள்ளும் முடிவுகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் செல்வி.மாயாவதி குறிப்பிட்டார். திரு.மு.க.ஸ்டாலின் பேசுகையில், எல்லைப் பிரச்சினை தொடர்பான பிரதமரின் சமீபத்திய விளக்கத்தை வரவேற்பதாகக் கூறினார்.
கூட்டத்தில் பங்கேற்று, கருத்துக்களை பகிர்ந்துகொண்ட தலைவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
*****
(Release ID: 1633112)
Visitor Counter : 224
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam