சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மத்தி்ய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஏடிஐபி திட்டத்தின் கீழ் முதல் முறையாக மெய்நிகர் தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் உபகரணங்கள், கருவிகள் விநியோகம்

Posted On: 15 JUN 2020 2:01PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றால் இதுவரை கண்டிராத சூழல் நிலவினாலும், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு கிடைக்கச் செய்வதற்காக மத்திய அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் கருவிகளையும், உபகரணங்களையும் கட்டணமில்லாமல் விநியோகிப்பதற்காக,  கொரோனா முடக்க நிலைக் காலத்தில், முதல் முறையாக மெய்நிகர் முகாம் ஒன்று மத்திய அரசின் ஏடிஐபி திட்டத்தின் கீழ், பஞ்சாபில் உள்ள ஃபிரோஸ்பூர் மாவட்டத்தின் தல்வண்டி பாய் வட்டாரத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட், காணொலிக் காட்சி வாயிலாக இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

          திரு தாவர்சந்த் கெலாட் தனது உரையில், கொவிட்-19 பெருந்தொற்றுக் கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் கருவிகளையும், உபகரணங்களையும் விநியோகிப்பதற்காக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், நாடெங்கிலும் தற்போது மெய்நிகர் ஏடிஐபி முகாம்களை நடத்துவதென தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்தார்.

   நமது நாட்டில் நடத்தப்பட்ட ஏடிஐபி முகாம்களில் பத்து கின்னஸ் சாதனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  மாற்றுத்திறனாளி மாணவர்கள், தமது கல்வியைத் தொடரவும், தற்சார்புடன் செயல்படுவதற்கும் அவர்களுக்கு கல்வி உதவித்தொகையையும், நிதியுதவியையும், பல்வேறு திட்டங்கள் வாயிலாக அமைச்சகம் அளித்து வருவதாகவும் திரு. கெலாட் கூறினார். இந்தியா முழுவதும் செல்லத்தக்க, மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பட்ட அடையாள அட்டையை பெறும் திட்டத்தில் சேருமாறு அவர் மாற்றுத்திறனாளிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் கேட்டுக் கொண்டார். இதுவரை, நாடெங்கிலும் உள்ள 31 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு இத்தகைய அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன.  

இன்று நடைபெற்ற மெய்நிகர் முகாமில் தல்வண்டி வட்டாரத்தில் உள்ள மொத்தம் 95 பயனாளிகளுக்கு, ரூ.12 லட்சம் மதிப்புள்ள 166 பல்வேறு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

-------




(Release ID: 1631665) Visitor Counter : 266