சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

நகர்ப்புற வனங்கள் என்ற முக்கியத்துவத்துடன் உலக சுற்றுச்சூழல் தினம் மெய்நிகர் நிகழ்வாகக் கொண்டாட்டம்

Posted On: 04 JUN 2020 5:15PM by PIB Chennai

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக (World Environment Day - WED) கொண்டாடப் படுகிறது. ஐக்கியநாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் - UNEP அறிவிக்கும் கொள்கையில் கவனம் செலுத்தி சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாறுபாடு குறித்த இந்த விழாவுக்காக அமைச்சகம் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்கிறது. இந்த ஆண்டுக்கான கொள்கை அம்சமாக `பல்லுயிர்ப் பெருக்கம்" என்ற தலைப்பு அளிக்கப் பட்டுள்ளது. கோவிட்-19 நோய்த் தாக்குதல் சூழ்நிலை காரணமாக, இந்த ஆண்டு நகர்ப்புற வனங்கள் என்ற தலைப்பில் கவனம் செலுத்தி உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுகளை மெய்நிகர் (virtual) நிகழ்வுகளாக இந்த அமைச்சகம் நடத்தவுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான துறையின் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் முதன்மை விருந்தினராக இதில் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சி ஜூன் 5 ஆம் தேதி -https://www.youtube.com/watch?v=IzMQuhmheoo  –இல் நேரலையாக ஒளிபரப்பாகும்.

இந்தியாவில் நிலப்பரப்பு குறைவாக, மனிதர்கள் அடர்வு அதிகமாக, கால்நடைகள் எண்ணிக்கை அடர்வு அதிகமாக உள்ள நிலையில், பல்லுயிர்ப் பெருக்கத்தில் சுமார் 8 சதவீதம் பங்கு வகுக்கிறது. விலங்குகள் மற்றும் தாவர இனங்களில் பல வகையானவை இருப்பதால் இந்தியாவில் பல்லுயிர்ப்பெருக்க வளம் அதிகமாக உள்ளது. ஆபத்தின் விளிம்பில் உள்ள 35 உலகளாவிய பல்லுயிர்ப் பெருக்க மையங்களில் 4 மையங்கள் இந்தியாவில் உள்ளன. பல்லுயிர்ப் பெருக்கம் என்பது தொலைதூரத்தில் உள்ள வனப்பகுதிகள் சார்ந்ததாக மட்டும் இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால், நகரமயமாக்கல் அதிகரித்து வரும் நிலையில், அந்தப் பகுதியிலும் பல்லுயிரிப் பெருக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. நகரங்களில் பூங்காக்கள் இருந்தாலும், வனங்கள் இல்லை என்பதால், 200 மாநகராட்சிகள் மற்றும் நகரங்களில் நகர்ப்புற வனங்களை உருவாக்கும் ஒரு திட்டத்தை இந்த அமைச்சகம் மீண்டும் தொடங்கியுள்ளது. நகரங்களில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்ய உதவக் கூடியதாக இந்த நகர்ப்புற வனங்கள் அமையும்.

புனே நகரில் வனத் துறையின் 40 ஏக்கரில் ஒரு வனம் உருவாக்கப் பட்டுள்ளது. 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள், 5 குளங்கள், 2 கண்காணிப்புக் கோபுரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல மரங்கள் 25 - 30 அடி உயரம் வளர்ந்துள்ளன. இந்த ஆண்டு இன்னும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படும். இப்போது 23 தாவர இனங்களுடன் அந்த வனப் பகுதி பல்லுயிர்ப் பெருக்கத்தின் வளமையான பகுதியாக இருக்கிறது. 29 பறவை இனங்கள், 15 பட்டாம்பூச்சி இனங்கள், 10 நீர்வாழ் உயிரினங்கள், 3 பாலூட்டி இனங்கள் அந்த வனத்தில் உள்ளன. சூழலியல் சமநிலையை பேணுவதாக மட்டுமின்றி, நடப்பதற்கு நல்ல சூழ்நிலையை அளிப்பதாகவும், காலை மற்றும் மாலை நேரங்களில் நடப்பவர்களுக்கு உகந்த பகுதியாகவும் நகர்ப்புற வனங்கள் உள்ளன. நாட்டின் பிற பகுதிகளுக்கு வஜ்ரே நகர்ப்புற வனம் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

 


(Release ID: 1629436) Visitor Counter : 334