பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கோவிட்-19 விஷயத்தில் விழிப்புணர்வு தான் தேவை - அச்சம் தேவையில்லை: டாக்டர் ஜிதேந்திர சிங்.

Posted On: 07 JUN 2020 5:33PM by PIB Chennai

கோவிட் நோய்த் தாக்குதலை எதிர்த்துப் போராட விழிப்புணர்வு தான் தேவையே தவிர, அதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்று  வட கிழக்குப் பிராந்திய வளர்ச்சித் துறை இணை அமைச்சர்  (தனிப்பொறுப்பு) மற்றும் பிரதமர் அலுவலகத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார். கோவிட்-19 பாதித்த நோயாளிகளின் ஆரோக்கியத்தைக் கவனிக்கும் COVID BEEP வசதியை இன்று தொடங்கி வைத்த அவர், இந்த நோய்த் தாக்குதலைத் தடுப்பது மற்றும் விழிப்புணர்வின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார். ஹைதராபாத் ஐ.ஐ.டி., அணுசக்தித் துறை ஆகியவற்றுடன்  சேர்ந்து ஹைதராபாத் ESIC மருத்துவக் கல்லூரி உருவாக்கிய இந்தக் கருவி முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, குறைந்த விலை உள்ளதாக இருக்கிறது. சரியான நேரத்தில், சிறப்பாக தொடங்கி சுமார் இரண்டு மாத காலம் அமல் செய்யப்பட்ட முடக்க நிலையில் இருந்து படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில், இந்த விழிப்புணர்வு அவசியம் என்று அவர் கூறினார்.

ஹைதராபாத் ESIC மருத்துவக் கல்லூரியின் முயற்சிகளைப் பாராட்டிய அமைச்சர், ஐ.ஐ.டி. ஹைதராபாத், ECIL ஹைதராபாத் மற்றும் TIFR ஹைதராபாத் போன்ற உயர் சிறப்பு வாய்ந்த நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இப்போதைய கோவிட்-19 நெருக்கடி நிலையில், மேலும் ஒரு புதுமை சிந்தனை படைப்பை உருவாக்கி இருப்பதாக அவர் பாராட்டினார். ஏற்கெனவே உருவாக்கியுள்ள ஏராளமான சாதனங்களின் வரிசையில் இதுவும் சேர்ந்து கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனங்கள் கை கோர்த்தால் எப்படி சிறந்த தீர்வுகளை உருவாக்க முடியும், நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு மிகக் குறைந்த செலவில் தீர்வுகளை உருவாக்க முடியும் என்பதற்கு இது மிகச் சரியான உதாரணமாக இருப்பதாகக் கூறினார். உண்மையாக இது தற்சார்பு இந்தியா முயற்சியாக உள்ளது என்று அவர் புகழ்ந்தார். கோவிட் பாதிப்புக்கு செயல்திறன் மிக்க எதிர்ப்பு சிகிச்சையாக COVID BEEP இருக்கும்; உலகமே இப்போது அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நோய்க்கு எதிரான சிறந்த சாதனமாக இருக்கும் என்று டாக்டர் சிங் கூறினார்.

சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் பல தீர்வுகளை உருவாக்கிக் கொடுத்துள்ள ECIL சார்ந்துள்ள அணுசக்தித் துறையின் பணிகளை டாக்டர் சிங் பாராட்டினார். வழக்கமான கருத்துகளுக்கு அப்பாற்பட்டு, மனிதகுலத்தின் நன்மைகளுக்காக அணுசக்தியை பயன்படுத்த முடியும் என்பதை காட்டும் வகையில் அணுசக்தித் துறை செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.



(Release ID: 1630096) Visitor Counter : 294