சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்.

Posted On: 07 JUN 2020 5:46PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளிப்பதில் அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளில், தொழில்நுட்ப நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்கவில்லை என்று ஊடகங்களில் சில பிரிவினர் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த யூகங்கள் மற்றும் புகார்கள் அடிப்படை ஆதாரமற்றவை. கோவிட் பற்றிய விஷயங்கள் அறிந்துள்ள தொழில்நுட்ப நிபுணர்களிடம் அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. அறிவியல் ரீதியிலான தகவல்கள், யோசனைகள், கோவிட் குறித்த வழிகாட்டுதல்கள் தொடர்ந்து பெறப்படுகின்றன. டி.எச்.ஆர் மற்றும் ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் அலுவலகச் செயலாளரால்  உருவாக்கப்பட்ட,  நிதிஆயோக் அமைப்பின் உறுப்பினர் (சுகாதாரம்) தலைமையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைச் செயலர், டி.எச்.ஆர். செயலர் ஆகியோரை இணைத் தலைவர்களாகக் கொண்ட தேசிய அளவிலான பணிக் குழு (என்.டி.எப்.) கோவிட்-19 தொடர்பான செயல்பாடுகளைக் கவனித்து வருகிறது. இந்தக் குழுவில் 21 உறுப்பினர்கள் உள்ளனர். அரசு மற்றும் அரசு அமைப்புக்கு வெளியில் உள்ள கோவிட் சார்ந்த விஷயங்கள் அறிந்த நிபுணர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். பொது சுகாதாரம் மற்றும் தொற்றும் தன்மையுள்ள நோய்களுக்கான சிகிச்சைத் துறையின் நிபுணர்கள் அதிக எண்ணிக்கையில் இதில் உள்ளனர். கோவிட்-19 நோய்த் தாக்குதலின் சிக்கலான சூழ்நிலை மற்றும் பின்விளைவுகளைக் கருத்தில் கொண்டு, மருத்துவம், நுண்ணுயிரியல், மருந்தாளுமைத் துறை நிபுணர்களையும், திட்டச் செயலாக்க அனுபவம் கொண்டவர்களையும் உள்ளடக்கியதாக இந்தக் குழு உள்ளது.

மேலும், இந்தப் பணிக் குழு, நான்கு நிபுணர் குழுக்களை உருவாக்கியுள்ளது. தொற்றும் தன்மையுள்ள நோய்கள் மற்றும் கண்காணிப்பு (13 உறுப்பினர்கள்) மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சி (15 உறுப்பினர்கள்) ஆகிய குழுக்களில் பொது சுகாதாரம் மற்றும் தொற்றும் தன்மையுள்ள நோய் சிகிச்சைத் துறை நிபுணர்கள் மட்டுமே அதிகமாக இடம் பெற்றுள்ளனர். அரசுத் துறைகள் மற்றும் அரசு அமைப்புக்கு வெளியில் உள்ளவர்களும் இதில் இருக்கின்றனர்.

இந்தப் பணிக் குழு 20க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தியுள்ளது. நோய்த் தொற்று குறித்த அறிவியல்பூர்வமான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை முறையாக இந்தக் குழு தெரிவித்து வருகிறது. மருத்துவப் பரிசோதனை, நோய்த் தடுப்பு, சிகிச்சை மற்றும் கண்காணிப்பு விஷயங்களுக்கான வழிகாட்டுதல்களை இந்தப் பணிக் குழு அளித்து முக்கிய பங்களிப்பு செய்துள்ளது. இந்தப் பணிக் குழு தவிர, பொது சுகாதாரத் துறை நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்ட, நிபுணர்கள் குழு ஒன்றை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

நோய்த் தொற்று விஷயத்தில் இந்தியாவின் அணுகுமுறை குறித்து, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. கோவிட்-19 தாக்குதல்கள் அதிகரித்த காரணத்தால் முடக்கநிலை முடிவு எடுக்கப்பட்டது. நோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் குறைந்த அளவுக்கு வந்ததால், அதிக பாதிப்பு மற்றும் மரணங்கள் ஏற்படும் அபாயம் இருந்தது. பல மேற்கத்திய நாடுகளில் இந்த நிலைமை இருந்தது. நமது நாட்டில் கோவிட்-19 பாதித்த நோயாளிகள் எண்ணிக்கை, நமக்கிருக்கும் மருத்துவ வசதிகளைவிட அதிகமாகிவிடக் கூடிய சாத்தியம் இருந்தது.

தேசம் எதிர்நோக்கி இருந்த, வேகமாக நோய்த் தாக்குதல் பரவிய நிலைக்கு ஈடுகொடுக்கும் வகையிலான கொள்கைகள் மற்றும் திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இது புதிய வைரஸாக இருப்பதால், இது பற்றிய அனைத்து விவரங்களும் இன்னும் தெரியாத நிலை உள்ளது. களத்தில் கிடைக்கும் விஷயங்கள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில், அரசு செயல் திட்ட அணுகுமுறையை சீர் செய்து கொண்டு வருகிறது.

பொது சுகாதாரத் துறையில் நன்கு தெரிந்துள்ளவாறு, வெவ்வேறு தொற்று நோய்களுக்கும் வெவ்வேறு மாதிரியான அணுகுமுறைகளைக் கையாள வேண்டியுள்ளது. உண்மையில், படிநிலையிலான இந்த அணுகுமுறை, சுகாதார வசதிகளை தயார்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான வழிமுறையாக இருந்துள்ளது. இந்தியா முன்கூட்டியே, எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மக்களும், உலக சுகாதார அமைப்பும், உலக சுகாதாரத் துறையினரும் பாராட்டியுள்ளனர். முடக்கநிலை அமல் குறித்து, அனைத்து மாநில அரசுகளிடமும் ஒருமித்த ஆதரவு கிடைத்துள்ளது.

முடக்கநிலை அமல் செய்தது மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, லட்சக்கணக்கான நபர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மரணங்கள் தடுக்கப்பட்ட விளைவுகள் குறித்த தகவல்களை அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. சுகாதாரத் துறை மற்றும் மக்கள் தயார்படுத்திக் கொள்வதில் ஏராளமான ஆக்கபூர்வமான விஷயங்கள் நடந்துள்ளதையும் அரசு குறிப்பிட்டுள்ளது. முடக்கநிலை தளர்த்தப்பட்ட பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் ஜெர்மனி போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு எத்தனை பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற கணக்கு குறைவாகவே உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு 17.23 பேருக்கு நோய் பாதிப்பு, ஒரு லட்சம் பேருக்கு 0.49 மரணம் (2020 ஜூன் 6 ஆம் தேதியிட்ட உலக சுகாதார நிறுவன அறிக்கை) என்ற அளவில் தான் பாதிப்பு உள்ளது.

கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளித்தலுக்கான பல்வேறு கொள்கை முடிவுகள், தலையீடுகள் மற்றும் செயல் திட்ட அணுகுமுறைகள் குறித்த தகவல்கள், அவற்றால் ஏற்பட்ட தாக்கங்கள் ஆகியவை பல்வேறு ஊடகத் தளங்கள், வழக்கமான ஊடகச் செய்தி வெளியீடுகள், தினசரிப் பத்திரிகைக் குறிப்புகள் மூலம் வெளியிடப்பட்டு வருகின்றன. தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப் படுகின்றன. தொலைக்காட்சிகளில் விவாதங்கள் மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் இந்தத் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.


(Release ID: 1630085) Visitor Counter : 353