பிரதமர் அலுவலகம்

ராஜிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் 25வது ஆண்டு தொடக்க விழாவில் பிரதமர் பேசினார்.


கொவிட்-19-க்கு எதிரான போரில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பங்களிப்பு வெல்லமுடியாதது என புகழாரம்.

கண்ணுக்குத் தெரியாததற்கும், வெல்லமுடியாததற்கும் இடையேயான போரில், நமது சுகாதாரப் பணியாளர்கள் நிச்சயம் வெல்வார்கள் – பிரதமர்.

நாட்டில் சுகாதாரச் சேவையை மேம்படுத்த நான்கு முனைத் திட்டத்தை அறிவித்தார்.

தொலைதூர மருத்துவம், சுகாதாரத் துறையில் இந்தியத் தயாரிப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சுகாதார சேவைகள் ஆகியவற்றை மேம்படுத்தும் வழிகளை வரவேற்றார்.

Posted On: 01 JUN 2020 1:10PM by PIB Chennai

பெங்களூருவில் உள்ள ராஜிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் 25வது ஆண்டு தொடக்க விழாவில் பிரதமர் இன்று காணொளிக் காட்சி மூலம் பேசினார்.

 

கொவிட்-19 நிலைமையைக் கையாள்வதில் கர்நாடக அரசின் முயற்சிகளைப் பிரதமர் பாராட்டினார்.

 

இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய நெருக்கடியை உலகம் சந்தித்து வருவதாக திரு. மோடி கூறினார். உலகப் போர்களுக்கு பின் உலகம் எவ்வாறு மாறியதோ, அதே போன்று கொவிட்டுக்கு முந்தைய உலகமும், கொவிட்டுக்கு பிந்தைய உலகமும் வெவ்வேறாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

 

மருத்துவ சமூகமும் மற்றும் நமது கொரோனா வீரர்களும் தான் கொவிட்-19க்கு எதிரான இந்தியாவின் தைரியமான போரின் வேர்கள் என்று கூறிய பிரதமர்கண்ணுக்குத் தெரியாததற்கும், வெல்லமுடியாததற்கும் இடையேயான போரில், நமது சுகாதார பணியாளர்கள் நிச்சயம் வெல்வார்கள் என்றார்.

 

கும்பல் மனநிலை காரணமாக முன்னணியில் இருக்கும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த பிரதமர், அவற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதாகக் கூறினார். முன்னணிப் பணியில் இருப்பவர்களுக்கு ரூ 50 லட்சம் மதிப்பிலான காப்பீட்டையும் அரசு வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

 

இந்த உலகமயமாக்கல் காலத்தில் பொருளாதாரப் பிரச்சனைகள் மீதான விவாதங்களைத் தவிர்த்து, வளர்ச்சிக்கான மனிதம் சார்ந்த விஷயங்கள் மீது கவனம் செலுத்த வேண்டுமென்று பிரதமர் அறைகூவல் விடுத்தார்.

 

சுகாதாரத் துறையில் நாடுகள் அடையும் முன்னேற்றங்கள் முன்னெப்போதையும் விட தற்போது முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், சுகாதாரச் சேவையிலும், மருத்துவக் கல்வியிலும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

சுகாதாரச் சேவை, அதன் உள்கட்டமைப்பு மற்றும் அனைவருக்கும் அது சென்றடைவதை மேம்படுத்த நான்கு தூண்களைக் கொண்டத் திட்டத்துக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

 

அதன் முதல் தூண் நோய்த் தடுப்பு சுகாதாரச் சேவை என்றும், யோகா, ஆயுர்வேதம் மற்றும் பொது உடல் வலிமையின் மீது முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வாழ்க்கை முறை சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 40,000க்கும் அதிகமான நல மையங்கள் திறக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். நோய்த் தடுப்பு சுகாதாரச் சேவையின் மற்றுமொரு முக்கியமான பகுதி தூய்மை இந்தியா இயக்கம் ஆகும்.

 

கட்டுப்படியாகும் செலவில் மருத்துவம் என்பது இரண்டாவது தூண் ஆகும். உலகின் மிகப்பெரிய சுகாதார சேவைத் திட்டமான ஆயுஷ்மான் பாரத்தின் வெற்றியைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இரண்டு வருடத்துக்கும் குறைவான காலத்தில் எவ்வாறு ஒரு கோடி பேர், குறிப்பாக பெண்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் வாழ்பவர்கள், இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற்றார்கள் என்பதைப் பற்றி பேசினார்.

 

விநியோக முறைகளில் மேம்பாடுகள் என்பது மூன்றாவது தூண் ஆகும். இந்தியா போன்றதொரு தேசத்துக்கு முறையான மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவக் கல்வி உள்கட்டமைப்பு என்பது அவசியம் என்று பிரதமர் கூறினார்.

 

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி அல்லது ஒரு முதுநிலை மருத்துவ நிறுவனம் இருப்பதை உறுதி செய்ய வேலை நடைபெறுவதாக அவர் கூறினார். கூடுதலாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைப்பதில் நாடு கண்டுள்ள துரித வளர்ச்சியை பிரதமர் அடிக்கோடிட்டார்.

 

30,000க்கும் அதிகமான எம் பி பி எஸ் இடங்களையும், 15,000 முதுநிலை இருக்கைகளையும் கடந்த ஐந்து வருடங்களில் நாம் உருவாக்கி இருக்கிறோம் என்று அவர் கூறினார். சுதந்திரத்துக்குப் பிறகான எந்த ஆட்சியுடன் ஒப்பிடும் போதும் இது மிக அதிக வளர்ச்சி ஆகும்.

இந்திய மருத்துவக் குழுவுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட முடிவு குறித்தும் பிரதமர் பேசினார்.

 

ஒரு நல்ல யோசனையின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான அனைத்து திட்டங்களையும் முழு மூச்சில் அமல்படுத்துவது தான் நான்காவது தூண் என்று அவர் கூறினார்.

 

தேசிய ஊட்டச்சத்து இயக்கம் இளைஞர்களுக்கும், அன்னையர்களுக்கும் எவ்வாறு உதவுகிறது என்பது பற்றிய பேசிய அவர், காசநோயை 2025க்குள் ஒழித்துக் கட்ட இந்தியா உறுதி பூண்டுள்ளதாகவும், உலகளாவிய இலக்கான 2030- விட இது 5 ஆண்டுகள் முன்னதாகும் என்றும் தெரிவித்தார்.

 

இந்திர தனுஷ் திட்டத்தின் மூலம் தடுப்பு மருந்து வழங்குதல் நான்கு மடங்கு உயர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

 

ஐம்பதுக்கும் அதிகமான பல்வேறு ஒன்றிணந்த மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கானப் படிப்பை விரிவுபடுத்த புதிய சட்டம் ஒன்றுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்ததென்று கூறிய பிரதமர், துணை மருத்துவப் பணியாளர்களுக்கான தேவையை இது பூர்த்தி செய்யும் என்றார்.

 

தொலைதூர மருத்துவம், சுகாதாரத் துறையில் இந்தியத் தயாரிப்புகள் (மேக் இன் இந்தியா) மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சுகாதாரச் சேவைகள் ஆகியவற்றை மேம்படுத்தும் வழிகள் ஆகிய மூன்று விஷயங்கள் குறித்து விவாதித்து யோசனைகளை அளிக்குமாறு விழாவில் கலந்துக் கொண்டவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

 

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் எவ்வாறு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் என்-95 முகக்கவசங்கள் ஆகியவற்றை ஆரம்ப காலத்திலேயே தயாரித்தார்கள் என்பது குறித்து பாராட்டி பேசிய அவர், ஒரு கோடிக்கும் அதிகமான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களும், 1.5 கோடி முகக்கவசங்களும் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

 

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஆரோக்கிய சேது செயலி எவ்வாறு உதவிகரமாக உள்ளது என்பது குறித்தும் பிரதமர் புகழ்ந்துரைத்தார்.

***
 

 



(Release ID: 1628312) Visitor Counter : 289