அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொரோனா வைரசுடன் எப்படி வாழ்வது என்பதற்கான ஐந்து ஆலோசனைகள்.

Posted On: 02 JUN 2020 10:49AM by PIB Chennai

70 நாள்கள் முடக்கத்திற்குப் பிறகு முடக்க நீக்கம் 1.0 செயல்பாட்டில் உள்ளது. ஜூன் 1, 2020 முதல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முடக்கத்தால், பொருளாதாரமும், வாழ்க்கையும் கட்டுப்பாட்டுடன் ஒவ்வொரு கட்டமாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.   இது புதிய இயல்பு வாழ்க்கையின் தொடக்கம், இது நீண்ட காலத்திற்கு இருக்கும். கொரோனா வைரசுடன் நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்களும், அதிகாரிகளும் ஆலோசனை தெரிவித்துள்ளனர். தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதால், நாம் புதிய இயல்பான வழியில் வாழ வேண்டும். இது குறித்து “இந்தியா சயின்ஸ் வயர்”-க்கு  பேட்டியளித்த மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே விஜயராகவன், வைரசுடன் வாழ்வது பற்றி 5 ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

 “நாம் வைரசை மாற்ற வேண்டும் அல்லது நாம் நமது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும்; வைரசை மாற்றுவதற்கு காலம் ஆகும்”  என பேராசிரியர் விஜயராகவன் கூறியுள்ளார். மருந்து  மற்றும் தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, முறையான பரிசோதனைக்குப் பிறகு இவைகள் மக்களுக்கு கிடைக்க நீண்ட காலம் ஆகும். அனைவருக்கும் மருந்து மற்றும் தடுப்பு மருந்து உற்பத்தி செய்வதற்கு நீண்ட காலமாகும். இதற்கிடையில், தொற்றை எதிர்கொள்ள நாம்  நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பேராசிரியர் ராகவனின் ஐந்து ஆலோசனைகள் இதோ:

1) வீட்டை விட்டு வெளியேறும் போது முககவசம் அணிதல்.

2) தீவிர கைசுத்தத்தைப்  பின்பற்றுதல்.

3) தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல்.

4) பரிசோதனை மற்றும் கண்காணிப்பு.

5) தனிமைப்படுத்திக் கொள்ளுதல்.

மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம்  வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.  முகம் மற்றும் வாயை மூட வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் பயன்படுத்த வேண்டும். இது போன்ற வழிகாட்டுதல்களை http://psa.gov.in/information-related-covid-19என்ற இணையதளத்தில் பல இந்திய மொழிகளில் பதிவிறக்கம் செய்யலாம்.



(Release ID: 1628713) Visitor Counter : 271