ரெயில்வே அமைச்சகம்

இந்திய ரயில்வே மாநிலங்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை தொடர்ந்து இயக்கும்

Posted On: 12 JUN 2020 1:53PM by PIB Chennai

இந்திய ரயில்வே, மாநிலங்களின் கோரிக்கைக்கு  ஏற்ப   இடம்பெயர்ந்த
தொழிலாளர்களின் பாதுகாப்பான, வசதியான பயணத்துக்கென ஷ்ரமிக்  சிறப்பு   ரயில்களை தொடர்ந்து இயக்கும்.   ரயில்வே வாரியத்தின் தலைவர்   மாநிலங்களுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இதுவரை மொத்தம் 63 ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் தேவை என மாநிலங்கள் தெரிவித்துள்ளன. கேரளாஆந்திரப்பிரதேசம்கர்நாடகாதமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத்,  மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய 7 மாநிலங்கள்  ஷ்ரமிக்  சிறப்பு  ரயில்களுக்கான கோரிக்கையை விடுத்துள்ளன. ஆந்திரப்பிரதேசம் 3 ரயில்கள், குஜராத் 1, ஜம்மு  காஷ்மீர் 9,  கர்நாடகா 6,   கேரளா 32,  தமிழ்நாடு 10,   மேற்கு வங்கம் 2 என மொத்தம்  63 ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.   உத்தரப்பிரதேச அரசு தனது ரயில் தேவையை இன்னும் தெரிவிக்கவில்லை.


 ரயில்வே வாரியத் தலைவர் மாநிலங்களுக்கு மே 29,  ஜூன் 3,    ஜூன் 9 ஆகிய   தேதிகளில்   எழுதிய கடிதங்களில்  இது  பற்றி தெரிவித்துள்ளார் என்பது   குறிப்பிடத்தக்கது.    "கோரிக்கை கிடைக்கப் பெற்ற 24 மணி நேரத்தில், உடனடியாக கேட்கப்பட்ட எண்ணிக்கையிலான ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே அளிக்கும்" என்று அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.


 


 

மாநிலங்களின்   கோரிக்கை  கிடைக்கப்பெற்ற  24 மணி  நேரத்தில் ஷ்ரமிக் ரயில்கள் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்படும் என்று மாநில அரசுகளுக்கு  இந்திய   ரயில்வே   அறிவித்துள்ளது.   ஷ்ரமிக்   ரயில்களின் தேவை குறித்து தெரிவிக்குமாறு  கேட்டுக்கொண்டுள்ள இந்திய ரயில்வே,   எஞ்சியுள்ள   தொழிலாளர்கள் ரயில்  மார்க்கமாக ஊர் திரும்பத் தேவையான ரயில்களைச் சரியாகக் கணித்து நிர்ணயிக்குமாறு கூறியுள்ளது. எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால், அவற்றுக்கு ஏற்ப கூடுதல் ஷ்ரமிக் சிறப்பு  ரயில்கள் இயக்கப்படும் என்றும் இந்திய ரயில்வே உறுதி அளித்துள்ளது.  கணிக்கப்பட்ட  தேவைகளுக்கு மேற்பட்டு உருவாகும் கூடுதல் தேவைகளை எதிர்கொள்ளவும் தயார் என்று அது கூறியுள்ளது.


இதுவரை,   இந்திய   ரயில்வே    இயக்கிய    4277க்கும்   கூடுதலான   ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் மூலம் சுமார் 60 லட்சம் பேர் தங்களது  சொந்த  மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஷ்ரமிக் சிறப்பு  ரயில்கள் 2020 மே 1-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

----



(Release ID: 1631150) Visitor Counter : 248