ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

தேசிய மருந்துப்பொருள் விலை நிர்ணய ஆணையத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து என்-95 முகக்கவசங்களின் விலையை இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் குறைத்து வருகின்றனர்.

Posted On: 25 MAY 2020 5:28PM by PIB Chennai

என்-95 முகக்கவசங்களை அத்தியாவசியப் பொருள் என்று 1955-ஆம் ஆண்டின் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் படி மத்திய அரசு 2020 மார்ச் மாதம் 13-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, அத்தியாவசியப் பொருளைப் பதுக்குவதோ, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதோ இச்சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைத் தடுக்க, தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-இன் படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு இணங்க, தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய ஆணையம் (National Pharmaceutical Pricing Authority - NPPA) அறுவை சிகிச்சை மற்றும் பாதுகாப்பு முகக்கவசங்கள், கை சுத்தப்படுத்தும் கிருமிநாசினிகள், கையுறைகள் ஆகியவற்றை போதிய அளவுக்கு இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மார்ச் 13-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, அவற்றின் விலைகள் அதிகபட்ச சில்லரை விலைக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் என்-95 முகக்கவசங்கள் பதுக்கப்படுவதாகவும், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள், உணவு மற்றும் மருந்து நிர்வாகங்களுக்கு தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சில மாநில மருந்துக் கட்டுப்பாடு மற்றும் உணவு, மருந்து நிர்வாக அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டதாகவும், அத்தியாவசியப் பொருளைப் பதுக்கி,  கள்ளச்சந்தையில் விற்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்  செய்திகள் வந்துள்ளன. பம்பாய் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. என்-95 முகக்கவசங்களுக்கு அரசு விலை நிர்ணயிக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் என்-95 முகக்கவசங்களை போதிய அளவு இருப்பு வைப்பதுடன், அவை தடையின்றிக் கிடைப்பதையும் உறுதி செய்ய மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக, அரசு பெருமளவிலான என்-95 முகக்கவசங்களை உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து குறைந்த விலைக்கு நேரடியாகக் கொள்முதல் செய்து வருகிறது. அதிக விலைக்கு என்-95 முகக்கவசங்கள் விற்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய ஆணையம் தலையிட்டு விலையைக் குறைத்துள்ளது. நாட்டில், கட்டுப்படியான விலையில் என்-95 முகக்கவசங்கள் கிடைக்கச் செய்யும் வகையில், என்பிபிஏ அனைத்து  உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு மே 21-ஆம் தேதி அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது. அரசு அல்லாத கொள்முதல்களுக்கு விலையில் மாற்றம் இல்லாமல், நியாயமான விலைக்கு விற்பதைப் பராமரிக்குமாறு அது அறிவுறுத்தியுள்ளது. மேலும், என்-95 முகக்கவசங்களின் விலையை நிர்ணயிக்குமாறும், தேவைக்கும், விநியோகத்துக்கும் இடைவெளி அதிகம் இருப்பதைக் குறிப்பிட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு உயர்நீதிமன்றத்தில் என்பிபிஏ பதில் அளித்துள்ளது. விலைகளை தாங்களாகவே முன்வந்து குறைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு என்பிபிஏ அறிவுரை வழங்கியுள்ளது.

இதற்கிடையே, டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில், தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய ஆணையம் அங்கீகரித்த விலை, அரசு கொள்முதல் விலையை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என வெளியான செய்தியை என்பிபிஏ மறுத்துள்ளது. அரசின் கொள்முதல் விலை என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது, தவறான, மோசடியான, திசை திருப்பும் ரீதியானதாகும்.

இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, பெரும் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் என்-95 முகக்கவசங்களின் விலையை 47 சதவீத அளவுக்குக் கணிசமாகக் குறைத்துள்ளனர். இதனால், நாட்டில் என்-95 முகக்கவசங்கள் குறைந்த விலையில் போதிய அளவில் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. அரசின் அறிவுரைக்கு ஏற்பவும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், இதர உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்களும் என்-95 முகக்கவசங்களின் விலையைக் குறைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • தேசிய மருந்துப்பொருள் விலை ஆணையம், மருந்துப்பொருள்துறை, ரசாயனம் மற்றும் உர அமைச்சகம், மத்திய அரசு.

 



(Release ID: 1626799) Visitor Counter : 258