பிரதமர் அலுவலகம்

கேதார்நாத் மறுகட்டுமானத் திட்டம் குறித்து பிரதமர் ஆய்வு

Posted On: 10 JUN 2020 1:47PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநில அரசுடன் கேதார்நாத் மேம்பாடு மற்றும் மறுகட்டுமானத் திட்டம் குறித்து காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

ஆலயத்தை மறுகட்டமைக்கும் தமது தொலைநோக்கு பற்றி குறிப்பிட்ட பிரதமர், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை, சுற்றுச்சூழலுக்கு உகந்த, இயற்கையுடன் இயைந்து, சுற்றுப்புறங்களைப் பாதுகாக்கும் வகையில், மாநில அரசு உரிய கால அவகாசத்திற்குள், படைப்பாற்றலுடன் வடிவமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தற்போதைய சூழல் மற்றும் புனித தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை மிகவும் குறைவாக உள்ள நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்ய தற்போதைய கட்டுமானப் பருவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரதமர் யோசனை தெரிவித்தார். பணிகளை மேற்கொள்ளும் போது, சமூக இடைவெளி விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வருங்காலங்களில், சுற்றுலா நீடித்திருக்க உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை உருவாக்க இது உதவும்.

குறிப்பிட்ட யோசனைகளின் ஒரு பகுதியாக, ராம்பனிலிருந்து கேதார்நாத் வரையிலான பிரிவில், இதர பாரம்பரிய மற்றும் ஆன்மீகத் தலங்களை மேம்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்களையும் பிரதமர் வழங்கினார். கேதார்நாத் முக்கிய ஆலயத்தின் மறுமேம்பாட்டுப் பணிகளுடன், கூடுதலாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

வாசுகி தால் வழியாக ,பக்தர்களைக் கவரும் பிரம்ம கமால் வாடிகா ( தோட்டம்) மற்றும் அருங்காட்சியகம் ஆகியவற்றின் மேம்பாட்டு நிலவரம் தொடர்பான விரிவான விவாதமும் கூட்டத்தில் நடைபெற்றது. பழைய நகரக் குடியிருப்புகள் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் ஆகியவற்றின் முந்தைய அசல் கட்டடக்கலை தோற்றம் மாறாமல், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகன நிறுத்துமிடங்கள் போன்ற இதர வசதிகளை கோவிலில் இருந்து வரும் வழியில் இடைவெளி விட்டு மேற்கொள்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இந்த விவாதத்தில், உத்தரகாண்ட் முதலமைச்சர் திரு. திரிவேந்திர சிங் ராவத் மற்றும் இதர மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

********



(Release ID: 1630644) Visitor Counter : 271