நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

யாரும் பசியில் தவிக்காத வகையில், பயனாளிகளுக்கு உணவு தானியங்கள் விநியோகம் செய்வதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்: திரு. ராம் விலாஸ் பஸ்வான்

Posted On: 22 MAY 2020 5:37PM by PIB Chennai

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு, பொது விநியோக அமைச்சர்கள் மற்றும் உணவுத்துறை செயலாளர்களிடம், காணொளி மூலம் ஆய்வுக் கூட்டம் ஒன்றை மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு. ராம் விலாஸ் பஸ்வான் இன்று நடத்தினார். கொவிட்-19 பெருந்தொற்றின் போது உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் முக்கியத் திட்டங்களின் அமல்படுத்துதல் குறித்து திரு.பஸ்வான் ஆய்வு செய்தார். சுய-சார்புத் தொகுப்பின் கீழும், பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டத்தின் கீழும் மத்திய அரசு, இந்திய உணவுக் கழகம் மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு ஆகியவற்றால் வழங்கப்படும் உணவு தானியங்கள் மற்றும் பருப்புகள் உதவிக்காக பிரதமருக்கும், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சருக்கும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்துக் கொண்ட உணவு அமைச்சர்கள் நன்றி தெரிவித்தனர். சரியான நேரத்தில் விமானம், கப்பல் மற்றும் ரயில்களின் மூலம் உணவு தானியங்கள் வழங்கியதற்காக மலைப் பகுதிகளில் இருக்கும் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் தங்களது நன்றியை தெரிவித்தன.

 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்து கொண்ட உணவு  அமைச்சர்கள் மற்றும் உணவுத்துறை செயலாளர்களிடம் பேசிய திரு. பஸ்வான், யாரும் பசியில் தவிக்காத வகையில், உணவு தானியங்களை  விநியோகம் செய்வதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 'உம்-பன்' புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள், புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்று அமைச்சர் கோரினார். உணவு விநியோகத்தின் அச்சாணியாக இந்திய உணவுக் கழகம் திகழ்வதாகவும்விமானம், கப்பல் மற்றும் ரயில்களின் மூலம் உணவு தானியங்கள் நாடு முழுவதும் விநியோகிக்கப் படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உணவு தானியங்கள் மற்றும் பருப்புகள் விநியோகத்தைக் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் உள்ள பிரத்யேகமான பிரச்சினைகள், வெற்றிகள் மற்றும் தடைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தின் அமல்படுத்துதல் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

 

சுய-சார்பு இந்தியா தொகுப்பு

 

இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக எட்டு லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமை/அரிசியையும், 39,000 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகளையும் சுய-சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஏற்கனவே வழங்கியுள்ளது. எட்டு கோடி இடம் பெயர்ந்தோர்/சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு, ஒரு நபருக்கு மாதத்துக்கு 5 கிலோ கோதுமை/அரசியையும், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பொது விநியோகத் திட்டத்தின் கீழோ அல்லது தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழோ வராத 1.96 கோடி இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு, மாதத்துக்கு தலா ஒரு கிலோ பருப்புகளை இரண்டு மாதங்களுக்கும் மத்திய அரசு வழங்கி வருகிறது. உணவு தானிய விநியோகம் 15 ஜூன், 2020க்குள் உணவு தானிய விநியோகம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுய-சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உணவு தானியங்களை 17 மாநிலங்கள் ஏற்கனவே எடுத்துக் கொண்டு விட்டதாகவும், ஹரியாணா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் உணவு தானிய விநியோகத்தை இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் திரு. பஸ்வான் தெரிவித்தார். மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து, வியபாரிகளின் தரகுத் தொகை உட்பட இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவான ரூ 3,500 கோடியையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அவர் கூறினார். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பயனாளிகள் பட்டியலை முன்கூட்டியே வழங்க வேண்டாம். உணவு தானியங்களின் விநியோக அறிக்கையை 15 ஜூலை, 2020க்குள் அனுப்புமாறு அவைக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

 

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம்

 

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டத்தின் கீழ், நேரடிப் பலன் பரிமாற்ற முறையில் இணைந்துள்ள யூனியன் பிரதேசங்கள் உட்பட அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 80 கோடி தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் பயனாளிகளுக்கு, ஏப்ரல் முதல் ஜூன் 2020 வரையிலான மூன்று மாதக் காலத்துக்குக் கூடுதல் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

ஏப்ரல் 2020க்கான உணவு தானியங்களில் 90 சதவீதம் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களாலும் (பஞ்சாப், சிக்கிம், தில்லி, மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மட்டும் ஏப்ரலுக்கான விநியோகம் 75 சதவீதத்துக்கும் கீழே) பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு விட்டதாக திரு. பஸ்வான் கூறினார். நடப்பு மாதத்தில் கிட்டத்தட்ட 61 சதவீதம் உணவு தானியங்கள் மாநிலங்களால் விநியோகிக்கப்பட்டுள்ளன. தில்லி, மேற்கு வங்கம், மணிப்பூர், கேரளா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் மே மாதத்துக்கான உணவு தானியங்கள் விநியோகத்தை ஆரம்பிக்கவில்லை, அல்லது 10 சதவீதத்துக்கும் கீழ் விநியோகம் உள்ளது.

 

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டத்தின் கீழ் பருப்பு விநியோகம்

 

அடுத்த மூன்று மாதங்களுக்கு பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டத்துக்கான மொத்த பருப்புத் தேவை 5.87 லட்சம் மெட்ரிக் டன்களாகும். 3.02  லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகளை மாநிலங்கள் வாங்கியுள்ளன, மற்றும் 21 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் உள்ள பயனாளிகளுக்கு சுமார் 1.27 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் நிதிச் சுமையான ரூ 5,000 கோடி மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருப்பதாக திரு. பஸ்வான் தெரிவித்தார்.

 

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம்

 

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாதம் தோறும் ஒதுக்கப்படும் உணவு தானியங்களில் 93 சதவீதம் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டு விட்டதாகவும், மே மாதத்துக்கான உணவு தானிய ஒதுக்கீட்டில் 75 சதவீதம் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டதாகவும் திரு. பஸ்வான் தெரிவித்தார்.

 

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டம்

 

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தின் கீழ், உயிரியளவியல் (பயோமெட்ரிக்) சரிபார்ப்பு முறைப்படி ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் இணைந்துள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் எந்த நியாய விலைக் கடையில் வேண்டுமானாலும் பொது விநியோகத் திட்டப் பயனாளிகள் தங்கள் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். மே 1, 2020இன் படி, ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் 17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன. ஒடிசா, நாகாலாந்து மற்றும் மிசோராம் உள்ளிட்ட மூன்று மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஜூன் 2020லும், உத்திரகாண்ட், சிக்கிம் மற்றும் மணிப்பூர் ஆகியவை ஆகஸ்டு 2020லும் இந்த இணையம் சார்ந்த தளத்தில் இணைந்து, இதில் உள்ள மொத்த  மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கையை 23 ஆக உயர்த்தும். அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களையும் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் 31 மார்ச் 2021க்குள் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக திரு. பஸ்வான் தெரிவித்தார்.

 

 உணவு மானியம்

 

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு 01 ஜனவரி, 2020 முதல் இன்று வரை ரூ 28,847 கோடி மானியம் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளதாக திரு. பஸ்வான் கூறினார். கடந்த ஆண்டு இதே சமயத்தில் வழங்கப்பட்ட ரூ.12,356 கோடி மானியத்தை விட இது இரு மடங்குக்கும் அதிகமாகும். உணவு தானியக் கொள்முதலைப் பரவலாக்குவதில்  மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு தனது துறை முழு ஆதரவை அளிப்பதாக அவர் கூறினார்.  

 

**
 


(Release ID: 1626357) Visitor Counter : 285