பிரதமர் அலுவலகம்

ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் 25வது நிறுவனர் நாளையொட்டி பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 01 JUN 2020 12:19PM by PIB Chennai

தனிச்சிறப்புமிக்க இந்தப் பல்கலைக்கழகத்தின் 21வது நிறுவனர் நாளை தொடங்கி வைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்துடன் தொடர்புள்ள அனைத்து மருத்துவ மற்றும் அறிவியல் நிபுணர்களையும் பாராட்டுகிறேன்.

மருத்துவம் கற்பித்தல் மற்றும் நடைமுறைகளில் பயிற்சி அளிப்பதில் இவ்வளவு காலமாக நீங்கள் பணியாற்றி வருகிறீர்கள்.

25 ஆண்டுகள் என்பது, இந்தப் பல்கலைக்கழகம் இளமையின் உச்சத்தில் இருப்பதாக அர்த்தம். இன்னும் பெரிதாக சிந்தித்து, இன்னும் சிறப்பாகச் செயல்படுவதற்கான காலம் இது. வரக்கூடிய காலத்தில் சிறந்த செயல்பாட்டில் தொடர்ந்து இந்தப் பல்கலைக்கழகம் புதிய உச்சங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். கோவிட்-19 சூழ்நிலையைத் திறம்படக் கையாள்வதற்கான கர்நாடக அரசின் முயற்சிகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே, சாதாரணமான நேரமாக இருந்தால், கொண்டாட்டங்கள் நிச்சயமாக பெரிய அளவில் இருந்திருக்கும். பெரிய நோய்த் தொற்று இல்லாமல் இருந்திருந்தால், இந்த விசேஷ நாளில் பெங்களூரில் உங்கள் மத்தியில் இருப்பதை நான் விரும்பியிருப்பேன்.

ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மிகப் பெரிய நெருக்கடிகளில் ஒன்றை உலகம் எதிர் கொண்டிருக்கிறது. உலகப் போர்களுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலக்கட்டங்களில் உலகம் மாறியதைப் போல, கோவிட் நோய்த் தாக்குதலுக்கு முந்தையதைவிட,  பிந்தைய காலம் மாறுபட்டதாக இருக்கும்.

நண்பர்களே, இதுபோன்ற சமயத்தில், டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ அலுவலர்கள், அறிவியல் சமூகத்தினரை உலகம் நம்பிக்கை மற்றும் நன்றியுடன் பார்க்கிறது. உங்களிடம் இருந்து குணமாக்கலையும், கவனிப்பையும் உலகம் எதிர்நோக்குகிறது.

நண்பர்களே, கோவிட்-19க்கு எதிராக இந்தியாவின் தைரியமான நடவடிக்கைகளின் வேராக, மருத்துவ சமுதாயத்தினரும், கொரோனாவுக்கு எதிராக முன்களத்தில் நிற்பவர்களும் இருக்கிறார்கள். உண்மையில், டாக்டர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் போர் வீரர்களைப் போன்றவர்கள், சீருடை இல்லாத போர் வீரர்களைப் போன்றவர்களாக உள்ளனர்.  இந்த வைரஸ் கண்ணுக்குத் தெரியாததாக இருக்கலாம். ஆனால் கொரோனாவுக்கு எதிரான வீரர்களான மருத்துவ அலுவலர்கள் மறக்க முடியாதவர்களாக உள்ளனர். கண்ணுக்குத் தெரியாத வைரஸ், மறந்துவிட முடியாத வீரர்களுக்கு இடையிலான போரில், நிச்சயமாக நமது மருத்துவ அலுவலர்கள் வெற்றி பெறுவார்கள்.

நண்பர்களே, முன்பு உலகமயமாக்கல் குறித்த விவாதங்கள் பொருளாதார விஷயங்களில் கவனம் செலுத்தின. இப்போது வளர்ச்சியில் மனிதகுலத்தின் நன்மைகள் என்ற விஷயத்தில் உலகம் கவனத்தைச் செலுத்தியாக வேண்டும்.

சுகாதாரத் துறையில் தேசங்கள் காணும் வளர்ச்சி, முன் எப்போதையும்விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நண்பர்களே, கடந்த ஆறு ஆண்டுகளில், சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவக் கல்வியில் இந்தியா பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது.

நான்கு தூண்களின் மீது நாம் விரிவாக செயலாற்றி வருகிறோம்:

முதலாவது - நோய்த் தடுப்பு சுகாதாரம். யோகா, ஆயுர்வேதம் மற்றும் பொதுவான உடல் தகுதிக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வாழ்க்கை முறை தொடர்பாக ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல் ஆரோக்கிய மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆரோக்கிய சேவையில் முன்னெச்சரிக்கை நோய்த் தடுப்பில், தூய்மை பாரதம் திட்டம் முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளது.

இரண்டாவது அம்சம் - குறைந்த செலவில் ஆரோக்கிய சேவை. உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டமான -ஆயுஷ்மான் பாரத் திட்டம் இந்தியாவுக்குச் சொந்தமானது. இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்குள் இத் திட்டத்தில் ஒரு கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். கிராமங்களில் வாழ்பவர்களும், பெண்களும் தான் இத் திட்டத்தில் அதிகம் பயன் பெற்றுள்ளனர்.

மூன்றாவது தூணாக இருப்பது - வழங்கல் துறையில் மேம்பாடு. நம்முடையதைப் போன்ற பெரிய நாட்டில், சரியான மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மருத்துவக் கல்விக் கட்டமைப்புகளை வைத்திருக்க வேண்டும். நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி அல்லது முதுநிலை மருத்துவக் கல்வி நிலையம் உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்குவதில் நாடு தீவிர முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், எம்.பி.பி.எஸ். படிப்பில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 15 ஆயிரம் இடங்களும் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, ஐந்தாண்டு காலத்தில் வேறு எந்த ஆட்சியிலும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிக்கப் பட்டது கிடையாது. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியதன மூலம், இந்திய மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டு, புதிதாக தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கப் பட்டுள்ளது. மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தி, சர்வதேச அளவில் இணையான அளவுக்கு மாற்றுவதற்கு இது உதவியாக இருக்கும்.

நான்காவது தூணாக இருப்பது - குறித்த இலக்கு நிர்ணயித்து அமல் செய்தல். எழுத்துபூர்வமாக ஒரு சிந்தனையை உருவாக்குவது நல்லதொரு சிந்தனையாக மட்டுமே இருக்கும். நல்ல சிந்தனையை நன்றாக அமல் செய்யும்போது அது மகத்தானதாக மாறுகிறது. எனவே, அமலாக்கம் என்பது மிகவும் முக்கியமானது.

இங்கே, இந்தியாவின் தேசிய அளவிலான சத்துணவுத் திட்டத்தின் வெற்றியை நான் மேன்மைப்படுத்திக் காட்ட விரும்புகிறேன். 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கு வாரத்தின் எல்லா நாட்களும், தினமும் 24 மணி நேரமும் இந்தியா பாடுபட்டு வருகிறது. உலக அளவில் 2030க்குள் இந்த நிலையை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையிலும், அதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே நாம் இந்த இலக்கை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஆண்டு தோறும் தடுப்பூசி போடும் எண்ணிக்கை இந்திர தனுஷ் திட்டத்தின் மூலம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. நண்பர்களே, 50க்கும் மேற்பட்ட மருத்துவம் சார்ந்த மற்றும் சுகாதாரத் தொழில் நிபுணர்களுக்கு கல்வியை விரிவாக்கம் செய்வதற்கு புதிய ஒரு சட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இது நிறைவேற்றப்பட்டால், நாட்டில் மருத்துவம் சார்ந்த அலுவலர்கள் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு விடும். தொழில்திறன் பெற்ற நபர்களை மற்ற நாடுகளுக்கு அளிக்கவும் இது உதவியாக இருக்கும்.

நண்பர்களே, அதிக கலந்துரையாடல் மற்றும் பங்கேற்புக்கு மூன்று விஷயங்களை முன்வைக்க நான் விரும்புகிறேன்.

டெலி மருத்துவத்தில் முன்னேற்றங்கள் என்பது முதலாவது விஷயம். பெரிய அளவில் டெலி மருத்துவத்தை பிரபலம் ஆக்குவதற்கு புதிய மாதிரிகளை நம்மால் உருவாக்க முடியுமா?

இரண்டாவது, சுகாதாரத் துறையில் `மேக் இன் இந்தியா' முயற்சிகள். ஆரம்பத்தில் கிடைத்துள்ள ஆதாயங்கள் என்னைப் பரந்த நோக்கம் கொண்டவனாக ஆக்கியுள்ளது. தனி நபர் பாதுகப்புக் கவச உடைகளை உள்நாட்டிலேயே நமது உற்பத்தியாளர்கள் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். கோவிட் நோய்த் தாக்குதலுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அவர்கள் சுமார் 1 கோடி பிபிஇகளை வழங்கியுள்ளனர். அதேபோல, `மேக் இன் இந்தியா' மூலம் தயாரித்த 1.20 கோடி என்-95 முகக் கவச உறைகளை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளோம்.

மூன்றாவது விஷயம், ஆரோக்கியமான சமுதாயத்திற்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வசதிகளைப் பயன்படுத்துவது. உங்கள் கைபேசிகளில் ஆரோக்கியசேது செயலியை பதிவிறக்கம் செய்திருப்பீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட 12 கோடி பேர் இதைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இது மிகவும் உதவியாக உள்ளது.

நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஒரு விஷயத்தை நான் அறிந்திருக்கிறேன். கூட்டமாகச் சேர்ந்து யோசிக்கும் நிலை காரணமாக, முன்களத்தில் நின்று போராடும் டாக்டர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளர்கள் வன்முறைக்கு ஆளாகும் நிலை உள்ளது. வன்முறை, அத்துமீறுதல், மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த வடிவிலான வன்முறையில் இருந்தும் உங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முன்களத்தில் பணியாற்றுபவர்களுக்கு ரூ.50 லட்சத்திற்கான காப்பீட்டு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களே, கடந்த 25 ஆண்டுகளில் இந்தப் பல்கலைக்கழகத்தின் பயன்தரக் கூடிய பயணம் காரணமாக, ஆயிரக்கணக்கான மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த அலுவலர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உதவி தேவைப்படுவோருக்கும்  ஏழைகளுக்கும் நெருக்கடியான நேரங்களில் சேவைகள் செய்து வருகின்றனர். செம்மையான தரமும், நடத்தையும் கொண்ட சுகாதார அலுவலர்களை இந்தப் பல்கலைக்கழகம் தொடர்ந்து உருவாக்கி, மாநிலத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நன்றி. உங்களுக்கு மிக்க நன்றி.


(Release ID: 1628311) Visitor Counter : 341