மத்திய அமைச்சரவை தலைமைச் செயலகம்

கோவிட் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட சென்னை உட்பட 13 நகரங்களின் நிலவரம் பற்றி மத்திய அமைச்சரவை செயலாளர் ஆய்வு

Posted On: 28 MAY 2020 3:50PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 13 நகரங்களின் நிலவரம் குறித்து மாநகராட்சி ஆணையாளர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் ஆகியோருடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். சம்மந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த 13 நகரங்கள் கொரோனா வைரஸால் அதிகம் பாதித்த இடங்களாக கருதப்படுவதாலும், நாட்டின் கோவிட் நோயாளிகளில் 70 சதவீதம் பேர் இங்கு இருப்பதாலும் , இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கவனம் செலுத்தப்பட்ட 13 நகரங்களில் மும்பை, சென்னை, தில்லி/புதுதில்லி, அகமதாபாத், தானே, புனே, ஐதராபாத், கொல்கத்தா, ஹவுரா, இந்தூர்(மத்தியப் பிரதேசம்), ஜெய்ப்பூர், ஜோத்பூர், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர்(தமிழ்நாடு) ஆகியவை உள்ளன.

கோவிட்-19 நோயாளிகளை நிர்வகிப்பதில் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

நகரங்களில் பின்பற்ற வேண்டிய கோவிட்-19 நிர்வாக விதிமுறைகளை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது.

நோய்த்தொற்று உறுதி வீதம், இறப்பு வீதம், இரட்டிப்பு வீதம், 10 லட்சம் பேருக்கு எத்தனை பேர் பரிசோதிக்கப்படுகின்றனர் போன்ற அளவீடுகள், அதிக அபாய காரணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.

கோவிட் நோயாளிகளை இணைப்பது, அவர்களின் தொடர்புகள் மற்றும் பரவல் இடங்கள் போன்ற காரணிகள் அடிப்படையில் கட்டுப்பாட்டு மண்டலங்களை வரையறுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் தேவைக்கேற்ப கட்டுப்பாட்டு மண்டலங்களை நன்கு வரையறுக்கப்பட்ட சுற்றளவுடன் எல்லை நிர்ணயித்து, முடக்க கால விதிமுறைகளை அமல்படுத்த முடியும்.

குடியிருப்பு காலனிகள், மாநகராட்சி வார்டுகள் அல்லது காவல் நிலைய பகுதிகள், மாநகராட்சி மண்டலங்கள், நகரங்கள் என தேவைக்கேற்க கட்டுப்பாட்டு மண்டலங்களை மாநகராட்சிகளால்  தீர்மானிக்க முடியும்.

பாதிப்பு பகுதிகளை மாவட்ட நிர்வாகத்தினர், உள்ளாட்சி நிர்வாகத்தினர் தொழில்நுட்ப தகவல்களுடன் தகுந்தபடி வரையறுக்க வேண்டும் என நகரங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

*****



(Release ID: 1627441) Visitor Counter : 362